சாலிம் அலி பிறந்த மாதம்: வட்டார மொழிக் கையேடுகளின் அவசியம்

சாலிம் அலி பிறந்த மாதம்: வட்டார மொழிக் கையேடுகளின் அவசியம்
Updated on
2 min read

நான் முதன்முதலில் திருவண்ணாமலைக்கு 4 டிசம்பர் 2009இல் சென்றிருந்தேன். இயற்கை பாதுகாப்பு, இயற்கைக் கல்வி, மாற்றுக் கல்வி முதலிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் ‘தி பாரஸ்ட் வே ட்ரஸ்ட் (The Forest Way Trust)’ அமைப்பின் கோவிந்தா, லீலா, சிவக்குமார், அருண், அவர்களது குழுவினரைச் சந்திக்கும் வாய்ப்பு அப்போதுதான் வாய்த்தது.

அருணகிரி பூங்காவில், அவர்கள் பராமரிப்பில் இயற்கையாக வளரும் மரக்கன்று களின் நாற்றுப்பண்ணையைக் கண்டேன். திருவண்ணாமலை ‘சீசன்’ நேரத்தில் அங்கு வருவோரால் செயற்கையாகவும், விபத்தாகவும் ஏற்படும் தீயை அணைக்கும் தன்னார்வலர் களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பூங்காவில் திருவண்ணாமலைப் பகுதியில் பொதுவாகத் தென்படும் பல பாலூட்டிகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், மேலும் பல இயற்கையின் விந்தைகள் (அத்திப் பழத்தின் உள்ளே வாழும் அத்திக் குளவியின் வாழ்க்கை முறையை விளக்கும் ஓவியங்கள் போன்ற) கடப்பா கல்லில் வரையப்பட்டிருந்ததை வியப்புடன் பார்த்து ரசித்தேன். இவை அனைத்தும் அந்தக் குழுவில் ஒருவரான ஓவியரும், பறவை ஆர்வலருமான சிவக்குமார் தீட்டியவை.

பின்னர், மாற்றுக் கல்வியை (Alternative Education) அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டுவரும் ‘மருதம் பண்ணைப் பள்ளிக்கு'ச் (Marudam Farm School) சென்றேன். அங்கு மரத்தில் ஏறும், மண்ணில் விளையாடும், சாப்பிட்ட தட்டை தானே கழுவி வைக்கும் மாணவர்களைக் கண்டேன். அன்று கோவிந்தா, சிவக்குமாருடன் அப்பகுதியில் உள்ள பறவைகளைப் பார்த்ததும், ஒரு சிறிய குளத்தில் பல வகையான தட்டான்களையும், ஊசித்தட்டான்களையும் பார்த்து ரசித்ததும் இன்றும் நினைவில் உள்ளன.

பறவைத் தொடர்பு: எங்களை அவ்வப்போது மின்னஞ்சல் மூலமும், கைப்பேசியின் மூலமும் தொடர்பில் இருக்கச் செய்பவை பறவைகளே! பொங்கல் பறவைக் கணக்கெடுப்பு, ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு, தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் திருவண்ணாமலை பகுதிகளில் பார்க்கப்பட்ட பறவைகள் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள், அவற்றின் அடையாளம் காணும் முயற்சி போன்ற பறவைகள் சார்ந்த செயல்பாடுகள் எங்களை மீண்டும் ஒன்றுசேர்த்தன. பறவைகள் குறித்த (வகை, எண்ணிக்கை போன்ற) தகவல்களை eBird போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களில் பதிவுசெய்துவருகிறார்கள். இப்படிப் பதிவுசெய்யப்படும் பறவைகள் குறித்த தகவல்கள் அந்தப் பறவைகளுக்கும், அவற்றின் வாழிடத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. இந்தக் குழுவினர் பறவைகளைப் பார்த்து, அவற்றைப் பதிவுசெய்வதோடு மட்டுமே நின்றுவிடவில்லை. அப்பகுதிக்குச் சொந்தமான மரங்களை மட்டுமே வளர்த்து, சீரழிந்த காட்டுப்பகுதிகளை மீளமைத்து வருகின்றனர். இதனால், பல வகையான உயிரினங்களுக் கான வாழிடங்களை மீளமைத்துத் தந்திருக்கின்றனர். இதன் விளைவாகப் பலவிதமான பறவைகளும் இப்பகுதிக்கு மீண்டும் வர ஆரம்பித்திருக்கின்றன.

மாவட்டக் கையேடு: சூழலியலில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும், அவற்றை முறையாகப் பதிவுசெய்வதும் பல்லுயிர்ப் பாதுகாப்பில் ஒரு முக்கியமான அங்கம். நாம் வாழும் இடத்தைச் சுற்றி என்ன வகையான தாவரங்கள், உயிரினங்கள் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிந்துவைத்திருப்பது அவசியம். இந்த அமைப்பினர் திருவண்ணா மலை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (மலைப்பகுதியிலிருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளில்) தென்படும் பல வகையான பறவைகளைத் தொடர்ந்து கண்காணித்து, ஆவணப்படுத்தி 'Birds of Tiruvannamalai' என்னும் ஒரு அருமையான கையேடாக 2018இல் வெளியிடப்பட்டது. அழகிய படங்களுடனும் ஓவியங்களுடனும் மறுசுழற்சி செய்யப்படத்தக்க தாளில் அச்சிடப்பட்டிருந்தது இந்தப் பறவைக் கையேடு. ஆங்கிலக் களக் கையேட்டில் 208 வகையான பறவைகளைப் பற்றிய விவரங்கள் உள்ளன. அதற்குப் பின் மேலும் சில பறவை வகைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன் முதலில் பார்த்துப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள தமிழ் கையேட்டில் சில பறவைகள் அப்படிச் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே திருவண்ணாமலை மாவட்ட அளவில் தென்படும் 254 வகையான பறவைகளைப் பற்றிய விரிவான குறிப்புகள் அடங்கிய ஒரு களக் கையேடு வெளியாகியுள்ளது.

கடமையும் பொறுப்பும்: இந்தக் கையேட்டின் ஆசிரியர்களில் ஒருவரான ஓவியர் சிவக்குமார் திருவண்ணா மலையின் பல இடங்களுக்குச் சென்று பறவைகளைப் பார்த்துப் பதிவுசெய்ததோடு மட்டுமல்லாமல், மற்றொரு அருமையான வேலையையும் செய்துகொண்டிருக்கிறார். அது, திருவண்ணாமலை மாவட்டப் பகுதிகளில் உள்ள பறவைகளின் வட்டாரப் பெயர்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். Indian Pitta என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பறவைக்கு, தமிழ்நாட்டில் ஆறுமணிக் குருவி என்ற பெயர் உள்ளது. எனினும் இதற்குத் தோட்டக் கள்ளன், காச்சுள், காசிக்கட்டி குருவி, பொன்னுத் தொட்டான், பொன்னுக் குருவி, காசுக் கருப்பட்டி என இடத்திற்கு இடம் ஒவ்வொரு பெயர் உண்டு. முறையாக ஆய்வுசெய்தால் இந்தப் பறவைக்கே இன்னும் பல பெயர்கள் இருப்பதைக் கண்டறிய முடியும். திருவண்ணாமலை பகுதியில் வழங்கப்படும் பறவைகளின் சில பெயர்களையும் (கடா நாரை – pelican, தித்தித்தான் குருவி – lapwing, கப்புகாடை – nightjar) இந்தக் கையேட்டில் காணலாம். இதுபோல பறவைகளின் பல்வேறு வட்டாரப் பெயர்களை ஆவணப்படுத்துவது பறவை ஆர்வலர்களின் மிக முக்கியமான கடமை. இந்திய அளவில், மாநில அளவில் பல பறவைக் கையேடுகள் இருந்தாலும் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் பறவைகளின் பட்டியலும், அவை அப்பகுதிகளில் எங்கெங்கு, எவ்விதமான வாழிடங்களில் தென்படுகின்றன என்பது போன்ற விவரங்கள் அடங்கிய கையேடுகள், பட்டியல்கள் மிகவும் அவசியம். அதுவும் வட்டார மொழிகளிலேயே இருப்பது அப்பகுதி மக்களிடையே பறவைகளைப் பற்றியும், அவற்றின் வாழிடம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த உதவும். இந்த விழிப்புணர்வால்தான், பறவைகளின் வாயிலாக இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணமும், கரிசனமும் மேலோங்கும். - ப. ஜெகநாதன் கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் , தொடர்புக்கு: jegan@ncf-india.org

திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் – அறிமுகக் களக் கையேடு,
தி பாரஸ்ட் வே அமைப்பு, தொடர்புக்கு: arunachalaforestway@gmail.com,
கூடுதலாக அறிய: www.theforestway.org
Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in