

நாம் ஊர்ப்புறத்தில் வசிப்பவராக இருந்தால், நல்லவேளை தூசி இல்லாத பகுதிகளில் வசிக்கிறோம் என்று நினைப்போம். அந்தக் கற்பனையை இடையூறு செய்வதற்கு மன்னிக்கவும். என்ன செய்வது, ஒரு சிற்றூரில் ஓராண்டுக்குச் சதுர கிலோமீட்டருக்கு 19 டன் தூசி படிகிறதே! அதுவே நகரம் என்றால் 35 டன் படிகிறது. அதிலும் தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் என்றால் 600 டன் வரை படிகிறது. அத்துடன் அங்கிருக்கும் வாகனப் புகையால் 358 டன் வரை தூசு படிகிறது.
அதிர்ச்சியின் அளவை சற்று குறைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அடுத்த அதிர்ச்சி இது. இந்தக் கணக்கு ரொம்பப் பழையது. 1981ஆம் ஆண்டில் அறிஞர் பி.எஸ்.மணி வழங்கிய கணக்கு. நாற்பதாண்டுகள் கழிந்த நிலையில் இன்றைய கணக்கைத் தேடிப் பிடிப்பது எளிதே. ஆனால், ஏற்கெனவே உடல்நலம் கெட்டுள்ள நமக்கு மனநலமும் பாதிக்கப்படலாம் என்பதால் பெருந்தன்மையோடு அதை விட்டுவிடுவோம்.
மாற்று வழி: நகரங்களில் தூசி அதிகம் என்று தனியே சொல்ல வேண்டியதில்லை. இருப்பினும் அதற்கும் இயற்கை ஒரு மாற்று வழியை வைத்துள்ளது. நகரின் சாலையோரங்களில் மரங்கள் இருந்தால், அவை தூசியில் எழுபது விழுக்காட்டைத் தம் இலைகளின் மீது ஈர்த்து வைத்துக்கொள்கின்றன. அதுவே நல்ல சொரசொரப்பான இலைகளுள்ள மரங்கள் எனில் அதிக அளவில் தூசியைத் தக்க வைத்துக்கொள்ளும். மரங்களில் படியும் அத்தூசி பின்னர் மழை பெய்கையில் கரைந்து வெளியேறிவிடும். ஒரு மரம் சுமாரான அடர்த்தியுடன் இருந்தாலே அது ஆண்டுக்கு ஒரு டன் தூசியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்பது கணக்கு. எனில் அத்தனை மரங்களின் சேவையையும் கணக்கிட்டுக் கொள்ளலாம். அத்தகைய அரும்பணியை மரங்கள் செய்கின்றன. ஆனால், சாலை விரிவாக்கம் என்றால் முதல் களப் பலி அம்மரங்கள்தான்.
அதிபரின் அறியாமை: அமெரிக்க ஊடகங்களில் அதன் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் (ஜூனியர்) குறித்து நிறைய நகைச்சுவைகள் கூறப்படுவது வழக்கம். கீழ்க்கண்ட நிகழ்வு அத்தகைய நகைச்சுவைகளுள் ஒன்றா அல்லது உண்மை நிகழ்வா என்பது தெரியவில்லை. ஏனென்றால், அவருடைய நடத்தையும் பேச்சுமே கேலிக்குரியவையாகவே இருக்கும். ஒருமுறை அதிபர் புஷ் ஓர் உயரமான மலைப்பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரே பனிமூட்டமாக இருந்திருக்கிறது. அதைக் கண்டு வியந்த அவர், “What a lovely fog!” (என்ன வொரு அழகிய மூடுபனி) என்றாராம். அதற்கு, அவருடைய உதவியாளர், “Mr. President, it’s not fog, it’s smog” என்றாராம். அதாவது, மூடுபனியல்ல அது ‘புகைப்பனி’ என்றாராம். புகைப்பனி என்பது செயற்கையாக உருவாகிய மாசு நிறைந்த புகைப்படலம். எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் பனிமூட்டமும் புகையும் சேர்ந்தால் அதுதான் ஸ்மாக். இயற்கையான மூடுபனிக்கும் சூழலியல் மாசுபாட்டால் உருவான புகைப்பனிக்கும் வேறுபாடு தெரியாதவர் அதிபர் புஷ் என்பது அதன் பொருள். அல்லது தெரிந்தே தெரியாததுபோல நடிப்பவர். பல நாட்டின் தலைவர்களும் இப்படித்தான் இருக்கின்றனர்.
ஆயிரக்கணக்கில் பலி: புகைப்பனி என்பது இன்று நேற்று உருவான ஒரு நிகழ்வல்ல. ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன்னரே அது தொடங்கிவிட்டது. 1952 டிசம்பர் 5ஆம் தேதி லண்டன் மாநகருக்கு ஒரு மறக்க முடியாத நாள். அன்று லண்டனின் பகல், இரவாக மாறியது. அந்த அளவுக்கு எங்கும் புகைப்பனி கவிந்தது. மக்கள் கார்களைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு வீடுகளுக்கு ஓடினார்கள். ரயில் போன்ற பொதுபோக்குவரத்து வசதிகளும் நிறுத்தப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இருப்பினும், புகைப்பனியில் 4,000 பேர் வரை மாண்டனர். அதைத் தொடர்ந்த மாதங்களிலும் அதன் பாதிப்பால் மேலும் 8,000 பேர் வரை இறந்து போயினர். லண்டன் மாநகரம் ஒரு குளிர்ப்பகுதி என்பதால் பொதுவாகவே நிலமட்டத்தில் குளிர்ந்த காற்று நிலவுவது வழக்கம். அதுவே, வெப்ப மண்டல நாடுகளாக இருந்தால் காற்று எளிதில் சூடாகி மேலே சென்றுவிடும். லண்டனில், குறிப்பிட்ட அந்த நாளன்று நிலமட்டக் குளிர்காற்று அதிகமாக இருந்திருக்கிறது. அது மட்டுமன்றி, அந்நிகழ்வுக்கு அனல்மின் நிலையங்களே முதன்மை காரணமாக அமைந்தது. அங்குள்ள அனல்மின் நிலையங்களில் கந்தகம் கலந்த தரங்குறைந்த நிலக்கரி பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
கந்தக ஆபத்து: கந்தகம் காற்றில் கலந்ததால் உயிரிழப்பு வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு ஆலையாக இருந்தாலும் கந்தகம் கலந்த புகை வெளியாவதற்கு சூழலியலாளர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு இதுவே காரணம். ஐ.நா. அவை அனுமதித்துள்ள பாதுகாப்பான அளவீட்டைக் காட்டிலும் காற்றில் அதிக அளவில் சல்பர் டைஆக்சைடை பல ஆலைகள் வெளியிட்டு வருகின்றன. இந்தச் சுற்றுச்சூழல் சிக்கலால்தான் இங்கிலாந்தில் 1956லும் அமெரிக்காவில் 1963லும் சிறப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனாலும், நிலைமை சீரடைந்ததாகத் தெரியவில்லை. லண்டன் நகரில் மீண்டும் 1985 டிசம்பர் மாதத்தில் ஐந்து நாட்கள் தொடர்ந்து புகைப்பனி நிலவவே சுமார் நான்காயிரம் பேர் வரை இறந்தனர். - கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர், தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com