

1988ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய வனக்கொள்கையின் படி ஒரு மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 33% பசுமை போர்வை இருக்கவேண்டும். ஆனால், நமது மாநிலத்தில் 23.98% சதவீதம் தான் பசுமை போர்வை இருக்கிறது. அதிலும் சிவகங்கை மாவட்டம் 8 சதவீதமே பசுமை போர்வையைக் கொண்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மாவட்ட கிரீன் கமிட்டி மூலமாக மாவட்ட ஆட்சியர் திரு மதுசூதன ரெட்டி தொடர்ந்து எடுத்து வருகிறார். இதன் நீட்சியாக, அக்டோபர் 14 அன்று 50,000 மரக்கன்றுகளை இலக்காகக் கொண்டு சிவகங்கை பசுமை திருவிழா நடத்தப்பட்டது. காரைக்குடி மருத்துவர்களால் நடத்தப்பட்ட அந்த திருவிழாவில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் அதுவும் இருபதே நிமிடங்களில் 25,350 மரக்கன்றுகள் நடப்பட்டன.
பசுமை திருவிழா
காரைக்குடியில் செயல்படும் இந்திய மருத்துவர் சங்கம் 50,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக்கொண்டு சென்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி இதற்கு முழு ஆதரவு தந்ததுடன் "பசுமை திருவிழா" என்று பெயர் சூட்டி அதற்கென தனி அதிகாரியாகத் திரு. திருப்பதி ராஜனை (BDO) நியமித்தார். மேலும், மாவட்டந்தோறும் நடக்கும் புத்தகத்திருவிழா போல் சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பசுமை திருவிழா நடத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.
மரக்கன்றுகள் சேகரிப்பு
பசுமை திருவிழாவுக்கு என இந்திய மருத்துவ சங்கத்தின் காரைக்குடி கிளையின் சார்பில் தனி குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவில் மருத்துவர் குமரேசன், மருத்துவர் காமாட்சி சந்திரன், மருத்துவர் பாலாஜி, மருத்துவர் மணிவண்ணன், மருத்துவர் திருப்பதி, மருத்துவர் சந்திரமோகன் உள்ளிட்டோர் இடம்பெற்றனர். பசுமை திருவிழாவை மாவட்ட நிர்வாகத்துடன் ஒன்றிணைக்கும் பொறுப்பை அந்தக் குழு மேற்கொண்டதுடன், நன்கொடையாளர்களிடமிருந்து மரக்கன்றுகளையும் சேகரிக்கத் தொடங்கியது. சிறு விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உணவளிக்கும் பழ மரங்களுக்கும் நமது நாட்டின் மரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. அயல் மரங்கள் முடிந்த அளவு தவிர்க்கப்பட்டன. 50,000 மரக்கன்றுகளை ஓரிடத்தில் சேர்த்து வைக்க இரண்டு மாதம் ஆனது.
கல்வி வளாகங்களில் மரக்கன்றுகள்
பள்ளி கல்லூரி வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டால்தான் மரங்கள் பாதுகாப்புடன் வளரும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. பசுமை திருவிழாவை மக்களிடம் கொண்டு சேர்க்கச் சிவகங்கை மாவட்டத்தின் காளையார் கோவிலில் உள்ள அரசுப் பள்ளியில் மாண்புமிகு சட்டமன்ற சபாநாயகர் திரு அப்பாவு, அமைச்சர் திரு பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு மரங்கள் நட்டு விழாவை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
பசுமை திருவிழாவில் பொதுமக்களையும் ஆர்வமுடன் பங்கேற்க புதிய பேருந்து நிலையம் அருகில் மேடை அமைக்கப்பட்டு தினமும் ஒரு முக்கிய நபர் மூலம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு பொது மக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாகத் தரப்பட்டன. பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கிராமங்களுக்கும் மரக்கன்றுகள் அனுப்பப்பட்டன. எல்லா இடங்களிலும் மரக்கன்றுகள் கொண்டு சேர்க்கப்பட்டதை இந்திய மருத்துவ சங்கத்தின் காரைக்குடி கிளையின் சார்பில் உருவாக்கப்பட்ட தனி குழு கண்காணித்தது.
ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்
விழாவின் முக்கிய திட்டம் , ஒரே நேரத்தில் மரக்கன்றுகளை நட்டு அதை ஜிபிஎஸ் பதிவோடு குறிப்பிட்ட எண்ணிற்கு வாட்ஸ்அப் அனுப்புவது. இந்தத் திட்டத்தின் படி, காலை 11 மணிக்கு மரக்கன்றுகளை நட ஆரம்பித்து அதை ஒளிப்படமெடுத்து அனுப்ப ஆரம்பித்தனர். இருபதே நிமிடத்தில் ஜிபிஸ் இருப்பிட பதிவோடு 25,350 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதை அவர்கள் கின்னஸ் சாதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
முன்மாதிரியான முன்னெடுப்பு
’பசுமை தமிழ்நாடு’ திட்டத்துக்கு அரசாங்கம் வைத்திருக்கும் இலக்கு 265 கோடி மரக்கன்றுகள். அதையும் பத்து ஆண்டுகளில் நட வேண்டும். தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்திற்குச் சிவகங்கை மாவட்டத்தின் பசுமை திருவிழா வலு சேர்த்துவருகிறது. முக்கியமாக, இந்தப் பசுமை திருவிழா தமிழ்நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முன்னெடுப்பாக இருக்கிறது.