அலையாத்திக் காடுகள் இயற்கை அரண்

அலையாத்திக் காடுகள் இயற்கை அரண்
Updated on
3 min read

பண்டைத் தமிழ் இயற்கைப் பகுப்பின்படி முல்லை, மருதம், நெய்தல் சந்திக்கின்ற திணை மயக்கமாகச் சதுப்புநிலக் காடுகள் திகழ்கின்றன. கடலில் ஏற்ற அலையின் (High tide) போது உருவாகி அதிக உயரத்திலும், வேகமாகவும் வந்தடையும் கடல்அலைகளைக் கட்டுப்படுத்த சதுப்புநிலக் காடுகள் உதவுகின்றன. அலையின் வேகத்தினை ஆற்றி சீராக்கும் வேலையில் இக்காடுகள் பெரும் பங்காற்றுவதால் இவை அலையாத்திக் காடுகள் என அழைக்கப்படுகின்றன.

சுரபுன்னைக் காடுகள்: அலையாத்திக் காடுகளில் சுரபுன்னை மரங்களின் வகைகள் காணப்படுகின்றன. இவை நெருக்கமாகவும், கூந்தல் போன்றும், பார்ப்பதற்குக் கோபுரம் போன்றும் பசுமையாகக் காணப்படும். இத்தாவரங்களின் இலைகள் தடித்து, மேற்புறத்தில் மெழுகு பூசியது போன்று காணப்படுவதுடன், ஒருவகை நறுமணத்தையும் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகச் சுரபுன்னை காடுகள் என்றும் கூறப்படுகின்றன.

அலையிடைக் காடுகள்: கடல் அலைகளின் இடைப்பகுதியில் இக்காடுகள் நன்கு செழித்து வளருகின்றன. இந்த இடைப்பகுதிகளில் கடல் அலையின் காரணமாக உவர் நீரும், ஆறுகள் மூலம் வந்தடையும் நன்னீரும் சேரும்பொழுது ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதுடன், உவர்தன்மையும் (salnity) குறைகிறது. இக்காடுகளின் இடையில் நன்னீரில் உள்ள தாதுப்பொருட்கள் தேங்கி. இத்தாவரங்கள் வளர உதவுவதால் அலையிடைப் பகுதிகளில் இக்காடுகள் நன்கு வளர்கின்றன.

தில்லைக் காடுகள்: தில்லை (Excoecaria agallocha) என்கிற மர வகைகள் சிதம்பரம் பகுதியில் உள்ள கழிமுகப் பகுதிகளில் உள்ளன. இவற்றின் இலைகள் பார்ப்பதற்கு ஆலமரத்தின் இலைகள்போல் காணப்படும். சிதம்பரத்தில் உள்ள நடராஜ கோயிலின் தலவிருட்சம் இந்தத் தில்லை மரமே.

சுந்தரவனக் காடுகள்: அலையாத்திக் காடுகளில் உள்ள மரங்களுக்குச் சுந்தர மரங்கள் என்ற பெயரும் உண்டு. இவை அழகிய தோற்றம் உடையவை. ஆகவே, இக்காடுகள் சுந்தரவனக்காடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இவை மேற்கு வங்காளத்தில் உள்ள கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள காடுகள். இந்தியாவின் தேசிய விலங்கான வங்கப் புலிகள் இங்கே காணப்படுகின்றன. புலிகளுக்கு வங்கப் புலி என்கிற பெயர் வந்ததற்கு இந்தக் காடுகளே காரணம்.

மீன்வளக் காடுகள்: சதுப்புநிலக் காடுகள் கடலும் ஆறும் கலக்கும் இடமான கழிமுகக் கரையில் அமைந்துள்ளன. இதனால் நன்னீரில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்தத் தாதுக்கள் கழிமுகப் பகுதியில் கடல் நீருடன் கலக்கின்றன. இதனால் அங்கே தாவர மிதவை உயிரிகளின் (Phytoplankton) உற்பத்தியும், விலங்கு மிதவை உயிரிகளின் (zoo plankton) உற்பத்தியும் அதிகரித்துக் காணப்படும். இதன் காரணமாக மீன் வளம் அதிகரிக்கிறது. கழிமுகப் பகுதியில் உப்புத்தன்மை குறைவாகவும், உயிர்வாயு (O2) அளவு அதிகமாகவும், அமில காரச் சமநிலை (PH) அளவு போன்றவை உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்கு உகந்ததாக உள்ளதாலும், மீன் வளம் அபரிமிதமாக உள்ளதாலும் இவை மீன்வளக் காடுகள் என்று பெயர் பெற்றுள்ளன.

மூச்சு வேர் காடுகள்: பொதுவாகத் தாவர வேர்கள் நேர் புவி நாட்டமும், எதிர் ஒளி நாட்டமும் கொண்டவை. ஆனால் அலையாத்திக் காடுகளின் சுவாச வேர்கள் எதிர் புவி நாட்டமும், நேர் ஒளி நாட்டமும் கொண்டுள்ளன. இந்தத் தாவர வேர்கள் கடல் நீருக்கு மேலே நீண்டு காணப்படும். இந்த வேர்களில் மிக நுண்ணிய துளைகள் உள்ளன. இத்துளைகள் மூலம் காற்றை உறிஞ்சி கரியமில வாயுவான கார்பன் டைஆக்ஸைடை (Co2) தாவர உடலில் இருத்தி ஸ்டார்ச் என்ற பாலி சாக்கரைடு உணவுப்பொருளைத் தயார் செய்கிறது. வளிமண்டலக் காற்றை நேரடியாக உறிஞ்சுவதால் இவை மூச்சு வேர் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

கடல் பாதுகாப்புக் காடுகள்: கடல் பூகம்பங்கள், தீவிர புயல், ஆழிப் பேரலை போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து காக்கும் அரண்களாக அலையாத்திக் காடுகள் திகழ்கின்றன. கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்படும்பொழுது பேரலைகள் உருவாகின்றன. இவை கண்டச்சரிவை (continental slop) அடையும் பொழுது அதன்மீது மோதி இன்னும் மிக உயரத்திலும், வேகத்திலும் கடல் கரையை அடைகின்றன (கண்டச்சரிவு என்பது செங்குத்தாக உள்ள கடற்கரை பகுதி). இந்தப் பேரலையின் வேகத்தைக் குறைக்கும் இயற்கை அரண்களாக இக்காடுகள் உள்ளன. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதியில் தாக்கிய சுனாமி அலைகளின் வேகத்தை இந்த அலையாத்திக் காடுகளே தணித்து மக்களைக் காத்தன.

அதிசயக் காடுகள்: இந்தத் தாவரங்கள் அதிக உவர்த்தன்மை உள்ள இடங்களில் வளர்வதற்கு ஏற்ற தகவமைப்பைப் பெற்றுள்ளன. மேலும் கடல் நீரை உறிஞ்சி இலைகள் வழியாக அதிகப்படி உப்பினை வெளியேற்றுகின்றன. விலங்குகள் உடலில் உள்ள அதிக அளவு உப்பினை வியர்வை சுரப்பி உதவியுடன் சவ்வூடுபரவல் முறை சீராக்குதல் (Osmoregulation) செயல்பாடு மூலம் வெளியேற்றுகின்றன. இத்தகைய பண்புகளும் சிறப்பு வாய்ந்த உப்பு நாளங்களும் இத்தாவர இலைகளில் அமைந்துள்ளதால் இவை அதிசயக் காடுகள் என அழைக்கப்படுகின்றன.

காரங்காடுகள்: தாவர மிதவை உயிரிகளின் உற்பத்தி ஒளி ஊடுருவும் தன்மையையும் அமிலக்காரச் சமநிலையையும் பொறுத்து உள்ளது. அலையாத்திக் காடுகளில் உள்ள தாவரங்களின் சுவாச வேர்கள் அமில காரச்சமநிலை செயல்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றன. இதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள கடல் வாழ் உயிரினங்கள் புரதச்சத்து மிகுந்ததாக உள்ளதுடன், அதிக சுவையுடையதாகவும் உள்ளன. இத்தாவரங்கள் கடல் அமிலமாவதைத் தடுக்கும் தன்மையுடையதாக இருப்பதால் இவை காரங்காடுகள் எனச் சிறப்புடன் அழைக்கப்படுகிறது.

குளிர்ச்சிக் காடுகள்: இரவில் நிலப்பகுதியிலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று நிலக்காற்று. பகலில் கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் கடற்காற்று. வெப்பநிலை மாறுபாடு காரணமாக நடக்கும் நிகழ்வு இது. கடலில் நடைபெறும் வெப்பநிலை மாறுபாட்டைத் தடுத்து கடல் நீரைக் குளிர்ந்த பகுதியாக மாற்றுவதில் இக்காடுகள் பெரும் பங்காற்றுவதால் இவை குளிர்ச்சி காடுகள் எனவும் பெயரிடப்பட்டுள்ளன. புவி வெப்பமாதலைத் தடுக்கும் பணியிலும் இக்காடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அடைகாக்கும் காடுகள்: மீன்கள், இறால்கள், நண்டுகள் போன்ற உயிரினங்கள் அடைகாப்பதற்கும், குஞ்சுகளைப் பொரிப்பதற்குத் தகுந்த இடமாக இக்காடுகள் பயன்படுகின்றன. இதற்கான உகந்த சூழ்நிலை இப்பகுதிகளில் உள்ளதால் இவ்வுயிரினங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அரிதான காடுகள்: இந்தியாவில் 105 வகை அலையாத்தித் தாவரங்கள் உள்ளன. இவற்றில் 40 வகையான தாவரங்கள் கிழக்குக் கடற்கரை பகுதிகளிலும், 27 வகையான தாவரங்கள் மேற்குக் கடற்கரை பகுதிகளிலும், 38 வகை அந்தமான் நிகோபார் தீவுகளிலும் காணப்படுகின்றன. கிழக்கிந்தியக் கடற்கரை பகுதிகளில் அதிக அளவிலான அலையாத்திக் காடுகள் இருப்பதற்கு அங்கே உள்ள வளமான வண்டல் மண்ணும், வற்றாத நதிகளும், ஆற்றுப்படுகைகளுமே காரணம். இந்தியாவில் உள்ள அலையாத்திக் காடுகளின் மொத்த அளவு 4,921 ச.கி.மீ. இதில் 6.2 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழகத்தில் இக்காடுகள் பிச்சாவரம், முத்துப்பேட்டை, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. சதுப்புநிலக் காடுகள் தனித்துவம் வாய்ந்தவை. இந்த இயற்கைப் பாதுகாப்பு அரணால் விளையும் பயன்கள் ஏராளமானவை. சதுப்புநில வனங்களால் நமது கடற்கரை பாது காக்கப்படுவதோடு கண்டத்திட்டு மீன்வளமும் சிறப்படைகிறது. சதுப்புநிலக் காடுகள் சுற்றியுள்ள கிராமங்களில் சுயவேலைவாய்ப்பையும் உருவாக்குகின்றன என்பதையெல்லாம் மனத்தில் கொள்ள வேண்டும்.

கா. தர்மேந்திரா
k.tharmendira@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in