

மூலிகை வளர்ப்பை ஊக்குவிக்கும் கேரள சங்கம் |
தமிழ்நாட்டில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் போல் கேரளத்தில் செயல்பட்டுவருவது மில்மா. இதன்கீழ் திருவனந்தபுரம் மில்க் யூனியன், எர்ணாகுளம் மில்க் யூனியன், மலபார் மில்க் யூனியன் என மூன்று மண்டலங்கள் இயங்கிவருகின்றன.
கேரளத்தின் தினசரிப் பால் தேவையான சுமார் 12 லட்சம் லிட்டரில், பாலக்காட்டை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மலபார் மில்க் யூனியனில் உள்ள 1,137 மில்மா பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் 6 லட்சம் லிட்டரை கொடுத்து வருகின்றன.
மூலிகை வளர்க்கும் பால் சங்கங்கள்
இதில் அட்டப்பாடி பாலூர் கூட்டுறவு சங்கம் மூலம் 35 ஏக்கரிலும் (நர்சரி ஏரியா 3.50 ஏக்கர்), கொழிஞ்சாம்பாறை அருகில் உள்ள மணல்காடு கூட்டுறவுச் சங்கம் மூலம் 11.55 ஏக்கரிலும் (நர்சரி ஏரியா 1.16 ஏக்கர்) ஆயுர்வேத வைத்தியத்துக்குப் பயன்படும் ஆறு வகையான மூலிகைச் செடிகளை வளர்க்கத் திட்டமிடப்பட்டது. இவற்றுக்கு MRDF- AVP Medicinal Plant Cultivation Project (Paloor & Manalkad) எனப் பெயரிடப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் கோவையில் உள்ள ஆயுர்வேத பார்மஸியும், மில்மா கூட்டுறவுச் சங்கமும் இணைந்து மேற்கொள்ளும் முதல் முயற்சிக்கான கூட்டம், அட்டப்பாடி தாவளம் அருகே உள்ள பாலூர் கிராமத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் ஆயுர்வேத மூலிகை வளர்ப்பு முறைகள், அவற்றை வளர்ப்பதற்கான தண்ணீர்த் தேவை, செலவினங்கள், இதில் ஈடுபடும் விவசாயிகளுக்குக் கிடைக்கும் பலன் குறித்தெல்லாம் விளக்கப்பட்டது. அதையடுத்து கொழிஞ்சாம்பாறை மணல்காடு பகுதியிலும் கூட்டம் நடந்தது.
‘ஆயுர்வேத வைத்தியத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டிருக்கும் எங்கள் அமைப்பு இதுவரை தேவையான மூலிகைச் செடிகளை சுயமாக வளர்த்து மருந்துகளை தயாரித்துவந்தது. மில்மா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள விவசாயிகளையும் இதில் ஈடுபடுத்த வேண்டும் என்று மலபார் மில்க் யூனியனின் சகோதர அமைப்பான மலபார் கிராமப்புற வளர்ச்சி நிறுவனம் (Malabar Rural Developments Foundation) கோவை ஆர்ய வைத்திய பார்மஸி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டது. அதை ஏற்றுக்கொண்டே இதை செயல்படுத்த முனைந்துள்ளோம்’ என கேரளத்தின் கஞ்சிக்கோட்டில் இயங்கி வரும் சென்டர் ஃபார் இந்தியன் மெடிக்கல் ஹெரிட்டேஜ் அமைப்பின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
மூலிகை வளர்ப்பில் முனைப்பு
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அட்டப்பாடி விவசாயிகளில் ஒருவரான ராதாகிருஷ்ணன் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்:
“தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே அட்டப்பாடியில் அதிகம் பேர் வசிக்கிறார்கள். அவர்களின் நிலத்தில் வானம் பார்த்த விவசாயம்தான் பெரும்பாலும் நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழை குறைந்து வறட்சி நிலவுகிறது. அதற்கேற்பத் தொழிலை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே, மாற்று விவசாய முறைகள், கால்நடை வளர்ப்பில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்தெல்லாம் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் அரசு கலந்தாலோசித்து வருகிறது. அப்படித்தான் இந்த மூலிகை விவசாயத்தையும் தேர்ந்தெடுத்துள்ளது. அந்த வகையில் நீலாமரி, குறுந்தட்டி, சித்தரத்தை, அடப்பத்தியன், மஞ்சள், திப்பிலி, இருவேலி, கொடிவேலி, அடலொட்டகம்ன்னு சில மூலிகை செடிகளைத் தேவைக்கேற்ப பயிர் செய்ய அறிவுறுத்தினார்கள்.
குறைந்த அளவு நீரே இதற்குப் போதுமானது எனவும் தெரிவித்தார்கள். இதை ஊடுபயிராகவும் பயிர் செய்யலாம். அதற்கான நர்சரி பண்ணைகள் முதற்கட்டமாக அமைக்க ரூ.1,78,445 நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இந்த நர்சரி உருவான பின்பு குறிப்பிட்ட விவசாயிகளின் தோட்டங்களில், இந்த மூலிகைகளைப் பயிர்செய்யவும், அதற்கான நிதி உதவியைச் செய்வதாகவும் சொல்லியிருக்கிறார்கள். விளைந்த பின்பு சந்தை விலையைவிட கூடுதல் விலையில் மூலிகைகளைப் பெற்றுக்கொள்வதாக உறுதி தந்துள்ளனர். எங்களுக்கு இங்கே தமிழ்நாட்டைவிடப் பால் விலை கூடுதலாகவே கிடைக்கிறது. அதேபோல் இந்த மூலிகை விவசாயமும் பலன் தரும் என்று நம்புகிறோம்!” என்றார்.
தேவைக்கேற்ப அதிகரிப்பு
இந்த மூலிகை விவசாயத்தில் முதற்கட்டமாக அட்டப்பாடியில் 45 விவசாயிகளும், கொழிஞ்சாம் பாறையில் 24 விவசாயிகளும் பெயர் பதிவுசெய்துள்ளனர். உற்பத்தி, தேவைக்கேற்ப விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறார் மலபார் ஊர்ப்புற வளர்ச்சி நிறுவனத்தின் (Malabar Rural Developments Foundation) தலைவர் பிஜூ.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “மில்மாவின் ஓர் அங்கமான எங்கள் அமைப்பு ‘ஒளஷதகிரிஷி மருத்துவத் தாவரங்கள்’ என்ற பெயரில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. விவசாய விளைபொருட்கள், காய்கறிகளுக்கு உரிய விலை விவசாயிக்கே சென்று சேர, குளிர்பதனக் கிடங்குகளில் வைத்து விற்பனை செய்துதரும் பொறுப்பை வயநாடு, கள்ளிக்கோட்டை பகுதிகளில் நாங்கள் செய்துவருகிறோம். அந்த வகையில் இந்த மூலிகை வளர்ப்பும் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக அமையும்!” என்றார்.
மாற்றுத் தாவர வளர்ப்பான, இது போன்ற மூலிகை வளர்ப்புத் திட்டத்தைத் தமிழக விவசாயிகளிடமும் அறிமுகப்படுத்தலாம். அதற்கான தேவை நிறையவே உள்ளது.