

தென்னை மரங்கள், நிகோபார் பழங்குடியினரது பொருளாதாரத்தின் உயிர்நாடி. எனவே, இம்மரங்களை இவர்கள் தொன்றுதொட்டுப் பேணிவருகின்றனர். அவர்களுடைய பேணும் முறையைப் பாரம்பரிய அறிவு என்று சொல்வதைவிடவும் அறிவியல் என்றே சொல்ல வேண்டும். இத்தீவுகளில் இந்தோ-மலாய் மற்றும் பிலிப்பைன்ஸ் வகையைச் சேர்ந்த மரபணு வேறுபாடுகளைக் கொண்ட தென்னை மரங்கள் உள்ளன. இம்மரங்கள் போர்ட் பிளேயரில் அமைந்துள்ள உலகத் தென்னை மரபணு சேகரிப்பு மையத்திலும் நாட்டின் பல்வேறு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்களிலும் பராமரிக்கப்பட்டுவருகின்றன.
இவை இத்தீவுகளின் மையப்பகுதியில் காடுகளைப் போன்று இயற்கையாக வளர்கின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மரங்கள் தென்னந்தோப்புகளில் பராமரிக்கப் படுகின்றன. அடர்த்தியாகவும் உயரமாகவும் வளர்ந்த தென்னை மரங்கள் `டவேட்’ அல்லது `டுலாங்’ எனப்படும் தோட்டப் பகுதியில் பராமரிக்கப்படுகின்றன.
இயற்கையான மூடாக்கு
மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவெனில் நிலங்களை வரப்புகள் அல்லது கால்வாய்கள் வெட்டி நிகோபாரி பழங்குடிகள் பிரிப்பதில்லை. பயிர்கள் தொடர்ச்சியாக அமைந்துள்ளன. ஆனால் ஒவ்வொரு பழங்குடி குடும்பத்துக்கும், துகேத் எனப்படும் கூட்டுக்குடும்பத்துக்கும், பழங்குடி கிராமத்துக்கும் எத்தனை தென்னை மரங்கள், அவை எங்கு அமைந்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.
தவிர்க்க முடியாத நேரங்களைத் தவிர, பொதுவாக முற்றிக் கீழே விழும் தேங்காய்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டு நிலத்திலேயே உரிக்கப்படுகின்றன. உரிக்கப்பட்ட பின் எஞ்சிய நார்ப்பகுதிகள் மற்றும் கீழே விழும் இலைதழைகள் நிலத்தின் மேற்பரப்பில் மூடாக்குபோல் அப்படியே விடப்படுகின்றன. இதனால் மண்ணரிப்பும் நீர் ஆவியாவதும் குறைவதோடு மண்ணின் ஈரத்தன்மையும் பாதுகாக்கப்படுகிறது. நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.
வேளாண் உயிரினப் பன்மை
இதைத் தவிர, `டவேட்’ பகுதியில் சேனைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சிறு கிழங்கு, நிகோபாரி கிழங்கு, சிறு மிளகாய், தாழம்பூ, வாழை மற்றும் பல்வேறு கீரை வகைகள் உழவின்றி இயற்கை முறையில் பயிரிடப்படுகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இப்பகுதியில் வேளாண் உயிரினப் பன்மை பராமரிக்கப்படுகிறது. இதை இத்தீவுகளின் வலிமையென்றும் இன்றைய இயற்கை வேளாண்மையின் முன்னோடி என்றும் கூறலாம்.
மூன்றாவதாக நிகோபாரிகள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதிகமான இளநீர் தரும் தென்னை மரங்களை வளர்க்கிறார்கள். வருடத்துக்கு ஒருமுறையாவது வீட்டைச் சுற்றி வளரும் இலைதழைகளை (பெரும்பாலும் பருப்பு வகைத் தாவரங்கள்) வெட்டி மரத்தைச் சுற்றிப் புதைத்துவிடுகின்றனர். நிலம் ஒருபோதும் முற்றிலுமாக உழவு செய்யப்படுவதில்லை.
(அடுத்த வாரம்: தென்னை விருத்தியும் கூட்டுத் தோட்டங்களும்)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com