தமிழகத்தைத் தேடி வரும் கரையோரப் பறவைகள்

தமிழகத்தைத் தேடி வரும் கரையோரப் பறவைகள்
Updated on
2 min read

தமிழ்நாட்டின் இயற்கையான வாழிடங்கள் பல வகையான பறவைகளுக்குப் புகலிடமாக விளங்குகின்றன. இந்த வாழிடங்களை நோக்கி, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான வலசைப் பறவைகள், உலகின் பல பகுதிகளிலிருந்து வருகின்றன. பறவைகள் வலசை என்பது, பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் குளிர் அதிகரிக்கும்போது அங்கிருந்து உலகின் வேறு பகுதிகளுக்குக் குறிப்பிட்ட வழித் தடத்தில் நடைபெறும் வழக்கமான பருவகால இடப்பெயர்ச்சி.

பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக இந்தியாவின் பல பகுதிகளுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு பகுதியும் வலசைவரும் பறவைகளின் வாழ்விற்குப் பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதை அப்போது அறிந்து கொண்டேன். தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளும் நீர்நிலைகளும் வலசைவரும் பறவைகளுக்கு மிகவும் முக்கியமானது என்பதை கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ஓராண்டு தங்கியிருந்தபோது உணர்ந்தேன்.

தேடிவரும் பறவைகள்: தமிழகத்திற்கு வரும் பெரும்பாலான வலசை பறவைகள் வடதுருவ (Arctic) பகுதியிலிருந்தும், ரஷ்யா (ஆர்க்டிக் தூந்திரப் பிரதேசம் வரையும்), மங்கோலியா, சீனா, மத்திய ஆசிய நாடுகள், மேற்கு ஆசிய, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவை. இப்பறவைகள், செப்டம்பர்-அக்டோபர் முதல் பிப்ரவரி-மார்ச் வரை ஆர்க்டிக் பகுதிகளில் நிலவும் கடும் குளிரைத் தவிர்த்திடத் தமிழகம் போன்ற வெப்பமண்டலப் பகுதிகளை நோக்கி வருகின்றன. தமிழகத்தில் உள்ள பழவேற்காடு ஏரி, பள்ளிக்கரணை சதுப்புநிலம், கழுவேலி, வேதாரண்யம் சதுப்புநிலங்கள், மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி ஆகிய கடலோரப் பகுதிகளுக்குப் பல வகையான பறவைகள் அதிக எண்ணிக்கையில் வலசைவருகின்றன. இவற்றில் சில பறவைகள், தமிழகத்துடன் நிற் காமல் இலங்கை, மாலத்தீவுகள், ஆஸ்திரேலியா வரையிலும்கூடப் பயணிக்கின்றன.

நாம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லக் குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவது போலவே, பறவைகளும் குறிப்பிட்ட வலசை வழித்தடங்களை (Flyway) பயன்படுத்துகின்றன. தமிழகத்திற்கு ஆர்க்டிக் பகுதிகளிலிருந்து வரும் பெரும்பாலான பறவை இனங்கள், மத்திய ஆசிய வலசை வழித்தடம் (Central Asian Flyway), கிழக்காசிய -ஆஸ்திரேலியா வலசை வழித்தடம் (East Asian-Australasian Flyway) ஆகிய வழித்தடங்களின் வழியே வருகின்றன.

அழிபவையும் தள்ளப்படுபவையும்: ஆர்க்டிக் பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பறவையினங்களில் முக்கியமானவை வளைமூக்கு மண்கொத்தி (Curlew Sandpiper), கருவயிற்று மண்கொத்தி (Dunlin), அரிவாள்மூக்கு உள்ளான் (Whimbrel), பெரிய உள்ளான் (Great knot), கரண்டிவாய் மண்கொத்தி (Spoon-billed Sandpiper), சிவப்பு உள்ளான் (Red knot) ஆகியவை. இவற்றில் பெரிய உள்ளானும், கரண்டிவாய் மண்கொத்தியும் அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்கள்.

கரண்டிவாய் மண்கொத்தியின் எண் ணிக்கை உலகில் மொத்தமாகவே 500–க்கும்குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் இப்பறவை கடைசியாக, 1996இல் கோடியக் கரையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு இப்பறவையைச் சமீப காலம்வரை யாரும் தமிழகத்தில் பார்க்கவில்லை. ஆனால், மிகக்குறைந்த எண்ணிக்கையில் இப்பறவை கள் இன்னும் தமிழகம் வழியாக இலங்கைக்கு வலசை செல்வதாக நம்பப்படுகிறது. நான் கோடியக்கரையில் இருந்தபோது, இப்பறவையினை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டேனா என்ற ஆர்வத்துடன் கடற்கரை சதுப்புநிலங்களில் சுற்றித் திரிந்ததுண்டு. ஆனால் இதுவரை பார்க்கவில்லை.

அதேபோல அழிவின் விளிம்பில் உள்ள ஒரு கரைப்பறவை (wader) பெரிய உள்ளான். இவற்றின் கால்கள் பச்சையாகவும், தூரத்திலிருந்து பார்க்க உருண்டையாகவும் இருப்பதால் இவற்றை கோடியக்கரையில் உருண்டை உள்ளான்கள் என்றும் அழைப்பார்கள் (பொதுவாக எல்லா வகை கரைப்பறவைகளுக்கும் உள்ளான்கள் என்றே பெயர்). இந்தப் பறவைகள் வடகிழக்கு சைபீரியாவில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு பறவையினம். குளிர்காலத்தில் ஆஸ்திரேலியா விலும், தென்கிழக்கு - தெற்கு ஆசியாவின் கடற்கரைகளிலும் வாழ்கின்றன. இவற்றின் வலசை வழித்தடத்தில் உள்ள வாழிடங்கள் சீரழிக்கப்படுவதாலும், இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தினாலும் இந்த இனம் வேகமாக அழிந்துவருகிறது. கோடியக்கரையில், 2017இல் சுமார் 90 பெரிய உள்ளான்களைக் கண்டது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.

காக்கப்படுமா? - ஆர்க்டிக் பகுதியில் இருந்துவரும் இந்தப் பறவைகள், கடலோரச் சதுப்புநிலங்களை மட்டுமே நம்பி வருபவை. தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் பல வளர்ச்சித் திட்டங்களாலும், ஆக்கிரமிப்புகளினாலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் வெகுவாகச் சிதைந்தும், தவிரக் கடலோரச் சதுப்புநிலங்கள் நேரடியாகப் பல சிக்கல்களையும் சந்தித்துவருகின்றன. தமிழகத்தில் மட்டுமல்லாது ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது. இது போன்ற காரணங்களால் வலசைப் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்துகொண்டே வருகிறது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் சில பறவையினங்கள் முற்றிலும் அழிந்து போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

எடுத்துக்காட்டாக வேதாரண்யம் சதுப்பு நிலப் பகுதிகளில், அதிக அளவில் உப்பு அள்ளப்படுவது, மண் அள்ளுதல், இறால் பண்ணைகள் அமைத்தல், சேற்று நிலங்களில் பரவும் அலையாத்திக் காடுகள் போன்ற பல பிரச்சினைகளால் கரைப்பறவைகளின் எண்ணிக்கை முன்பைவிட இங்கே குறை வாகவே காணப்படுகிறது. இப்பறவை களைப் பாதுகாக்க இந்திய அரசு, ஐந்தாண்டு (2018-2023) தேசியச் செயல்திட்டத்தை வகுத்துள்ளது. இந்த வலசை பறவைகள், பல நாடுகளைக் கடந்து வலசை செல்வதால், ‘வலசை போகும் வன உயிரிகளின் பாதுகாப்புக் கூட்டமைப்பு (Convention on Migratory Species (CMS)’ போன்ற பல பன்னாட்டு அமைப்புகள் இணைந்து பறவைகளின் பாதுகாப்புக்காகப் பணியாற்றி வருகின்றன. எனினும், வலசைப் பறவைகளின் வாழிடங்களை அடையாளம் கண்டு, பாதுகாத்தால் மட்டுமே இந்த பறவைகளை அழிவிலிருந்து ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும். நம்மைத் தேடிவரும் இந்த விருந்தாளிப் பறவைகளைப் பாதுகாப்பது நம் கடமை. - கட்டுரையாளர், பறவையியல் ஆய்வாளர்; தொடர்புக்கு: r.selvaraj@bnhs.org

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in