

கலிபோர்னியாவில் உள்ள டெத் பள்ளத்தாக்கில் 2013-ம் ஆண்டு ஜூனில் 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே பூமிப்பந்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை.
- அதே ஆண்டு, ஆஸ்திரேலியாவில் கடும் வெப்பமும், உத்தராகண்ட் மாநிலம், அமெரிக்கா, மத்திய ஐரோப்பா, அர்ஜெண்டினா, கனடா முதலிய பகுதிகளில் கனமழையும் பெருவெள்ளமும் ஏற்பட்டன.
- அமெரிக்காவின் சில மத்திய மாநிலங்களில் மே மாதக் கடைசியில் பனிப்பொழிவும், டெக்சாஸ் மாநிலத்தில் கடும் வறட்சியும் ஏற்பட்டன.
- இந்தியாவின் வட மாநிலங்களில் ஜனவரி மாதத்தில் கடும் குளிரும் மே மாதத்தில் கடும் வெப்பமும் நிலவுகின்றன. இந்த நிலை வருங்காலத்தில் இன்னும் மோசமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிக் கடுமையான பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் அண்மை காலமாகப் பெருகிக்கொண்டே வருகின்றன. உலகளாவிய காப்பீட்டு நிறுவனமான மியூனிக் ரெ (Munich Re) 2012-ல் வெளியிட்ட ஒரு ஆராய்ச்சி அறிக்கை, அதீதப் பருவநிலை மாற்றத்தின் விளைவால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களின் எண்ணிக்கை 1980-களிலிருந்தே இரு மடங்காகிக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
இதற்கெல்லாம் காரணம் புவி வெப்பமாதலா? புயல், வெள்ளம், கடும் வெப்பம் போன்ற இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளின் அதிகரிப்பை மட்டுமே பூமி வெப்பமாதல் நிகழ்ந்துவருவதன் விளைவுகளாகச் சொல்ல முடியுமா? தினசரி வெப்பநிலையையும் நீண்டகாலத் தட்ப வெப்பநிலையையும் நிர்ணயிக்கும் காரணிகள் பல. ஒரு குறிப்பிட்ட பகுதியின் காலநிலையில் ஏற்படும் இயற்கையான மாறுதல், காற்று மண்டலத்திலும், கடலிலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், சூரியச் சுழற்சி, எரிமலை வெடிப்பு, சுற்றுப்புற மாசு போன்றவற்றைப் புவி வெப்பமாதலுக்கான காரணிகளாகச் சொல்லலாம். என்றாலும் கடும் வெப்பம், கடுங்குளிர், வறட்சி, கடும் மழை, பனிப்பொழிவு, வெள்ளம் முதலியவற்றைப் புவி வெப்பமாதலுடன் தொடர்புபடுத்த முடியுமா? நிச்சயமாக முடியும்.
உயரும் வெப்பநிலை
கடந்த பல ஆண்டுகளாக உலகச் சராசரி வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள உயர்வையே ‘புவி வெப்பமாதல்’ என்கிறோம். இதனால் வெப்பமும் குளிரும் அதிகரிப்பது இயல்பே. என்றாலும், உலகின் தட்பவெப்பம் உயரும்போது, குளிரைவிட வெப்பமே கூடுதலாக அதிகரித்துவருகிறது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் மட்டும் 2000-ம் ஆண்டிலிருந்து கடும் வெப்பமும் கடுங்குளிரும் 7/1 என்ற விகிதத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக உலக அளவிலும் கிட்டத்தட்ட இதே விகிதத்தில் அதீதப் பருவநிலை மாற்றம் இருப்பதாக உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை (The Global Climate 2001-2010: A Decade of Climate Extremes) தெரிவிக்கிறது.
சராசரி வெப்பநிலை உயர்வு, ஒட்டுமொத்த வெப்பநிலை பரவியிருப்பது அதிகரிப்பு, கடும் வெப்பம் போன்றவை 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு எனவும், ஆனால் தற்காலத்தில் அவை மிகவும் அதிகமாகிவிட்டன என்றும் நாசா (NASA) விஞ்ஞானியான ஜேம்ஸ் ஹான்சன் குழுவினரின் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும் வெப்பநிலை கூடிக்கொண்டே போகிறது. பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை வரலாற்றில், இந்த ஆண்டுதான் வெப்பமான ஆண்டு. ஜூன் 2016 வரை பதிவான நிலம், கடல் சராசரி வெப்பநிலை 19-ம் நூற்றாண்டின் இறுதியில் (தொழிற்புரட்சிக் காலம்) இருந்ததைவிட 1.3 செல்சியஸ் அதிகம் என்று நாசா தெரிவித்துள்ளது.
கடுங்குளிர்
உலகின் வடதுருவத்தில் வழக்கத்துக்கு மாறான கடுங்குளிர் தற்போது நிலவிவருகிறது. இதற்கு முக்கியக் காரணம் ஆர்க்டிக் பகுதி, ஏனைய வடதுருவப் பகுதிகளைவிட இரு மடங்கு சூடாவதே எனக் கருதப்படுகிறது. விஞ்ஞானிகள் ஜெனிபர் பிரான்சிஸ், ஸ்டீபன் வேவ்ரஸ் ஆகியோரின் ஆராய்ச்சி முடிவுகளின்படி (கிட்டத்தட்ட இந்தியாவின் பரப்பளவைக் கொண்ட) ஆர்க்டிக் பகுதியில் கோடைக்காலத்தில் வேகமாக உருகும் பனிக்கட்டிகளும் பூமியிலிருந்து ஆர்க்டிக் கடலுக்குத் தொடர்ச்சியாகச் செலுத்தப்பட்டுவரும் வெப்பமும், 1980-களிலிருந்து காற்று மண்டலத்தின் போக்கில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருவதை அறிய முடிகிறது. இந்தக் காற்றோட்டம் வீசும் பாதை வட அமெரிக்கா, யூரேசியாவுக்கு மேல் இருப்பதால், இப்பகுதிகளில் கடும் வெப்பம் அல்லது கடுங்குளிர் ஏற்படுகிறது.
ஆகவே, வெப்பநிலையில் ஏற்படும் இந்தத் தீவிரமான ஏற்றத்தாழ்வுகள் இயல்பானவை அல்ல. அதற்குப் புவி வெப்பமாதலும் ஒரு காரணம் என்பதும் மேற்சொன்ன ஆராய்ச்சிகளின் முடிவுகளிலிருந்து புலப்படுகிறது.
வெள்ளமும் வறட்சியும்
அப்படியானால் வெள்ளமும் வறட்சியும் நிகழ்வதற்கான காரணம் என்ன? புவி வெப்பமாதலின் விளைவாகப் பூமியின் வட அரைக்கோளத்தில் (northern hemisphere) நீண்ட கோடைக்காலமும், அதிக மழைப்பொழிவும் இருக்கும் எனப் பெரும்பாலான பருவநிலை மாதிரிகள் கணித்துள்ளதாக ஐ.நா.வின் பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேசக் குழுவின் (IPCC) அறிக்கை கூறுகிறது.
தேவையான ஈரப்பதமின்றிக் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நிலப்பகுதியில் நிலவும் அதிக வெப்பநிலை, காற்றுமண்டலம் அதிக அளவு நீராவியைத் தக்கவைத்துக் கொள்வதாலும் மண் வறண்டு போய் வறட்சி ஏற்படுகிறது. உலகில் 1970-லிருந்து பல பகுதிகள் வறண்டு போனதற்கும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட காட்டுத்தீ நிகழ்வுகளுக்கும் புவி வெப்பமாதல் ஒரு முக்கியக் காரணம்.
அதேவேளையில் கடந்த சில ஆண்டுகளாக உலகின் கடல் பகுதிகளும் சூடாகி வருகின்றன. உலக அளவில் மிகப் பெரிய பவளத்திட்டுக்கள் வெளுத்துப் போய் இறந்துகொண்டிருக்கின்றன. கடலில் இருந்து அதிக அளவில் ஆவியாகும் நீரானது சூடான காற்று மண்டலத்தில் சேர்வது அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் காற்று மண்டலத்தில் உள்ள நீரின் அளவு, 1970-களில் இருந்ததைவிட 4 சதவீதம் தற்போது அதிகரித்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் உலகில் ஏதோ ஒரு நிலப்பகுதியில் பெரும் மழையாகவோ, கடும் பனிப்பொழிவாகவோ இந்த நீர் பொழியப்பட்டுப் பெரும் வெள்ளத்தையோ அசாதாரணச் சூழ்நிலையையோ ஏற்படுத்துகிறது. இதைத்தான் “...தற்போது நிகழும் வானிலை பேரிடர்கள் பருவநிலை மாற்றத்தால் நிகழ்ந்தவைதான், ஏனென்றால் முன்பைவிட புறச்சூழல் வெப்பமாகவும் ஈரப்பதம் மிக்கதுமாக இருக்கிறது” என்று விஞ்ஞானி கெவின் ட்ரென்பெர்த் குறிப்பிடுகிறார்.
ஏன் இந்த நிலை?
இதற்கெல்லாம் காரணம் புவி வெப்பமாதல்தான் என்பதை முதலில் நாம் உணர வேண்டும். பருவநிலை மாற்றத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் 97 சதவிகிதம் பேர், புவி வெப்பமடைவதற்கு மனித இனமே முதன்மைக் காரணம் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். புதைபடிவ எரிபொருட்களான பெட்ரோல், டீசல், நிலக்கரி முதலியவற்றை எரிப்பதால் வெளியாகும் கரியமில வாயு புறச்சூழலில் அதிகரிப்பதாலேயே புவி வெப்பமடைகிறது.
மே 2013-ல் புறச்சூழலில் கரியமில வாயுவின் அடர்த்தி 400 பி.பி.எம் (parts per million) எனும் அளவைக் கடந்துவிட்டது. இது 1700-ன் இறுதியில் 280 பி.பி.எம். ஆகவே இருந்தது. இதற்கு முன்னால் இந்த அளவு 400 பி.பி.எம் ஆக இருந்தது 30-50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால். அப்போது உலகில் கடல் மட்டம் உயர்ந்திருந்தது. அது மட்டுமல்லாமல் அப்போது நிலவிய பருவநிலையும் வேறு. ஆனால், தற்போது உலகம் சந்தித்துள்ள நெருக்கடி நிலை, இதற்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை என்பதால், இது மனித நாகரிக வளர்ச்சியால் ஏற்பட்ட விளைவுதான் என்பது தெளிவாகிறது.
இரண்டாவதாக, உலகில் உள்ள அனைவரும் கரியமில வாயு, மீத்தேன் போன்ற பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைப் பெருமளவு குறைக்க வேண்டும். பொருளாதாரத்தில் உயர்ந்த நாடு, வளர்ந்து வரும் நாடு என்ற பாகுபாடெல்லாம் புயலுக்கும் வெள்ளத்துக்கும் கிடையாது. புவி வெப்பமாதல் உலகின் எல்லாப் பகுதிகளையும், குறிப்பாக ஆசியப் பகுதியைக் கடுமையாகப் பாதிக்கும் என உலகக் காலநிலை பேரிடர்க் குறியீடு (global climate risk index) சுட்டிக்காட்டியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்தால் பொருளா தார வளர்ச்சிக்கு ஏற்படும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆகவே உலகில் உள்ள அனைவரும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு, கார்பனை அதிகமாக வெளியிடும் செயல்பாடுகளை வெகுவாகக் குறைத்துக்கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy), ஆற்றல் பயன்பாட்டில் சிக்கனம், கார்பன் சேகரிப்பு (Carbon sequestration) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளாதார நடைமுறையை உருவாக்கிச் செயல்பட வேண்டும்.
கடைசியாக நிலம், காடு, நீர்நிலைகள் ஆகியவற்றை நாம் பயன்படுத்தும் விதமும் பராமரிக்கும் விதமும் பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்ற அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, காலநிலை மாற்றத்துக்கு வித்திடும். காலநிலை மாற்றத்தால் உருவாகும் இயற்கைப் பேரிடர்கலிருந்தும், அவை ஏற்படுத்தும் கடுமையான பாதிப்புகளிலிருந்தும் இதை அறியலாம்.
அண்மையில் உத்தராகண்ட் மாநிலத்திலும் சென்னையிலும் ஏற்பட்ட வெள்ளம் இதற்கு முக்கிய உதாரணம். சகட்டுமேனிக்குக் காடுகளையும் பரந்த புல்வெளிகளையும் அழிப்பது, நீர்நிலைகளையும், சரிவான மலைப்பகுதிகளையும் ஆக்கிரமித்துக் கட்டிடங்களைக் கட்டுவது, இயற்கையான வாழிடங்களைச் சீரழிப்பது முதலிய காரணங்களாலும், உரிய கட்டமைப்பு வசதிகள், பேரிடர் மேலாண்மை இல்லாததாலுமே இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு ஏற்படும் சேதங்கள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன.
என்ன செய்ய வேண்டும்?
இப்போதும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. இந்தக் கணத்திலிருந்து நாம் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் செயல்பட்டால், பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை நிச்சயமாகக் கட்டுப்படுத்தவும், இயற்கைப் பேரிடர்களின் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். காட்டுப் பகுதி, நீர்நிலைகள், இயற்கையான புல்வெளிகள், சமவெளிகளை மதித்துப் பாதுகாக்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், இயற்கைக்கு இணக்கமான வளங்குன்றாத வளர்ச்சி முறைகளைப் பின்பற்ற வேண்டும். அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், வறட்சி முதலிய இயற்கைப் பேரிடர்களை உணர்ந்தே இவற்றை நாம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இதுபோன்ற கடுமையான பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் எதிர்கொள்ளவும் பூமிப்பந்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் விரைந்து செயலாற்ற வேண்டும். அது மட்டுமே உலகைக் காப்பாற்ற ஒரே வழி!
- (தி இந்து ஆங்கிலம்) 13 ஜூலை 2013 நாளிதழில்
வெளியான ‘Living in an extreme world’ கட்டுரையை தழுவி எழுதப்பட்ட கட்டுரை)
கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு jegan@ncf-india.org