இந்தியாவிற்குச் சிவிங்கிகள் வருகை, நல்வரவா?

இந்தியாவிற்குச் சிவிங்கிகள் வருகை, நல்வரவா?
Updated on
3 min read

இந்தியக் காட்டுப்பகுதியில் குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் ஆசிய சிவிங்கிகள் (Cheetahs) நாடு விடுதலை பெற்ற காலம்வரை வாழ்ந்துள்ளன. மனிதர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாத இவை அதிகம் வேட்டையாடப்பட்டதாலும், துண்டாடப்பட்ட வாழிடப் பரப்பாலும் இந்தியாவிலிருந்து அவை அற்றுப்போய்விட்டன.

இந்தியாவில் பெரும்பூனைக் குடும்பத் தின் அற்றுப்போன முதல் உயிரினம் இது. 1948இல் மத்திய இந்தியாவின் சமஸ்தான ராஜா ராமானுஜ் பிரதாப் சிங் வேட்டையாடிய மூன்று ஆசியச் சிவிங்கிகளோடு இவற்றின் இந்திய அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. 1952இல் மத்திய அரசால் முற்றிலும் அற்றுப்போன (Extincted) உயிரினமாக அறிவிக்கப்பட்டும்விட்டது.

இந்த நிலையில், இந்தியக் காட்டுப் பகுதிகளில் அடுத்துவரும் 5 ஆண்டுகளில், 50 சிவிங்கிகள் படிப்படியாக மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அதற் கென்று ‘இந்தியக் காட்டுயிர் நிறுவன’த்தால் செயல்திட்டம் வகுக்கப்பட்டு, இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. முதற்கட்டமாக எட்டு சிவிங்கிகள், செப்டம்பர் 17 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, மத்தியப் பிரதேசத்தின் ‘குனோ தேசியப் பூங்கா’வில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஏன் குனோ தேசியப் பூங்கா? - மத்திய இந்தியாவில் 10 இடங்கள், இந்த மறு அறிமுகத்திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தன. அவற்றில், குனோ தேசியப் பூங்காவே சிவிங்கிகளுக்குத் தேவையான அம்சங்களை உள்ளடக்கிய காரணிகளுள் முதன்மையானதாகத் திகழ்வதாகக் கூறப்படுகிறது:

l சிவிங்கிகளுக்கான விருப்ப இரைகள் இங்கே அதிகம்.

l ஷியோபூர் - ஷிவ்புரி திறந்தவெளிக் காடுகள் 21 சிவிங்கிகளுக்குப் போதுமானதாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

l ஏற்கெனவே இந்நிலப்பரப்பில் நான்கு பெரும்பூனைக் குடும்பங்களும் (புலி, சிங்கம், சிறுத்தை, சிவிங்கி) இங்கே வாழ்ந்துள்ளன.

l 748 ச.கி.மி பரப்புடைய இந்தக் காட்டுப்பகுதியில் 2003-க்குமுன்பே 24 கிராமங்களில் வாழ்ந்த 1,500 குடும்பங்கள் வெளியேற்றப் பட்டுவிட்டன. அவர்களில் 90 சதவீதம் பேர் சஹரியா பழங் குடிகள். கிர் காட்டுக்குப் பிறகு சிங்கங்களை இப்பகுதியில் அறிமுகப்படுத்துவதற்காக அவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை.

அன்றைய இந்தியாவில் வேட்டைக்கு அழைத்துச் செல்லப்படும் சிவிங்கிகள்
அன்றைய இந்தியாவில் வேட்டைக்கு அழைத்துச் செல்லப்படும் சிவிங்கிகள்

எங்கிருந்து வருகின்றன? - இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆசிய சிவிங்கியினத்தில் எஞ்சியுள்ளவை இன்றைக்கு ஈரானில் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றன. அவை வெறும் 12 மட்டுமே இருப்பதால், அவற்றைக் கொண்டுவர இயலாது. தென்கிழக்கு ஆப்பிரிக்க சிவிங்கி இனம் 4,000 எண்ணிக்கையில் இருக்கிறது. இது ஆசிய சிவிங்கியினத்துடன் நெருக்கமான மரபணுத் தொகுப்பைப் பகிர்ந்துகொள்கிறது. அவற்றில் நமீபியாவிலிருந்து பெறப்பட்ட சிவிங்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் வாழும் சிவிங்கிகளில் பாதிக்கும் மேற்பட்டவை தென் ஆப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் வாழ்ந்துவருகின்றன.

நீண்ட பயணம்: நமீபியாவிலிருந்து குனோ (Kuno) வரைக்கும் இவற்றைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்தது மிகப்பெரும் சவால். விலங்கு மருத்துவ நிபுணர்கள் உடன் இருந்தாலும்கூட, பிரத்யேகமான சிறப்பு திட்டமிடல் தேவைப்பட்டது. மயக்க நிலையிலேயே இவற்றைக் கொண்டு வருவதும் சிக்கலைத் தரும். எனவே, முதல் நாள் அளிக்கப்பட்ட மயக்க மருந்திலிருந்து விடுப்பட மாற்று மருந்துகள் அளிக்கப்பட்டு, அரை மயக்க நிலையிலேயே அவை வைக்கப்பட்டன. நீண்ட பயணத்திற்கு முன் அவற்றுக்கு உணவு தருவதென்பது உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், பயணத்தின்போது அவற்றுக்கு உணவு எதுவும் கொடுக்கப்படவில்லை.

இந்தியாவில் சிவிங்கிகள்: எல்லாப் பூனைகளுக்கும் தன் வாழிடம் சார்ந்த உள்ளுணர்வு (Homing instinct) உண்டு. எங்கிருந்து வந்ததோ அங்கே திரும்பச் செல்வதற்கான உள்முனைப்பு, அவற்றிடம் அதிகமாகக் காணப்படுவது இயற்கை. அத்தகைய உள்ளுணர்வைத் துண்டித்து, புதிய வாழிடத்திற்குப் பழக்கப்படுத்துவதற்கு இரண்டு மாத கால தீவிரப் பயிற்சி தேவைப்படும். குனோ தேசியப் பூங்காவில், சுற்றிலும் வேலியிடப்பட்ட பகுதியில் ஒரு மாதக் காலம் அவை தனிமைப்படுத்தப்பட்டுக் கண் காணிக்கப்படும். அம்முயற்சியில் எதிர்பார்த்த விளைவுகள் கிடைத்த பிறகே 1,15,000 ஹெக்டேர் தேசியப் பூங்காவில் சுதந்திரமாகத் திரிய அனுமதிக்கப்படும்.

தற்போது கண்காணிப்பு வளையத்தில் சிவிங்கி
தற்போது கண்காணிப்பு வளையத்தில் சிவிங்கி

சவால்கள்: சிறுத்தைகளே சிவிங்கிகளுக் கான முதல் அச்சுறுத்தல். சிவிங்கி களின் குட்டிகளைக் கொன்று இரையாக உண்பதன் வாயிலாக, அவற்றின் இனப்பெருக்கம் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்தப்படும் அபாயம் உண்டு. கழுதைப்புலிகள், செந்நாய்கள், கரடி, ஓநாய்கள் போன்ற வையும் இவற்றுக்குச் சவாலாக இருக்கும். இயல்பிலேயே மென்மையானதும் பிற விலங்குகள்போல் ஆக்ரோஷமாக சண்டையிடத் தெரியாதவை சிவிங்கி கள். அத்தகைய சூழலில் தம்மைத் தற்காத்துக்கொள்ள அவற்றின் வேகம் தான் கைகொடுக்கின்றன. ஆனால், அவற்றுக்கு இது புதிய சூழல்.

சாதகங்கள்: சிவிங்கிகளுக்குச் சவாலான சூழலைத் தவிர்க்கும் பண்பு இயல்பாக உள்ளதால், பெரிய போராட்டம் ஏதும் இருக்காது என்கிற அனுகூலப் பார்வையும் முன்வைக்கப்படுகிறது. இரைகளான புள்ளிமான்களும், சில வகை கஸேல் மான்களும் (Gazelles), நாலு கொம்பு மான்களும் அதிகம் காணப்படுவதால் இரை - ஆற்றல் - இனப்பெருக்கம் - புதிய சந்ததிகள் என்று அவை பல்கிப்பெருகுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆண் சிவிங்கிகள் தமது எல்லையை அறிவிக்கின்ற, இணையைக் கவர வெளிப்படுத்துகிற ‘வாசனைக் குறியீடு’ போன்ற இயல்பான வசிப்பிட இயல்புகளை இங்கே கொண்டுவருவதற்கும் தொடர்ச்சியான அணுகுமுறை திட்டமிட்டு மேற்கொள்ளப்படவுள்ளது. செயற்கைக்கோள் துணையுடன் இவை ஒவ்வொன்றும் கண்காணிக்கப்படவும் உள்ளன.

இதேபோல மலாவியில் புதிய இடத்திற்குப் பழக்கப்படுத்தப்பட்ட சிவிங்கி களில், ஒரு வருடம் கடந்த நிலையில் 80% சிவிங்கிகள் இனச்சேர்க்கையில் ஈடுபட்டுவருகின்றன. இருந்தாலும் அது ஒரே கண்டத்திற்குள், ஒரே நில அமைப்பிற்குள் நடந்த மாற்றம் அது. ஆனால், இங்கோ கண்டம் விட்டு கண்டம், புதிய காலநிலை, சூழல், பருவமழை தாக்கம், வலுவான தாக்குதல்கள் ஆகியவற்றையெல்லாம் சமாளித்து சிவிங்கிகள் தமது வலுவான சந்ததிகளை இந்தியாவில் வளர்த்தெடுக்குமா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும். - கட்டுரையாளர், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் - எழுத்தாளர்; தொடர்புக்கு: chekarthi.world@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in