எழுத்தறிவித்த மூராங்குச்சி
இணையக் கடலில் கொட்டிக் கலக்கும் எண்ணற்ற பிளாஸ்டிக் குப்பைகளுக்கிடையே அரிதான பவழத்திட்டுதான் ‘நளியிரு முந்நீர்’ என்ற வலைப்பூ (முகவரி: http://mohanareuban.blogspot.in/). இதன் ஆசிரியர் மோகன ரூபன். மண் சார்ந்த சொற்கள், உயிரியல் அறிவு, இலக்கிய அறிவு எல்லாம் சேர்ந்த அபூர்வமான கலவைதான் மோகன ரூபனின் பதிவுகள்.
பன்மீன் கூட்டம் என்ற சிறு நூல் மூலம் ஏற்கெனவே இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பரிச்சயமானவர்தான் இவர். கடல் உயிரினங்களின் பெயர்களை ‘கடல் சிங்கம்’, ‘கடல் குதிரை’ என்றெல்லாம் ஆங்கிலத்திலிருந்து அப்படியே தமிழில் மொழிபெயர்த்துப் பலரும் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது, கடலோடிகளின் வழக்கில் கடல் உயிரிகளின் சரியான தமிழ்ப் பெயர்களை அந்த நூலில் அறிமுகப்படுத்தியிருப்பார். எடுத்துக்காட்டாக, ‘Dugong’ என்ற உயிரினத்தின் தமிழ் பெயர் ‘ஆவுளியா/ஆவுளி’ என்றும் ‘Dolphin’ என்ற உயிரினத்தின் தமிழ் பெயர் ‘ஓங்கில்/ஓங்கல்’ என்றும் சொல்லித் தெளிவு ஏற்படுத்தியிருப்பார். அந்தச் சிறு நூலோடு நின்றுவிடாமல் கடல் உயிர்களைப் பற்றித் தனது வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதிவருகிறார்.
பிளாஸ்டிக் அணுகுண்டு
கடல் என்றால் நமக்குப் பாறை, சுறா, கானாங்கெளுத்தி, திருக்கை, இறால் போன்றவற்றைத் தாண்டி அதிகம் தெரியாது. மோகன ரூபன் விதவிதமான கடல் உயிரிகளை, அவற்றின் அழகிய பெயர்களுடன், வகைகளின் பெயர்களுடன், அவற்றின் பண்புகளுடன் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
ஓங்கல் ஆமை (Leather back turtle) என்ற பிரம்மாண்டமான ஆமையைப் பற்றிய சமீபத்திய பதிவிலும் பல தகவல்களை அவர் சொல்கிறார். ஓங்கல் ஆமைக்குத் தோணி ஆமை, தோல்முதுகு ஆமை, ஏழு வரி ஆமை என்ற பெயர்களும் இருக்கின்றன என்கிறார். நமக்குத் தெரியாத விஷயங்களாக இருக்கின்றனவே என்று அதிசயித்துப் படித்துக்கொண்டிருந்தால், ஒரு இடத்தில் துணுக்குறச் செய்கிறார்: ‘கடலில் குப்பையாக வந்துசேரும் பிளாஸ்டிக் பைகளை, சொறி மீன் என நினைத்து ஓங்கல் ஆமைகள் உண்டுவிடுவதுண்டு. இதனால் அழிவின் விளிம்பில் இப்போது நீந்திக்கொண்டிருக்கின்றன இந்த ஆமைகள்.’ நாம் கடலில் எறிந்துகொண்டிருக்கும் பிளாஸ்டிக் அணுகுண்டுகளுக்கு எத்தனை எத்தனை உயிர்களைக் காவுகொடுத்துக்கொண்டிருக்கிறோம்!
வாத்தின் மூதாதை?
கொட்டலசு (Barnacle) என்ற உயிரினம் பற்றிய தகவல்களும் நமக்குப் புதியவையே. வாத்து கொட்டலசு என்ற கொட்டலசிலிருந்து வாத்துகள் தோன்றியதாகப் பழங்காலத்தில் மனிதர்கள் நம்பியிருக்கிறார்கள் என்பதும், கப்பலின் அடியில் ஒட்டியிருக்கும் வாத்து கொட்டலசு பின்னர்ச் சிறகுகள் முளைத்து வாத்தாக மாறிப் பறப்பதாகவும் நம்பியிருக்கிறார்கள் என்பதும் மனிதர்களின் கற்பனை வளத்துக்கு அழகான சான்று. ‘கொட்டலசு என்ற பெயரே தமிழில் திரிந்து இப்போது ஆங்கில பாணியில் கொட்லாஸ் என அழைக்கப்படுகிறது’ என்று கூறும் மோகன ரூபன் ‘விரைவில், கொட்லாஸ் மீண்டும் தமிழில் கொட்டலசாக மாறும் என நம்புவோமாக…’ என்று பதிவு செய்கிறார்.
மூடியைத் திறக்கும் கணவாய்
பேய்க்கணவாயை (ஆக்டோபஸ்) பற்றி சொல்லும்போது ‘தக்கை கொண்டு மூடிவைத்த கண்ணாடிக் குப்பியைக் கணவாயால் திறக்க முடியும். மூடியைத் திருகித் திருகித் திறக்கும் அறிவும் கணவாய்க்குப் உண்டு’ என்கிறார். கணவாய்க்கு பேய்க்கடம்பன், சிலந்தி மீன், நீராளி, சாக்கு சுருள் போன்ற பெயர்களும் இருக்கின்றன. ‘முட்டிக் கணவாய், பீலிக் கணவாய், ஓட்டுக் கணவாய், பூங்கணவாய், கூந்தல் கணவாய், தூண்டில் கணவாய், பேய்க் கணவாய் எனக் கணவாய்களின் உலகம் மிகப் பெரியது’ என்று ஒரு இடத்தில் எழுதுகிறார். கணவாய்களின் உலகம் பெரியதாக இருக்கலாம். மனிதர்களின் மனம் சிறியதாகிக்கொண்டே வருவதால் கணவாய்களின் உலகமும் சிறியதாகிக்கொண்டுவருவதை நாம் உணர வேண்டும்.
கடலோடிகளின் ஊடாட்டம்
ஜெல்லி மீனுக்குச் சொறி மீன், இழுது மீன் என்ற பெயர்கள் இருப்பதாக மோகன ரூபன் சொல்கிறார். சொறி மீனிலேயே அழுவைச் சொறி, காக்காய் சொறி, வழுப்பினி சொறி, இட்லி சொறி, மணி சொறி, தவிட்டுச் சொறி, குவ்வரவுச் சொறி, நுங்கு சொறி, குடுக்கை சொறி, வௌச் சொறி, கூரமா சொறி, வெளிர் சொறி என்று ஏராளமான இனங்கள் இருப்பதாக அடுக்கிக்கொண்டே போகிறார்.
‘Sea Urchin’ என்ற ‘மூரை’ முட்கள் கொண்டவை. அவற்றின் முட்களுக்கு ‘மூராங்குச்சி’ என்ற பெயர் உண்டு. இந்த மூராங்குச்சிகளை சிலேட்டுப் பலகைகளில் எழுதுகோலாகப் பயன்படுத்த முடியும் என்றும் கடற்கரை சிற்றூர்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு ‘அ'னா, ‘ஆ'வன்னா கற்றுக்கொடுத்த பெருமை இந்த மூராங்குச்சிகளைச் சேரும் என்கிறார் மோகன ரூபன்.
ஒளிரும் நுண்பாசிகள் பற்றிய அவருடைய பதிவு அழகு! கடலின் மேற்பரப்பில் இந்த நுண்பாசிகள் ஒளிவீசியபடி வந்து சேர்ந்தால் அது ‘கவர் எழுப்பம்' என்றும், கடல் அடியில் மீண்டும் அடங்கினால் அது ‘கவர் அடக்கம்' என்றும் பெயர்கள் உண்டாம். இன்னும் முரல் மீன்கள், எக்காள மீன், திருக்கை என்று கடல் உயிரினங்களின் உலகத்துக்குள் முக்குளித்துத் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார் மோகன ரூபன்.
உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஊடாட்டம் மிக முக்கியமானது. ஒன்றையொன்று அழித்தொழிக்காத இயல்பான ஊடாட்டமாக அது இருக்க வேண்டும். கடலோடி இன மக்கள் கடலுயிர்களோடு எந்த அளவுக்கு ஊடாடிவருகிறார்கள் என்பது மோகன ரூபனின் எழுத்தில் தெரிகிறது. இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைவரும் படிக்க வேண்டிய பதிவுகள் இவை!
மேலும் அறிய: >http://mohanareuban.blogspot.in/
மோகனரூபன் தொடர்புக்கு: mohanuvari@gmail.com
