

மாலத்தீவின் தலைநகரமான மாலே நகரின் துறைமுகத்துக்கு ஒருமுறை சென்றிருந்தபோது, அங்கிருந்து மணல் மூட்டைகள் வெளியாவதைக் கண்டேன். மாலத்தீவுகளின் எந்தத் தீவிலும் ஆறுகள் கிடையாது. கடல் மணலிலும் கட்டிடம் கட்ட முடியாது. பின்னர் இவை எங்கிருந்து இறக்குமதியாகின்றன என்று விசாரித்தபோது கிடைத்த பதில் ‘தூத்துக்குடி’.
ஆம், தமிழகத்தின் ஏதோவொரு ஆற்றிலிருந்து அள்ளப்பட்ட மணலே மாலத்தீவில் கட்டிடங்களாக உருமாறிக்கொண்டிருக்கின்றன. பாலைவன நாடுகள் என்றழைக்கப்படும் வளைகுடா நாடுகளில் ஆற்றுமணல் இல்லாததால், ஏதோவொரு நாட்டிலிருந்தே மணல் இறக்குமதி செய்யப்படுகின்றது. துபாயில் கடல் நடுவே பேரீச்சை மர வடிவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ‘பாம் ஐலண்ட்’ தீவை உருவாக்க ஆஸ்திரேலியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டது.
சிங்கப்பூருக்கு மணல் விற்பதற்கெனவே 24 இந்தோனேசியத் தீவுகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. கேரள, கர்நாடக மாநிலங்களுக்குத் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யும் மணல் போதவில்லை. எனவே, கேரளம் கம்பூச்சியாவில் இருந்தும், கர்நாடகம் மலேசியாவிலிருந்தும் தம் மேலதிகத் தேவைக்கு மணலை இறக்குமதி செய்கின்றன.
யாருக்கான வளர்ச்சி?
மணல் இன்று லாபமிக்கதொரு வணிகம். நகரமயமாதலால் உலகம் முழுதும் மணலின் தேவை ஆண்டுக்கு 5% உயர்ந்து வருகிறது. உலக மணல் பயன்பாட்டில் பாதிச் சீனாவுக்குச் சொந்தம். ஆண்டுக்கு 100 கோடி டன் மணலை சீனா இறக்குமதி செய்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போர் நிகழ்ந்தால் அதன் முதன்மைக் காரணிகளில் ஒன்றாக மணல் இருக்கும் என்று அரசியல் பொருளாதார நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
நாம் வியந்து பார்க்கும் கட்டிடங்கள் அனைத்திலும் மணல் ஒளிந்துகொண்டுள்ளது. உலகின் உயரமான கட்டிடமான 828 மீட்டர் உயரமுள்ள துபாயின் ‘புர்ஜ் கலிபா’ கட்டிடம் கட்டுவதற்கு 33 கோடி லிட்டர் கான்கிரீட் பூச்சுப் பயன்படுத்தப்பட்டது. அதில் கால் பங்கு மணல்.
ஒருவர் வீடு கட்டக் கூடாதா என்றால், கட்டலாம். வீடு என்பது வசிப்பவரின் தேவைக்குப் போதுமானதாக இருக்க வேண்டும். ஆனால், மாளிகை என்பது செல்வ நிலையின் அடையாளம். இரண்டு பேர் வசிப்பதற்கும் பத்தாயிரம் சதுர அடி மாளிகைக் கட்டப்படுவதைப் பார்க்கிறோம். முகேஷ் அம்பானி மும்பையில் கட்டியுள்ள 27 அடுக்கு மாளிகை ஏறக்குறைய ஐந்து லட்சம் சதுர அடி பரப்புடையது. ஆனால், அங்கிருந்த அவருடைய குடும்ப உறுப்பினர்களோ மொத்தம் ஐந்தே பேர்தான்.
அதே மும்பையில்தான் வீடற்றுச் சேரிப்பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் குவிந்துள்ளனர். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்தியாவின் ஒன்பது கோடி நகர்ப்புற வீடுகளில் ஒரு கோடியே பத்து லட்சம் வீடுகள் காலியாக இருந்தன என்கிற தகவலை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். ஆனாலும், வளர்ச்சித் திட்டங்கள் குறையவில்லை. யாருக்காக அந்த வளர்ச்சி என்பதுதான் கேள்வி.
எங்கும் எதிலும்
கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்பட்ட இயற்கை வளங்களின் கொள்ளளவு 1900-2010-க்கு இடையிலான 110 ஆண்டுகளில் 23 மடங்கு உயர்ந்துள்ளது. உலக அளவில் 80,000 கோடி டன் இயற்கை வளம் இத்தகைய கட்டுமானங்களில் புதைந்துள்ளன. இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு வல்லரசு நாடுகளில் உள்ளன. 2012ஆம் ஆண்டில் மட்டும் உலகில் 2,220 கோடி டன் மணல் எடுக்கப்பட்டது. உலக ஆறுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் இவ்வளவு மணலைப் புதிதாகக் கொண்டுவர முடியாது.
சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய எவ்வித சிந்தனையுமின்றிக் கண்ட இடங்களையும் சிமெண்டால் பூசும் போக்கு வளர்ந்துவருகிறது கல்லணைக் கால்வாய், கீழ்பவானி திட்டக் கால்வாய் என்று ஆறுகளுக்கே சிமெண்ட் பூசும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வளவுக்கும் கான்கிரீட்டின் ஆயுட்காலம் சராசரியாக ஐம்பது ஆண்டுகள் எனப்படுகிறது. அதாவது, அத்தனை கட்டிடங்களும் என்றோ ஒருநாள் இடிந்து கான்கிரீட் கழிவாக மாறப் போகிறது.
நாம் உருவாக்கும் கான்கிரீட்டைப் புவிக்கோளம் முழுமையும் பரப்பினால் இப்போதே இரண்டு மில்லிமீட்டர் தடிமன் அளவுக்கு அந்தப் பூச்சு இருக்கும் எனப்படுகிறது. ஆனாலும், நாம் புவிக்கோள் முழுமையுமே கான்கிரீட் பூசாமல் நிறுத்த போவதில்லை. அவை இடியும்போது புழுதியாகவும் தூசியாகவும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்தியாவில் மட்டும் ஓராண்டில் ஏறத்தாழ மூன்று கோடி டன் வரை கட்டிடக் கழிவு உருவாகிறது. இவற்றில் ஐந்து விழுக்காடு மட்டுமே மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. சிங்கப்பூரில் இது 98% ஆக உள்ளது. நாம் எப்போது அந்த இடத்துக்கு முன்னேறப் போகிறோம்?
(அடுத்த வாரம்: காக்கக் காக்க நீர்வளம் காக்க)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com