அந்தமான் விவசாயம் 05: அகலப் பாத்தி நன்னீர் குளங்கள்

அந்தமான் விவசாயம் 05: அகலப் பாத்தி நன்னீர் குளங்கள்
Updated on
1 min read

சமீபகாலமாக விவசாயிகளிடம் சராசரி நிலக் கையிருப்பு குறைந்துவருவதால், அவர்களுடைய வாழ்வாதாரமும் சரிந்துவருகிறது. அதே நேரத்தில் அந்தமான் தீவுகளில் நன்னீர் மீன்களுக்கான சந்தை மதிப்பு அதிகரித்துவருகிறது. விவசாயிகளின் மேற்கண்ட இடரை நீக்கி, பலன் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் அகலப் பாத்தி நன்னீர் குளங்கள். இது கடலோரச் சீர்கெட்ட நிலங்களுக்கும் நல்ல வடிகால் உள்ள இடங்களுக்கும் பொருந்தும்.

நிலத்தில் 2-3 மீட்டர் ஆழத்துக்கு மணல் வெட்டப்பட்டு, வெட்டப்பட்ட அதே வரிசையில் 1-1.5 மீட்டர் உயரமும் நான்கு மீட்டர் அகலமும் உள்ள அகலப் பாத்திகள், குளத்தைச் சுற்றிலும் அமைக்கப்படுகின்றன. அவ்வாறு அமைக்கும்போது குளத்தின் விளிம்பிலிருந்து ஒரு மீட்டர் தூரத்திலும், சரிவு 1:1 என்ற விகிதத்திலும் இருக்க வேண்டும். இம்முறையில் அகண்ட கரைகள் (பாத்திகள்) குளத்தைச் சுற்றிலும் அமைக்கப்படுவதால் மழைநீரை நிலமட்டத்துக்கு மேலாகவும் சேகரிக்க முடியும். மழைக்காலத்தில் அகலப் பாத்தியில் உள்ள உப்பு மற்றும் நச்சுப் பொருட்கள் மழைநீரால் அடித்துச் செல்லப்படுகின்றன. மேலும், வெள்ளநீராலும் கடல்அலை ஏற்றத்தாலும் இக்குளங்கள் பாதிக்கப்படுவதில்லை.

இக்குளங்களில் ஒரு கன மீட்டருக்கு 2-3 நன்னீர் மீன் குஞ்சுகளை விட்டால், ஒரு ஹெக்டேருக்கு 1.5 முதல் 2 டன்வரை மகசூல் கிடைக்கும். குளத்தின் கரை அகலப் பாத்திகளாக மாற்றப்படுவதால் 4 - 5 வரிசை காய்கறிகள் பயிரிடவும் ஏதுவாகிறது. மேலும், சேகரிக்கப்பட்ட மழைநீரைக் கொண்டு தென்னை, தென்னையில் ஊடுபயிராகக் காய்கறிகளுக்கும் நீர்ப்பாசனம் தர முடியும்.

கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் தொடர்புக்கு: velu2171@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in