இயற்கை 24X7: மணல் – இயற்கை மருத்துவர்

இயற்கை 24X7: மணல் – இயற்கை மருத்துவர்
Updated on
2 min read

பெருமணல் உலகின் அவ்வளவு மணலும் எங்கிருந்து வந்து குவிந்தது? அதிலும் இந்த அருங்கனிமங்கள் எப்படி மணலுக்குள் பொதிந்தன? அவை அனைத்தும் நம் மேற்கு மலைத் தொடரின் அன்பளிப்பு. ஆற்று மணலின் வழியே குறிப்பாகப் பொருநை என்னும் தாமிரபரணி வழியாக வந்து குவிந்ததே அம்மணல்.

ஆறுகள், நீரை மட்டும் கொண்டு வருவதில்லை. நீருடன் இணைந்து மண லையும் அவை அள்ளிவருகின்றன. கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு மட்டுமல்ல, கடற்கரை வாழ் மக்களும் வாழ ஆற்றுநீர் கடலில் கலக்க வேண்டியது அவசியம். நீருடன் மணலும் கடற்கரைக்குச் சென்றால்தான் அங் குள்ள மக்கள் நீர்வளத்துடன் வாழ முடியும். அவர்களும் நம்மைப் போன்ற மக்கள்தானே?

உலகளவில் கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரத்துக்குள் 40 கோடி மக்களும், 25 மீட்டர் உயரத்துக்குள் நூறு கோடி மக்களும் வசிக்கின்றனர் என்கிறார் மார்க்சிய சுற்றுச்சூழல் அறிஞர் பெல்லமி பாஸ்டர்.

வீணாகக் கலக்கிறதா?

தற்போதைய மதிப்பீட்டின்படி உலகின் 25% ஆறுகள் கடலில் கலப்பதற்கு முன்பே வறண்டுவிடுகின்றன. இது அபாய நிலையைக் காட்டுகிறது.

ஆனாலும், ‘ஆற்றுநீர் கடலில் வீணாகக் கலக்கிறது’ என்கிற ஒப்பாரி மட்டும் இன்னும் ஓயவில்லை. அறவே சுற்றுச்சூழல் புரிதலற்ற இத்தகைய ஓலங்களை ஊடகங்களும், மக்களும் எழுப்புகின்றனர். ஆற்றுநீர் கடலில் கலந்தால்தான் பருவமழை தவறாது; பருவமழை பெய்தால்தான் ஆற்றில் நீரோடும்.

இது அடிப்படைப் பாடம். இன்று ஆறுகளில் நீருமில்லை; மணலும் இல்லை. மணல் இருந்தால்தானே நீர் இருக்கும்? ஆற்றுமணல் நீரைத் தேக்கி நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்கும். தவிர, மணல் ஓர் இயற்கை மருத்துவர். நோய்கள் வரும் முன்னே தடுக்கும் மருத்துவர்.

சுமார் 37 வகையான உயிர்க்கொல்லி நோய்களுள் 21 நோய்கள் நீருடன் தொடர்பு டையவை. அதனால்தான், நீர் நமக்கு வடிகட்டி வழங்கப்படுகிறது. மணல், கூழாங்கல் போன்ற ஊடகங்களின் வழியே நீரைச் செலுத்தி வடிகட்டுவது (Slow sand filters) உலகெங்கும் நடைமுறையாக உள்ளது.

மணல் துகள்களின் வழியே நீர் உட்புகுகையில் நோய்ப் பரப்பும் நுண்ணுயிர்கள் இறந்துவிடும். உள்ளாட்சி அமைப்புகள் ஆற்றுப்படுகையில் கிணறு அமைத்து (Filter point or Infiltration gallleries) எடுக்கும் நீரில் குளோரின் கலந்து பாதுகாப்பான குடிநீரை வழங்கி வந்தன. இன்று, மணல் இல்லாமையால் மலத்தில் காணப்படும் கோலிஃபார்ம் உள்ளிட்ட பல நுண்ணுயிர்கள் பெருகியுள்ளன.

சூறையாடப்படும் செல்வம்

மணலைச் செயற்கையாக உருவாக்க முடியாது. தட்பவெப்ப காரணிகளால் மலைகளும் குன்றுகளும் தேய்ந்து கல்லாக மாறுகின்றன. கல் உடைந்து மணலாகிறது. ஒரு மணல் துகள் உருவாகப் பத்தாயிரம் ஆண்டுகள் ஆகலாம். அதிகம் போனால் ஆண்டுக்கு 10 செ.மீ. மணல்தான் ஆற்றில் படியும். அத்தகைய செல்வத்தைத்தான் நாம் இழந்து நிற்கிறோம்.

இருக்கிற இடத்தில் மணல் அள்ளினால் பரவாயில்லை. கிடைக்கிற இடத்தில் எல்லாம் அள்ளினார்களே என்பார்கள். அதனால்தான், ஆறுகள் பாதாளமாகக் காட்சியளிக்கின்றன. மணல் என்பது சிறுகனிமம். அவற்றை எடுப்பதற்கு எதிராக நிறையக் கட்டுப்பாடுகள் உள்ளன. அந்தச் சட்டங்கள் சிலவற்றைப் படிக்கையில் நகைச்சுவைத் துணுக்குகளைப் படிப்பதுபோல, நமக்கே சிரிப்பு வரும்.

ஆற்றங்கரையின் உட்புறத்தில் 50 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி விட்டு மணல் குவாரி அமைக்கப்பட வேண்டும் - ஒரு மீட்டர் ஆழம் வரைதான் மணல் எடுக்கவேண்டும் - ஆற்றின் இயற்கையான நீர்ப்போக்கு, கரைகள் பாதிக்கப்படக்கூடாது - காலை எட்டு மணி முதல் மாலை எட்டு மணி வரையே மணல் அள்ள வேண்டும் - இவ்விதிகள் மீறப்படாமல் கண்காணிக்க மாதமொரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற வேண்டும். இவ்விதிகள் எந்த அளவுக்கு நேர்மையாகக் கடைப்பிடிக்கப்பட்டன என்பதற்கு ஆறுகளின் இன்றைய நிலைமை சாட்சியம் சொல்கிறது.

2006இல் மணல் கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் எனத் தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அந்தக் குண்டர் சட்டத்தின் கீழ் மணல் லாரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களுமே கைது செய்யப்பட்டனர். ஒருவேளை குவாரிகளின் உரிமையாளர்களான ‘மணல் தாதா’க்கள் அனைவரும் ஒல்லியாக இருந்தார்களோ என்னவோ, விவரம் தெரியவில்லை. எப்படியோ மணல் போனது போனதுதான்.

ஆனால், அவை எங்கே போகின்றன என்ற கேள்விக்கான பதில்களுள் ஒன்று, மாலத்தீவு நாட்டில் நான் வசித்தபோது கிடைத்தது.

(அடுத்த வாரம்: கான்கிரீட் உலகம்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்

தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in