

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட கடலோர, தாழ்வான பகுதிகளில் உள்ள உவர் நிலப்பகுதியை அடுத்தடுத்து அமைக்கப்பட்ட அகலமான வாய்க்காலாகவும் பாத்திகளாகவும் மாற்றி வடிவமைப்பதே அகலப் பாத்தி - வாய்க்கால் (நாழி) முறை.
இதில் இயந்திரங்களின் உதவியுடன் 5-6 மீட்டர் அகலமும் 1.5 2.0 மீட்டர் ஆழமும் கொண்ட வாய்க்கால்கள் கோடைக் காலத்தில் வெட்டப்படுகின்றன. அவ்வாறு வெட்டி எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு அதே வரிசையில் (மேல் புற மண் பாத்தியின் மேலும், ஆழத்தில் வெட்டப்பட்ட மண் பாத்தியின் கீழ்ப் பகுதியில் இருக்குமாறும் போடப்படுகிறது) நான்கு மீட்டர் அகலமுள்ள பாத்திகள் வாய்க்காலின் விளிம்பில் இருந்து ஒரு மீட்டர் தள்ளி 1:1 என்னும் சரிவு விகிதத்தில் உருவாக்கப்படுகின்றன. நிலத்தின் அமைப்புக்கு ஏற்றதுபோல் 40-80 மீட்டர்வரை நீளம் இருக்கலாம். இவ்வாறு தொடர்ச்சியாக ஒரே இடத்தில் மூன்று முதல் ஆறு அகலப் பாத்தியும் வாய்க்காலும் உருவாக்கப்படுகின்றன.
உப்புத்தன்மை குறைய
பின்னர் பாத்திகளைச் சமன் செய்து, நான்கு புறமும் ஒரு அடி அளவில் சிறிய மேடுகள் அமைத்து மழைநீர் சேகரிக்கப்படுகிறது. இந்த மழைநீர் மண்ணில் உள்ள உப்பு, மற்ற நச்சுப்பொருட்களை மழைக்காலத்தில் அடித்துச் சென்று அகல வாய்க்காலில் சேர்க்கிறது. இதனால் மண்ணின் உப்புத்தன்மை குறைகிறது. அதேவேளையில், வாய்க்காலில் சேமிக்கப்பட்ட நீரின் உவர்ப்புத்தன்மை அதிகரிக்கிறது. ஆகவே, முதலாண்டு இறுதியில் வாய்க்காலில் உள்ள நீரை வடித்துவிடுவது நல்லது. இரண்டாம் ஆண்டு முதல் வாய்க்காலில் சேகரிக்கப்படும் மழை நீரின் உப்புத்தன்மை வெகுவாகக் குறைந்துவிடும் என்பதால், பாசனம் செய்யவும் மீன் வளர்க்கவும் உகந்ததாக அது மாறுகிறது. அந்தமானில் அதிக அளவு மழை பெய்வதால் இம்முறை சாத்தியமாகிறது.
அந்தமான் தீவுகளில் இவ்வாறு சேகரிக்கப்பட்ட மழை நீரைக் கொண்டு பாத்திகளில் ஆண்டுக்கு மூன்று முறை காய்கறிகள் பயிரிடப்பட்டுவருகின்றன. இத்துடன் அகலப் பாத்திகள் தரைமட்டத்திலிருந்து 1- 1.5 மீட்டர் உயரத்தில் இருப்பதால் வெள்ளநீரால் சூழப்பட்ட போதும் பயிர்கள் பாதிக்கப்படுவதில்லை. அதேவேளையில் வாய்க்காலில் நெல்லும் மீனும் மீன் குஞ்சுகளும் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. இதனால் ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட தாழ்ந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹெக்டேர் நிலத்தில் இருந்து, ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய்வரை வருவாய் கிடைக்கிறது.
(அடுத்த வாரம்: நெல்லும் மீனும் - இரட்டை லாபம்)
கட்டுரையாளர், அரசு வேளாண் அலுவலர்
தொடர்புக்கு: velu2171@gmail.com