

சிப்கோ இயக்கம்
அன்றைய உத்தரப்பிரதேச மாநிலத்தின் (தற்போது உத்தராகண்ட்) ஒரு பகுதியாக இருந்த காடுகளில் மரங்களை வெட்டுவதற்குத் தனியார் நிறுவனத்துக்கு 1973 இல் அரசு அனுமதி அளித்தது. தங்கள் வாழ்வாதாரம் மரங்களை நம்பித்தான் இருக்கிறது எனவும் காடழிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாகவும் அலக்நந்தாவில் உள்ள மண்டல் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பெண்கள் மரங்களைக் கட்டியணைத்தபடி போராடினார்கள்.
அவர்களை மீறி மரங்களை வெட்ட இயலவில்லை. பெண்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் இமயமலைக் காடுகளின் பிற பகுதிகளுக்கும் பரவியது. 1974இல் ரேனி பகுதியில் மரம் வெட்ட வந்தவர்களை எதிர்த்து கௌரா தேவி என்பவர் தலைமையில் இதே போன்ற போராட்டம் நடைபெற, அந்தக் காடுகளில் மரம் வெட்ட பத்து ஆண்டு களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இந்திய சுற்றுச்சூழல் போராட்டங்களில், முன்னோடிப் போராட்டம் இது.
நர்மதை பாதுகாப்பு போராட்டம்
வளர்ச்சியின் பெயரால் சூறையாடப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும் மேதா பட்கரால் 1980-களின் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இது. நர்மதை பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பழங்குடியின, ஏழை மக்களின் வாழ்க்கையைத் தரைமட்டமாக்கி அதன் மீது கட்டப்படும் இரண்டு அணைகளுக்கு எதிராக லட்சக்கணக்கான பெண்களுடன் மேதா பட்கர் போராடினார்.
சர்தார் சரோவர், நர்மதா சாகர் ஆகிய இரண்டு அணைகளைக் கட்டுவதன் மூலம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதியாக்கப்பட்ட கொடுமையையும் அவர்களுக்கு இழப்பீடு என்கிற பெயரில் நடைபெற்ற கண்துடைப்பு நாடகத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். அணைகள் கட்டுவதால் ஏற்படவிருக்கும் பேரழிவை இந்தப் போராட்டங்கள் வெளிச்சமிட்டுக் காட்டின.
போபால் போராட்டம்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டுவந்த ‘யூனியன் கார்பைடு’ அமெரிக்க நிறுவனத்தில் 1984 டிசம்பர் 2 இரவு விஷ வாயு கசிந்ததில் ஆயிரக்கணக்கானோர் உடனடியாகப் பலியாகினர். ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் மரணத்துக்கு நிகரான பாதிப்பையும் இழப்பையும் எதிர்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கேட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் போராடினர்.
‘உலகம் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் குற்றவாளிகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டுவிட்டது’ என்று அவர்கள் ஓங்கி ஒலித்தனர். காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டும் எதற்கும் அசையாத உறுதியுடன் அப்பெண்கள் போராடினர். அவர்களில் முன்னணியில் நின்ற ரஷீதா பீ, சம்பா தேவி ஆகியோருக்கு கோல்ட்மன் சுற்றுச்சூழல் பரிசு (2004) கிடைத்தது.