

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் சுதந்திர இந்தியாவில் உருவான முன்னெடுப்புகள்:
# பசுமை / வெண்மைப் புரட்சிகள்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி வெகுவாகக் குறைந்தது. உலக அளவில் அவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. அந்தச் சூழலில், உற்பத்தித் துறைகளில் தலைகீழ் மாற்றங்கள் நடைபெற்றன. உணவு, உடை போன்ற உலக மக்களது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை அந்த மாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு பூர்த்திசெய்தன.
சுதந்திர இந்தியாவில் பசுமைப் புரட்சியும் வெண்மைப் புரட்சியும் முக்கியமானவை. பசுமைப் புரட்சியால், இந்தியாவின் வேளாண் உற்பத்தி பன்மடங்கு பெருகியது. உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றது. வெண்மைப் புரட்சியால் பால் உற்பத்தியிலும், பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தியிலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது.
இப்படி ஒருபுறம் உணவு மூலப்பொருள் உற்பத்தி பெருகினாலும், நவீன வேதிப்பொருட்களையும் இயந்திரங்களையும் இந்தத் திட்டங்கள் பெருமளவு சார்ந்திருந்ததால், சுற்றுச்சூழலில் ஏற்பட்ட அழிவு சீரமைக்கப்படவில்லை.
# வனப் பாதுகாப்புச் சட்டம்
காடு என்று வரையறுக்கப்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைகள், சுரங்கங்கள், அணைகள் போன்ற காடு சாராத திட்டங்களைச் செயல்படுத்தும் போது தேவைக்கு அதிகமாகவோ, தேவையில்லாமலோ காடு அழிக்கப்படுகிறது. இதைத் தடுக்கும் நோக்கில் 1980இல் வனப் பாதுகாப்புச் சட்டம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்டது.
வனப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, காடுசாரா காரணங்களுக்காகக் காட்டு நிலங்களை ஒதுக்குவது பெருமளவில் குறைந்தது. ஆனால் அதன் பின்னர், தொடர்ச்சியாகப் பல சட்டத் திருத்தங்களால் நிலைமை மோசமடைந்தது. 2008-2019 காலத்தில் மட்டும் 2,51,727 ஹெக்டேர் காட்டு நிலம், காடு சாரா பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 4 அன்று வனப்பாதுகாப்பு சட்டத் திருத்த முன்வரைவு வெளியிடப்பட்டது. அது காடுகளை பெரும் அழிவுக்கு இட்டுச் செல்லும் என்று கூறி சூழலியல் செயல் பாட்டாளர்கள் எதிர்த்து வருகிறார்கள்.
# குறையும் காடுகளின் பரப்பு
1947 உடன் ஒப்பிடும்போது இந்தியாவின் மக்கள்தொகை மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது. 1951-80க்கு இடைப்பட்ட காலத்தில் 42,380 சதுர கிலோமீட்டர் பரப்பிலான காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
அரசு அமைப்பான ‘தேசிய தொலையுணர்வு மையம்’ (NRSC) வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் வரைபடங்கள் காடுகளின் அழிப்பை வெட்டவெளிச்சமாக்கி உள்ளன. 2015-க்குப் பிறகு இந்தியக் காடுகளின் நிலை மிக மோசமாகச் சரிந்துவருவதையும் அதன் தரவுகள் உணர்த்துகின்றன. இந்திய நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி காடாக இருந்துவருகிறது.
# ஞெகிழிக் கழிவு
ஞெகிழிக் கழிவு, சாக்கடைகள்-வடிகால்கள், ஆறு-வாய்க்கால்கள், தெரு-சாலைகள் என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நாம் குடிக்கும் தண்ணீரிலும், சுவாசிக்கும் காற்றிலும்கூட நுண்ஞெகிழித் துகள்கள் கலந்துவிட்டன. இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பொருட்களுக்கு எதிரான தடை 2019 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பொருட்கள் 2022 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இப்போதுதான் முதல் அடியையே எடுத்துவைத்துள்ளோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.
# புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்கள்
2030க்குள் இந்தியா தனது ஆற்றல் தேவையின் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களின் மூலம் பெறும் என்று அறிவித்திருக்கிறது. மின்னாற்றல் உற்பத்தித் துறையில் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறையைப் படிப்படியாகக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களின் அடிப்படையிலான உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது.
2030 இல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் 450 ஜிகாவாட் என்கிற இலக்கை இந்தியா எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் காற்றாலை மின்னுற்பத்தித் திறனில் 25 சதவீதமும், தேசியப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் 15 சத வீதமும் தமிழ்நாட்டின் பங்களிப்பாக இருக்கின்றன.
# காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம்
இந்தியக் காடுகளில் உள்ள உயிரினங்கள், பறவைகள், தாவரங்கள் உள்ளிட்ட காட்டுயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் 1972இல் உருவாக்கப்பட்ட சட்டம் இது. காட்டுயிர்களின் வாழிட மேலாண்மைக்கு உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி காட்டுயிர்களை வேட்டையாடுவதும், அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றம். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 17இல் ‘காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதா 2021’ஐ மக்களவையில் மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
# புலி செயல்திட்டம்
இந்தியாவில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 40,000 என இருந்த புலிகளின் எண்ணிக்கை, 1972ல் 1872 என அருகியது. இந்நிலையில் புலிகளையும், அவை வசிக்கும் காடுகளையும் பாதுகாக்கும் நோக்கில் 1973இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி புலி செயல்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் புலிகளின் வழித்தடங்களைப் பாதுகாத்தல், புலிகளின் வசிப்பிடங்களை மேம்படுத்துதல், காட்டுத் தீ ஏற்படாமல் தடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்போது புலிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
# அறிவியல்-சுற்றுச்சூழல் மையம் (CSE)
1961இல் பிறந்த சுனிதா நாராயண், இந்தியாவின் முன்னணி சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களில் ஒருவர். 1982இலிருந்து அனில் அகர்வாலுடன் இணைந்து டெல்லி அறிவியல் - சுற்றுச்சூழல் மையத்தில் (CSE) அவர் பணியாற்றத் தொடங்கினார். இந்தியச் சுற்றுச்சூழலின் நிலை குறித்த அறிக்கையை 1980களிலேயே அவர்கள் வெளியிட்டனர்.
2003இல் பெப்ஸி, கோக கோலா உள்ளிட்ட 12 குளிர் பானங்களில் மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் இருப்பதை இந்த மையத்தின் ஆய்வு வெளிப்படுத்தியது, நாடெங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சுற்றுச்சூழலுக் கென்று வெளியாகும் ‘டவுன் டு எர்த்’ ஆங்கில இதழையும் இந்த மையம் வெளியிட்டுவருகிறது.
# காற்று மாசு
இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் மக்கள் காற்று மாசு பாதிப்பினால் மடிகின்றனர். 1998ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் சராசரி காற்று மாசு ஆண்டுக்கு 61.4 சதவீதம் அதிகரித் துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் டெல்லி, பிஹார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காற்று மாசு பிரச்சினை அதிக அளவில் உள்ளது. தற்போதைய நிலை தொடர்ந்தால் டெல்லி மக்களின் ஆயுட்காலம் 10.1 ஆண்டுகளும், உத்தரப்பிரதேச மக்களின் ஆயுட்காலம் 8.9 ஆண்டுகளும், பிஹார் மக்களின் ஆயுட்காலம் 7.9 ஆண்டுகளும் குறையும்.
# ஸ்டெர்லைட் போராட்டம்
சுற்றுச்சூழலுக்கும், மனித உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தூத்துக் குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வேண்டும் என்று, அந்த நிறுவனம் தொடங்கப் பட்ட நாளிலிருந்து பல போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில், அதன் விரிவாக்கத்தை எதிர்த்து 2018 இல் குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் அருகில் உள்ள 13 கிராமங்களுக்கும் பரவியது. 2018 மே 22 அன்று, போராட்டத்தின் 100ஆவது நாளில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் பேரணியாகச் சென்றபோது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடும் தடியடியும் நடத்தினர். அதில் 13 பேர் பலியாகினர்; பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஆலை மூடப்பட்டது.
# காலநிலை மாற்றம்
2050-க்குள் அனைத்துப் பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தையும் பூஜ்ய அளவுக்குள் கொண்டுவரா விட்டால், நிலைமை கைமீறிச் சென்றுவிடும் என்று கடந்த ஆண்டு வெளியான ஐ.பி.சி.சி. அறிக்கை எச்சரித்தது. இந்த ஆபத்தைக் குறைக்க இந்தியா, தனது கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.
அதே நேரம் அதிகரிக்கும் தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, வெள்ளம், புயல், பெருமழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொள்வதற்கும் இந்தியா தயார்நிலையில் இருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை அமைப்புகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி ஆகியவற்றை மேம்படுத்தும் செயல்பாடுகளில் அரசு முழுவீச்சில் ஈடுபட வேண்டிய தருணம் இது.
அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டம்
மேற்குத் தொடர்ச்சி மலையில் பாலகாட்டுக்கு அருகே அமைந்துள்ள அமைதிப் பள்ளத்தாக்கே (Silent Valley) குந்தா, பவானி, சிறுவாணி போன்ற ஆறுகளின் பிறப்பிடம். 1970இல் அந்தப் பள்ளத்தாக்கில், ஓர் அணையைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டது.
அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அந்தப் பகுதியின் சூழல் தொகுதி பாதிக்கப்படும்; அந்தப் பகுதிக்கு மட்டுமே உரிய (Endemic) ஓரிடவாழ் தாவர, உயிரினச் சிற்றினங்கள் அழிந்துவிடும்; இந்த அபாயங்களிலிருந்து அமைதி பள்ளத்தாக்கைக் காப்பாற்றும் நோக்கில் ‘அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டம்’ முன்னெடுக்கப்பட்டது.
கவிஞரும் செயல்பாட்டாளருமான சுகதகுமாரி இந்த இயக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். அவர் இயற்றிய ‘மரத்தின்னு ஸ்துதி’ எனும் பாடல் போராட்டக்காரர்களின் முழக்க கீதமாக மாறியது. 12 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போராட்டத்தின் இறுதியில் வெற்றி கிடைத்தது.