

நமக்குக் கைக்கு எட்டும் இடத்தில் இருந்த நீரும் நெருப்பும் இன்றைக்குக் கண்ணுக்கெட்டாத தொலைவுக்குச் சென்றுவிட்டன. இதற்குப் பெயர்தான் வளர்ச்சி-முன்னேற்றம்.
‘இந்த உலகின் அனைத்துச் சிக்கல்களையும் வேளாண் பண்ணையம் மூலமாகத் தீர்த்துவிட முடியும்' என்கிறார் புகழ்பெற்ற நீடித்த வேளாண் வல்லுநரான ஜியோஃப் லாடன் (Geoff Lawton - All the World's Problems Can Be Solved in a Garden). இன்றைய உலகப் போக்கு சிலருக்கு வாய்ப்பையும் வசதியையும் தேவைக்கு அதிகமாக வழங்கிவருகிறது, பலருக்கு வறுமையையும் துன்பத்தையும் வலிந்து கொடுக்கிறது. வாழ்வாதாரங்களின் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. நீராதாரங்கள், காட்டு வளங்கள். கடல் வளங்கள் திரும்பப் புதுப்பிக்கவே முடியாத வகையில் மோசமாகச் சுரண்டப்படுகின்றன. ஒரு தொழிற்சாலை பயன்படுத்தும் நீரைவிட, மாசுபடுத்தும் நீர் மிக அதிக அளவில் உள்ளது.
இப்படித் தொழில்மயமாகித் தொலைந்துபோகும் கொடுமைக்கு எதிரான குரல்கள் விரிவடைந்துகொண்டே வருகின்றன. அதில் ஒன்றுதான் ஜியோஃப் லாடனின் குரல். ஃபுகோகா, வெண்டல் பெர்ரி, பில் மொலிசன் என்று இந்த வரிசை நீளமானது. ஆனால், நாமோ தொழில்மயத்தைத் தூக்கிப்பிடிக்கிறோம். தொழில்மயமும் தொழிற்சாலைமயமும் வேறு வேறானவை. சிறுசிறு கைத்தொழில்கள், கைவினைத் தொழில்கள் நிறைந்த நாட்டை ‘தொழில்மய நாடு’ என்று கூறலாம். அங்கு மாசுபடுத்தும் கூறுகள் மிகக் குறைவு, இருந்தாலும் சீரமைக்கக்கூடியது. ஆனால் பெரும் கட்டுமானங்களுடன் கூடிய, புதுப்பிக்க முடியாத வளங்களைச் சிதைக்கும் தொழிற்சாலை வளர்ச்சி என்பது வேறு.
தள்ளிப்போன வளங்கள்
எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் இந்தத் தொழிற்சாலைமய வளர்ச்சி போக்கு நமது நீரையும் நெருப்பையும் பல கிலோ மீட்டர் தொலைவுக்குக் கொண்டு சென்றுவிட்டது. நமது ஆறுகளிலும் ஓடைகளிலும் மண்ணடுக்கு முன்பு நன்றாக இருந்தது. அதனால் ஊற்று நீர் அருகிலேயே கிட்டியது, கிணறுகளில் நீர்மட்டம் கிட்டவே இருந்தது. இன்று ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் அடிகளைத் தாண்டிய பிறகும் நீர் கிடைப்பதில்லை. சென்னை மக்களுக்கு வீராணத்தில் இருந்தோ, ஆந்திராவில் இருந்தோ வர வேண்டும்.
நெருப்பு, அதாவது எரிப்பதற்குத் தேவையான விறகு, அருகிலேயே மரத்துண்டுகளாகவோ, சாண எருவாட்டிகளாகவோ கிடைத்தது. இன்று 6,000 முதல் 7,000 அடிவரை நிலத்தைத் துளைத்து எடுக்கப்பட்ட இயற்கை எரிவாயு, சமையல் எரிவாயு சிலிண்டராகப் பல கிலோமீட்டர் பயணத்தைக் கடந்து நமது அடுக்களைக்கு வருகிறது.
ஆக, வாழ்க்கையைச் சுகப்படுத்துகிறோம் என்ற பெயரில் சுதந்திரத்தை, தற்சார்பை அடுத்தவர் கையில் கொடுக்கும் முறைக்கு மேம்பாடு/வளர்ச்சி (Development) என்று பெயர் வைத்துள்ளோம். நமக்கு வாழ்வளிக்கும் இயற்கை ஆதாரங்களைக் கண்மண் தெரியாமல் சுரண்டி, அறநெறி இன்றிப் பணம் சேர்க்கும் முறையை வளர்ச்சி என்று புகழ்கிறோம்.
பிரிக்க முடியாத பிணைப்பு
இதற்கு நேர்மாறாக ‘வேளாண் பண்ணை முறை’ என்பது அறத்தை அடிப்படையாகக் கொண்டது. அன்பை உள்ளடக்கியது. அறிவியலையும் உள்ளெடுத்துக் கொள்கிறது. ஒரு பயிரை வளர்த்துப் பெருக்கி அறுவடை செய்யும் வரையிலான உறவு மிக ஆழமானது.
(அடுத்த வாரம்: உலகெலாம் உதவும் தொழில்)
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பாமயன் என்ற பாலசுப்ரமணியன், இயற்கை வேளாண் வல்லுநர். அடிசில் என்ற இயற்கை வேளாண் பண்ணை வழியாக இயற்கை வேளாண்மையில் புதிய நுட்பங்களைப் பரிசோதித்துப் பயிலரங்குகள், நேரடிப் பயிற்சிகள் மூலம் பரவலாக்கிவருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை பற்றி கட்டுரைகள், புத்தகங்களைத் தொடர்ந்து எழுதிவருகிறார்.
தொடர்புக்கு: adisilmail@gmail.com |