சூழலியல் சேதி! - தக்காளி மின்சாரம்!

சூழலியல் சேதி! - தக்காளி மின்சாரம்!
Updated on
1 min read

மாற்று எரிசக்தி என்றால் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் போன்றவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இப்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தையில் புதிய மின்சாரத் தயாரிப்பு முறை அறிமுகமாகி இருக்கிறது.

அழுகிப் போன தக்காளியை வைத்துப் பசுமை மின்சாரம் தயாரிக்க முடியும் என்கிறார்கள் அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். இதற்காகத் தனியாக ஒரு மின்வேதி எரிபொருள் கலத்தை அவர்கள் வடிவமைத்துள்ளனர். அதில் இருக்கும் பாக்டீரியா தக்காளிக் கழிவைச் சிதைத்து, ஆக்சிஜனேற்றம் செய்து, மின்சாரத்துக்கான ஆதாரமாக மாறுகிறது. தக்காளியில் உள்ள பிரகாசமான சிவப்பு கரோட்டின் நிறமி, சிறந்த மின்கடத்தியாக இருப்பதால், இந்த மின்சாரத் தயாரிப்பு முயற்சி வெற்றி பெறும் என்றே தோன்றுகிறது.

மழை தரும் மின்சாரம்

சூரியசக்தி மூலம் பூமியைச் சீர்கெடுக்காத மின்சாரத்தை நாம் பெற முடியும் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், அதில் இருக்கும் முக்கியப் பிரச்சினை என்னவென்றால், வெயில் இருந்தால் மட்டுமே சூரியசக்திக் கலம் செயல்படும் என்ற நிலைமை. அந்த நிலை விரைவில் மாறப் போகிறது.

சீனாவில் உள்ள கிங்டோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, சூரியசக்தி தயாரிக்கப் பயன்படும் புதிய கலங்கள் மீது விழும் மழைத் துளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்திருக்கிறார்கள். சூரியசக்தி கலங்கள் மீது மெல்லிய படலமாகத் தடவப்படும் ‘கிராஃபீன்' எனும் வேதிப்பொருள் இதற்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in