

தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டைக்கு எதிரே பெரும் மணற்பரப்பு விரிந்திருக்கும். அதன் வடமேற்கு மூலையில் ‘அடிபைப்’ என்றழைக்கப்படும் கைக் குழாய் ஒன்றுள்ளது.
அக்குழாயில் தண்ணீர் அடித்துக் குடித்தால் நீர் அவ்வளவு சுவையாக இருக்கும். உப்புக்கடலின் அருகே இருந்தும் சுவையான நன்னீர் கிடைக்கக் காரணம் எக்கர்தான். தமிழகம் முழுக்கவே பல கடற்கரை எக்கர்களில் வெறும் பத்து பதினைந்து அடி ஆழத்தில் இப்படிச் சுவையான நீர் கிடைக்கும்.
எக்கரில் தோண்டப்படும் கிணற்றுக்கு ‘ஆழிக்கிணறு’ என்று பெயர். திருச்செந்தூர் கோயில் எதிரே கடற்கரையில் அமைந்துள்ள நன்னீர்க் கிணறு இவ்வகையைச் சார்ந்ததே.
கடலில் குளித்து முடித்த பிறகு பிசுபிசுப்புப் போக அக்குளத்தில் நீராடும் பக்தர்கள், “ஆகா! இறைவனின் கருணையைப் பார்த்தீர்களா? உப்புக்கடலுக்குப் பக்கத்திலேயே இப்படியொரு நன்னீர்க் கிணறா?” என வியந்து பேசுவதைக் கேட்டுள்ளேன். அது சுற்றுச்சூழல் புரிதலற்ற பேச்சு.
கோயில்கள் இல்லாத எக்கர்களில் கிணறு தோண்டினாலும், அப்படி நன்னீர் கிடைக்கும். ஏன் தரங்கம்பாடியில் அந்த அடிபைப் உள்ள இடத்தில் கிணறு தோண்டினாலும் நன்னீரே கிடைக்கும். அதை அங்குக் கோட்டைக் கட்டிய டேனிஷ்காரர்களின் கருணை என்று சொல்ல முடியுமா? அவ்வளவு வேண்டாம், திருச்செந்தூருக்கு வடக்கே தூத்துக்குடிக்குச் சென்றால் அங்குள்ள மீனவர்கள் கடற்கரையில் நன்னீர் கிடைக்காமல் தம் படகுக்குத் தேவைப்படும் 200 லிட்டர் நீரைப் பணம் கொடுத்து வாங்கிச் செல்வதைப் பார்க்கலாம்.
இயற்கையின் கொடை
எதையும் சுற்றுச்சூழல் பார்வையோடு சிந்தித்துப் பார்த்தாலே போதும். இயற்கை நமக்கு அளித்துள்ள கொடையைப் புரிந்துகொள்ள முடியும். அந்தப் புரிதல்தான் நம்மை இயற்கைப் பாதுகாப்பை நோக்கிச் செயல்படத் தூண்டும். இல்லையெனில் கடவுள்மீது பழியைப் போட்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வோம்.
காலங்காலமாக இயற்கை காப்பாற்றி வைத்திருந்த நன்னீர் தடுப்பு அழிக்கப்பட்டதால்தான் இன்று பல ஊர்களில் கடல்நீர் உட்புகுந்து நன்னீரை உவர்நீராக்கி வைத்துள்ளது. சில இடங்களில் பத்து கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளே உப்புநீர் புகுந்துவிட்டது.
அதனால், ஒருபுறம் ஏழைப் பெண்கள் குடங்களுடன் அலைய, மறுபுறம் நகரெங்கும் ‘கேன் வாட்டர்’ வாகனங்கள் விரைந்து கொண்டிருக்கின்றன. ஒருகாலத்தில் திருவான்மியூர் கடற்கரையின் நிலத்தடி நன்னீர்தான் சென்னைக்கான குடிநீராகப் பயன்பட்டது என்பது ஏக்கப் பெருமூச்சுவிட வைக்கும் செய்தி.
வாழ்வாதார சிதைப்பு
கடற்கரை என்பது மாபெரும் நன்னீர்த் தொட்டி என்கிற உண்மையைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் அறியும். தொழிற்சாலைகள், கடற்கரை நோக்கிப் படையெடுக்கும் காரணங்களுள் அதுவும் ஒன்று. அதுவும் ஆற்றின் கழிமுகப் பகுதியில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி என்றால் சொல்லவே வேண்டாம்.
பாலாற்றின் கழிமுகப் பகுதியில் அரசின் கல்பாக்கம் அணு மின்நிலையம் அமைந்துள்ளதும், தமிழகத்தின் மற்ற ஆறுகளின் கழிமுகங்களுக்கு அருகில் தனியார் நிறுவனங்களின் ஆலைகள் அமைந்துள்ளதும் இயல்பாக நிகழ்ந்ததல்ல.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடற்கரை என்பது பரதவர் உள்ளிட்ட நம் இனக்குழு மக்கள் வாழ்ந்த இடம். ஆனால், இன்று அம்மக்களை அவர்களுடைய மண்ணிலேயே அந்நியமாக்கும் வேலை தொடர்ந்து நடைபெறுகிறது. கடற்கரையில் நிகழும் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டமும் அவர்களுடைய வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து சிதைத்துவருகிறது.
சுற்றுச்சூழல் புரிதலின்மை
சுற்றுச்சூழல் பார்வையில் எக்கர் எனும் மணல் வெளிகள் ஆமை, கடல் பறவைகள் ஆகிய உயிரினங்கள், தாவரங்களின் வாழிடச் சூழல் தொகுப்பு. சுற்றுச்சூழல் மட்டுமன்றி, மீன்பிடிப்பு உள்ளிட்ட கடற்கரை மண்டலப் பொருளாதாரத்துடனும் அவை இரண்டற கலந்தவை.
எனவே, சுற்றுச்சூழலுக்காக மட்டுமன்றி பொருளா தாரத்தையும் காத்திட மணற் குன்றுகளைப் பாதுகாக்க வேண்டும். ஆழிப்பேரலை தாக்கியபோது அலையாத்திக் காடுகள் மட்டும் நம்மைக் காக்கவில்லை. கடற்கரை மணற்குன்றுகளும் அவ்வாறே நம்மைக் காத்தன.
ஆழிப்பேரலை மட்டுமா? வெள்ளம், காற்று, கடல் ஓதங்கள், கடலரிப்பு போன்ற தாக்கங்களிலிருந்தும் அவை இன்றும் நம்மைக் காத்துவருகின்றன. ஆனால், இது பற்றிய சுற்றுச்சூழல் புரிதல் நமது அரசுக்கோ அதிகாரிகளுக்கோ இருப்பதாகத் தெரியவில்லை. அது அறிந்திருப்பது எல்லாம் ஜேசிபி ஒப்பந்தம் மட்டும்தான் போல.
ஆழிப்பேரலைத் தாக்குதலுக்குப் பிறகுத் தென் கடற்கரைப் பகுதிகளில் அரசு உடனே மறுவாழ்வுப் பணிகளை மேற்கொண்டது. அந்தப் பணிகளுள் அது முதலில் செய்த பணி எது தெரியுமா? மணல் மேடுகளை இடித்துத் தள்ளி அவற்றைச் சமப்படுத்தியதுதான். என்னே சுற்றுச்சூழல் அறிவு!
(அடுத்த வாரம்: மணல் புதையல்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com