

மனிதக் கற்பனையின் அதிகபட்சக் காட்சிச் சித்திரங்களை நமக்குத் தந்த ‘அவதார்’, கிராஃபிக்ஸ் துணையுடன் இயற்கையின் எழிலைப் போற்றிய திரைப்படம். அந்தத் திரைப்படத்தின் உருவாக்கத்தில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு பல்வேறு இயற்கை அம்சங்கள் உத்வேகம் அளித்திருக்கலாம். ஒரு வேளை மகாராஷ்டிர மாநிலத்துக்கு அவர் வந்திருந்தால், அங்கிருக்கும் சிற்றுயிர்களால் நிச்சயம் அவர் உத்வேகமடைந்திருப்பார்.
இரட்டிப்பான ஒளி
மும்பையில் இருந்து மூன்று மணி நேரம் மேடு பள்ளங்களைக் கடந்து காட்டைத் தொட்டு, கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் அடிக்கு மேல் உள்ள மலைத் தொடரைச் சென்றடைந்தோம். மகாராஷ்டிர மாநிலம் சங்கமநர் அருகே உள்ள வான்ஜூல்ஷேட் என்ற சின்னஞ்சிறு கிராமம்.
காரிலிருந்து இறங்கி உடலைச் சோம்பல் முறித்தபோது, சில்லென்ற காற்று எங்களை வரவேற்றது. சூரியன் வீடு திரும்ப யத்தனிக்கும் மாலை நேரம். நீல வண்ணத்தில் இருந்த வானம் கொஞ்சம் கொஞ்சமாகக் கருநீலத்துக்கும், பிறகு சாம்பல் நிறத்துக்கும் தடம் மாறிக்கொண்டிருந்தது. அந்தக் கருமையை மேலும் இருட்டாக்குவதுபோல, மழை மேகங்கள் திரண்டு வந்து கொண்டிருந்தன. ஒரு நொடியில் அந்த இடம் முழுவதும் அமானுஷ்யமான அமைதி பரவியது.
அப்போது ஒரு மரத்தில் திடீரென்று ஒரு பொன்னிற ஒளி மின்னி, பிறகு அங்குமிங்குமாகக் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொருமுறை நான் இமைகளைச் சிமிட்டியபோதும், அந்த ஒளியை உருவாக்கிக்கொண்டிருந்த மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கானது. கொஞ்ச நேரத்திலேயே அந்த எண்ணிக்கை லட்சத்தைத் தொட்டுவிட்டது!
உச்சகட்ட ரசனை
மின்மினிப் பூச்சிகளின் மினுக்கும் ஒளியால், ஒரு மரத்துக்கே ஒளியூட்டினால் எப்படி இருக்கும். அதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். மரத்தின் ஒவ்வொரு இலையிலும் உட்கார்ந்து மரத்துக்கு அழகுற ஒளியூட்டியிருந்தன மின்மினிகள். அது இயற்கையின் உச்சக்கட்ட ரசனை போலிருந்தது. அந்த மரம் தங்க விக்ரகம் போலக் காற்றில் அசைந்தது, நடனமாடியது போலிருந்தது. மரத்தின் அந்த அற்புதமான நடனம், என் மனதில் அழிக்க முடியாத ஒரு காட்சியாகப் பதிந்துவிட்டது.
சின்ன வயசிலிருந்தே எனக்கு ரொம்ப பிடித்த சிற்றுயிர்களில் மின்மினிப் பூச்சிக்கு முதல் இடம் உண்டு. நம் நாட்டில் மே முதல் ஜூன் மாதம்வரை மட்டுமே மின்மினிப் பூச்சிகள் உயிரோடு இருக்கின்றன. இந்தக் காலத்தில் லட்சக்கணக்கான சிறிய மின்மினிப் பூச்சிகள் இனச்சேர்க்கை செயல்பாடுகளுக்குப் பிறகு இணைசேர்ந்து, முட்டையிடுகின்றன. இனச்சேர்க்கை செயல்பாட்டின்போதும், குஞ்சு பொரிக்கிற தருணத்திலும் லட்சக்கணக்கான மின்மினிப் பூச்சிகளையும் அவை விட்டுவிட்டு வெளிப்படுத்தும் ஒளியின் அழகையும் கண்டு மகிழலாம்.
அந்தச் சின்னஞ்சிறு மின்மினிப் பூச்சிகளிடம் என்னையே நான் இழந்திருந்தேன். இந்த அரிய நடனத்தை ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் வந்து பார்த்துவிட வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதேநேரம் நான் செய்யக்கூடிய சிறந்த செயல், அந்த மின்மினிகளின் இயல்புக்குச் சிறிய இடையூறைக்கூடச் செய்யாமல் இருப்பதுதான் என்று உணர்ந்துகொண்டு அந்த இடத்திலிருந்து விடைபெற்றேன்.
மின்மினிப் பூச்சி: தெரிந்ததும் தெரியாததும்
# Lampyridae எனப்படும் பீட்டில் பூச்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒளிரக்கூடிய இரவாடிப் பூச்சிகள் மின்மினிகள்.
# மின்மினிப் பூச்சிகளால் வேகமாகப் பறக்க முடியாது.
# மென்மையான உடலைக்கொண்ட இந்தப் பூச்சிகள் 5 முதல் 25 மி.மீ. (2.5 செ.மீ.) நீளமுடையவை.
# பெரும்பாலான மின்மினிப் பூச்சிகள் மகரந்தத்தையும் பூந்தேனையும் உண்கின்றன. ஆனால், பருவமடைந்த மின்மினிப் பூச்சிகள் உண்பதில்லை.
# வயிற்றின் அடிப்பகுதியில் சிறப்பு ஒளிரும் உறுப்பை இவை கொண்டுள்ளன. இந்த உறுப்பு, விட்டுவிட்டு வெளிச்சத்தை வெளியிடுகிறது.
# பெண் மின்மினிப் பூச்சிகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் குறுகிய நேரத்துக்கு ஒளிரும் வெளிச்சத்தை வெளியிடுகின்றன. இந்த ஒளி ஆண் மின்மினிப் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கிறது. கவர்ந்து இழுக்கப்படும் ஆண் மின்மினிப் பூச்சிகளிடையே, அவற்றின் ஒளிரும் தன்மையைப் பொறுத்துப் பெண் மின்மினிப் பூச்சி தேர்ந்தெடுக்கிறது
- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்பட ஆர்வலர்
தொடர்புக்கு: bala.1211@gmail.com