

நிகோபார் தீவுக் கூட்டமானது ஒரு நட்சத்திர மாலைபோல் அந்தமான் தீவுகளுக்குத் தெற்கே வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. இவற்றை ‘நக்காவரத் தீவுகள்’ என முதலாம் ராஜேந்திர சோழன் காலத்து வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. இங்கே பல நூற்றாண்டுகளாக `நிகோபார் பழங்குடி இனத்தவர்’ பெரும்பாலும் வசித்துவருகின்றனர். தென் கோடியில் அமைந்துள்ள பெரிய நிகோபாரைத் தவிர, மற்ற தீவுகள் அளவில் சிறியவை, கனிம வளம் குறைவு. ஆனால், மழைவளமும் கடல்வளமும் நிறைவாக அமைந்துள்ளன.
தனிமையில், தொலைதூரத்தில் வாழும் இவர்களைப் புதிய தொழில்நுட்பங்கள் இன்னும் எட்டவில்லை என்றாலும், இவர்கள் தாங்கள் வசிக்கும் தீவுகளின் நிலவளத்தை இயற்கை வழியில் மேலாண்மை செய்தும் அவற்றைத் தங்களுக்குள் ஆக்கபூர்வமாகப் பங்கிட்டும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கின்றனர். நிகோபார் தீவுகளின் நில மேலாண்மை இவற்றைச் சார்ந்தே அமைந்துள்ளது. தென்னை இங்கு முக்கியப் பயிராகும்.
நிலப் பாகுபாடு
பொதுவாக நிகோபார் தீவுகளின் மையப்பகுதி சிறிய மலைக்குன்றாகவோ உயர்ந்த மேட்டுப்பாங்கான நிலமாகவோ இருக்கும். இவற்றைச் சுற்றியுள்ள நிலங்களின் உயரம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துத் தீவுகளின் விளிம்பில் உள்ள கடற்கரைச் சமவெளிகள் கடல் மட்டத்திலிருந்து 1-5 மீட்டர் மட்டுமே உயர்ந்து காணப்படும். அலையேற்றத்தாலும் கடல் சீற்றங்களாலும் இப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
நிகோபார் பழங்குடியினர் தீவுகளை மையப்பகுதியில் இருந்து கடற்கரைச் சமவெளிவரை நான்காகப் பிரித்துப் பயன்படுத்துகிறார்கள். இது சங்கத் தமிழ் நூல்கள் தெரிவிக்கும் நிலப்பிரிவான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலையைப் போன்றதே. ஒவ்வொரு தீவிலும் பல கிராமங்களோ அல்லது குடியிருப்புத் தொகுதிகளோ (டுஹேட் எனப்படும் கூட்டுக் குடும்பம்) அமைந்துள்ளன.
அமைப்பு முறை
நிகோபார் தீவுகளின் மையப் பகுதி `ரின்வல்’ எனப்படும் காடுகள் அமைந்துள்ள மேட்டுப்பாங்கான நிலமாகும். இதைச் சுற்றி வளையங்களாக மற்ற நிலப் பயன்பாடுகள்/ பாகுபாடுகள் அமைந்துள்ளன. ரின்வல்லைச் சுற்றியுள்ள பகுதி `டவேட்’ அல்லது `டுலாங்’ எனப்படும் சிறுகாடுகளும் தென்னந்தோப்புகளும் நிறைந்துள்ள சிறிய மேடுபள்ளங்கள் உள்ள பகுதி மண்வளம் மிக்கது. பயன்தரும் பல்வகை மரங்களும் சிறிய தாவரங்களும் இங்கே இயற்கையாகப் பராமரிக்கப்படுகின்றன. இப்பகுதி பெரும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது.
இதை அடுத்து இருப்பது `டுஹேட்’ (Tuhet) எனப்படும் தென்னை மரங்கள் சூழ்ந்த குடியிருப்புப் பகுதி. இவை தவிரக் கூட்டுக் குடும்பத்துக்கும், பழங்குடியினர் கிராமத்துக்கும் பொதுவான இடங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் இவ்விடங்களைப் பாதுகாக்கவும் சமூக விழாக்களுக்கும் செலவிடப்படுகின்றன. இறுதியாகக் கடற்கரையை ஒட்டி `எல்-பாலம்’ எனப்படும் கடற்கரைச் சமவெளி அமைந்துள்ளது. இது மணல் நிறைந்த பகுதி. இது கிராமத்தின் சமுதாயக் கூட்டங்களும், விளையாட்டுகளும், பன்றித் திருவிழாவும் நடைபெறும் பொது இடமாக உள்ளது.
(அடுத்த வாரம்: இயற்கை வேளாண்மையின் முன்னோடி)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com