

சில்லென்ற வாடைக்காற்றுடன் மனத்தை மயக்கும் எழிலான மாலை வேளையில் வயல்வெளி பக்கம் சென்றிருந்தேன். ‘குகுக்.. குகுக்.. குகுக்..’ என்கிற சத்தத்துடன் மரத்தில் அங்குமிங்கும் ஒரு பறவை தாவிக்கொண்டிருந்தது.
அந்தப் பறவை செம்போத்து. அதைப் பார்த்த அடுத்த கணமே என் சிறுவயது நினைவுகளை மனது அசைபோடத் தொடங்கியது. எனக்கும் அந்தச் செம்போத்துக்கும் இடையிலான தொடர்பு ஒரு பெரும் கதை.
சிறு வயதில் என் அம்மாவுடன் காடுகளில் ஆடு மேய்க்கச் செல்வேன். ஒருநாள், தூரத்தில் ‘குகுக்.. குகுக்.. குகுக்..’ என்று சத்தம் கேட்டது. சத்தம் புதுசா இருக்கே என்று நான் ஓடிப்போய் பார்த்தேன். அங்கே, தன் அலகால் தரையைக் கிளறியபடி புழுக்களைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது ஒரு பறவை.
சிவப்புக் கண்கள், தலை, உடல் என அனைத்தும் நாவல் பழ கருமை. அதன் இறக்கை மட்டும் செங்காமட்டை நிறத்திலிருந்தது. பார்ப்பதற்குக் காகம் மாதிரியும் குயில் மாதிரியும் இருந்தது. நான் அருகில் சென்றதும், சட்டெனத் தாழ்ந்து இருந்த கிளையில் ஏறி, கிளைவிட்டு கிளைக்குத் தாவித்தாவி மெல்ல மேலே ஏறி, பிறகு சிறிது தூரம் மேலிருந்து கீழ் நோக்கிப் பறந்து அடுத்த மரத்திற்குச் சென்றது.
என்ன இந்த பறவை சரியாக பறக்கமாட்டேங்குது? ஒருவேளை இந்தப் பறவைக்கு அடிபட்டு இருக்குமோ என்ற கேள்விகளுடன் திரும்பிவந்தேன்.
‘சாப்பிடாம எங்க போன?’ எனக் கடிந்து கொண்ட அம்மாவிடம், நான் பார்த்த அந்த பறவையைக் குறித்துச் சொன்னேன். அம்மாவோ சிரித்தபடி சொல்லத் தொடங் கினார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் அனுபவ அறிவு அதிகம் உள்ளவர் என் அம்மா.
செம்போத்து: ஓர் விவரணை
‘நீ பார்த்த அந்தப் பறவை பேரு செம்போத்து (Greater Coucal). செங்காகம், குக்கில், செம்பகம் என ஊருக்கு ஊர் ஒவ்வொரு பெயர் அதுக்கு. பார்க்க அண்டங்காக்கை மாதிரியே உடல் பருமனோட இருந்தாலும், இது குயில் குடும்பத்தைச் சேர்ந்தது. உடல் முழுவதும் கருமை நிறமாக இருக்கும். இறக்கை மட்டும் செங்கல் நிறத்தில் இருக்கும். அலகு சிறிது வளைந்து, கூர்மையாக இருக்கும். கண்கள் குயிலைப் போலவே சிவப்பு நிறமாக இருக்கும். செம்போத்து அதிக தூரம் பறக்காது.
சிறிது தூரம் மட்டுமே பறக்கும் தன்மை கொண்டது. மரத்தின் மேலே தத்தித் தத்தித் தாவித் தாவித் நடந்துசெல்லும். ‘குகுக்..குகுக்.. குகுக்.. அல்லது கூப்...கூப்...கூப்’ எனக் கத்தும். சில நேரம் க்ராரா என்று கரகரப்பான ஓலியை எழுப்பும். தலையைக் குனிந்தபடி அதிர்ந்து அதிர்ந்து பாடும். இதன் ஓசை வெகு தொலைவுக்குத் தெளிவாகக் கேட்கும். இப்படிப் பாடும்போது, இதன் வால் பகுதி தரையைக் கூட்டுவதுபோல இருக்கும்’ என்றார் அம்மா.
நான் இடையில் குறுக்கிட்டு, ‘அம்மா, இது குயில் குடும்பத்தைச் சேர்ந்தது என்றால் காக்கையின் கூட்டில் முட்டையிட்டுவிட்டுப் போய்விடுமா?’ என்று கேட்டேன். ‘அப்படி யெல்லாம் இல்லை. இது தனியாகக் கூடு கட்டி, தன் துணைப் பறவையுடன் வாழும். சில செம்போத்துகள் கூடுகளைப் புதரில் அமைக்கும், சில மரத்தில் அமைக்கும். கூடுகள் அளவில் பெரிதாக இருக்கும். புதரில் பந்து போன்று வட்டமாகக் கூடுகளைக் கட்டும். பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம்வரை இதன் இனப்பெருக்க காலம்.
அதாவது, இந்த மாதங்களில் 3 முதல் 4 முட்டைகள் வரை இட்டு, அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும். இது குயிலைப் போன்று காக்கைகளின் கூடுகளில் முட்டை இடாது. செம்போத்தின் இளம் பறவைகளில் கறுப்பு நிறம் மங்கலாகவும் வெள்ளைத் திட்டுக் களுடனும் இருக்கும், கண்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் முட்டை வெள்ளை நிறமாக இருக் கும்மா’ என்று எனக்குச் சாப்பாடு ஊட்டியபடி சொன்னார் அம்மா.
நினைவில் நீந்தி...
சட்டென, ‘அம்மா அந்த பறவை நான் பார்க்கும்போது புழுவைச் சாப்பிட்டுச்சு, அதை மட்டும்தான் சாப்பிடுமா? புழு பாவம்லமா?’ என்றேன். அம்மா என்னைப் பார்த்துப் புன்முறுவலோடு, ‘புழு பாவம்தான். ஆனா புழுவை சாப்பிடலன்னா அந்த பறவை செத்துப்போய்ருமேமா? அதுவும் பாவம்தானே. இந்த உலகத்துல இருக்கிற எல்லா உயிரும் உணவுக்காக, மற்ற உயிரை நம்பித்தான் உள்ளது.
செம்போத்துப் பறவை பொதுவா புழுக்களைச் சாப்பிடும். சிறிய பூச்சிகள், சிறிய ஊர்வனவற்றைச் சாப்பிடும். தமிழ்நாட்டுல இருக்கிற செம்போத்து நத்தைகளை விரும்பி சாப்பிடும். அது மட்டுமில்லாம, மற்ற பறவைகளின் கூடுகளில் இருக்கும் முட்டைகள், குஞ்சுகளைக் கொன்று சாப்பிட்டுவிடும். பழங்கள், கொட்டைகளைச் சாப்பிடும். குறிப்பாக விஷப்பழங்களை சாப்பிடும்.
ஆனால், இதற்கு ஒன்றும் ஆகாது. இந்தப் பறவையைப் பற்றி சில மூடநம்பிக்கைகளும் இருக்கு. ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை”, என்று தெளிந்த அறிவுரையைச் சாப்பாட்டுடன் எனக்குச் சேர்த்து ஊட்டினார் அம்மா.
‘அம்மா, இது வெளிநாட்டுல இருந்து இங்க வந்திருக்கா, இதுக்கு முன்னாடி நம்ம ஊர்ல நான் இதைப் பார்த்ததே இல்லையே?’ என்றேன். இந்தப் பறவை பற்றிப் பழங்காலத் தமிழ் இலக்கியங்களிலும் சொல்லிருக்காங்க. இது ஒரு உள்ளூர் பறவை’ எனச் செம்போத்து குறித்து அம்மா சொல்லி முடிக்க, ஆடுகளை விரட்ட ஆயத்தமானோம்.
இவ்வாறு தன் உலக அறிவால் அந்த அழகிய பறவையைக் குறித்த பல விடயங்களை எனக்குச் சிறுவயதிலேயே சொன்னவர் என் அம்மா. அந்த மலரும் நினைவுகளில் நீந்தியபடி வயலிலிருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். ஆனால், அந்த செம்போத்தின் ‘குகுக்...குகுக்.. குகுக்..’ என்ற ஓசை மட்டும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
கட்டுரையாளர், புதுக்கோட்டை ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவி
தொடர்புக்கு: rkjayalakshmi456@gmail.com