

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் வசிக்கும் மக்களுக்குப் பணமோ செலவோ ஒரு பொருட்டல்ல. தாங்கள் விரும்பும் உணவை எல்லாப் பருவகாலத்திலும் சாப்பிட வேண்டும் என்று அந்நாடுகளில் இருப்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அந்த உணவுப்பொருள் குறிப்பிட்ட பருவகாலத்தில் அவர்கள் நாட்டில் விளையவில்லை என்றால், உலகின் எந்த நாட்டில் கிடைக்குமோ அங்கிருந்து அதை இறக்குமதி செய்துகொள்கிறார்கள்.
இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து விளைபொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்வது பசுங்குடில் வாயு உமிழ்வை அதிகரிக்கிறது என்று சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சார்லஸ் பெர்கின்ஸ் சென்டர் நடத்திய புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
முக்கியக் குற்றவாளி
நாடுகளுக்கு இடையேயும், நாடு களுக்கு உள்ளேயும் உணவு, உணவுப் பொருட்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்லப் படுகின்றன.
இதன் காரணமாக உமிழப்படும் பசுங்குடில் வாயு, உணவுத் துறையின் மொத்த பசுங்குடில் வாயு உமிழ்வில் ஐந்தில் ஒரு பங்காக உள்ளது. இந்த ஐந்தில் ஒரு பங்குக்குப் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் முதன்மைப் பங்களிப்பை வழங்குகின்றன என்று அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
உணவுப் பொருட்களின் உலகளா விய வர்த்தகம் ஏற்படுத்தும் கார்பன் தடத்தை மதிப்பிடுவதே இந்த ஆய்வின் நோக்கம். லட்சக்கணக்கான விநியோகச் சங்கிலிகளையும் பல்வேறு வகையான உணவுப் பொருட்களைக் கண்காணித்து, அவற்றுக்கான கார்பன் தடத்தை அந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,600 கோடி டன் (ஒரு டன் என்பது 1000 கிலோ) பசுங்குடில் வாயு உமிழ்வுக்கு உணவே காரணமாக உள்ளது. இது உலகில் வாழும் ஒட்டுமொத்த மனிதர்களால் உற்பத்தி யாகும் கார்பன் உமிழ்வில் 30 சதவீதம். போக்குவரத்து, மரங்களை வெட்டுவது போன்ற நிலப் பயன்பாட்டு மாற்றம், உற்பத்திச் செயல்முறை உள்ளிட்டவை உணவால் உருவாகும் பசுங்குடில் வாயு உமிழ்வுக்கு அடிப்படையாக உள்ளன.
அது என்ன உணவு மைல்கள்?
உணவு நகர்வு / உணவு மைல்கள் (Food Miles) என்பது ஓர் உணவுப் பொருள் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து அது நுகரப்படும் இடத் திற்குச் செல்லும் தூரத்தை அளவிடப் பயன்படுகிறது. இதன் மூலம் கார்பன் தடம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்கத்தை நாம் மதிப்பிட முடியும்.
அதிக வருமானம் கொண்ட நாடுகள் உணவு மைல் உமிழ்வுகளுக்கு மிகப் பெரிய பங்களிப்பாளர்களாக இருக்கின்றன. அந்த நாடுகளில் உலக மக்கள் தொகையில் 12.5 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். ஆனால், அந்த நாடுகள் சர்வதேச உணவு மைல் உமிழ்வில் 46 சதவீதத்தை உருவாக்குகின்றன.
உணவு மைல்களைப் பொறுத்தவரை உலகின் மிகப் பெரிய நிகர ஏற்றுமதி யாளராகப் பிரேசில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, இந்தியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உள்ளன. உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தியில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.
1995-க்குப் பிறகு உலகளவில் வேளாண்மையும் உணவு வர்த்தகமும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. உலகளவில் உட்கொள்ளப்படும் கலோரிகளில் 19 சதவீதம் சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் உணவிலிருந்தே பெறப்படுகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைப்பதற்கு உள்ளூர் விளைபொருட்களைச் சாப்பிடுவதே சிறந்த வழி என்பதை உணர்த்துவதற்கு இதைவிடத் தெளிவான காரணம் எதுவும் இருக்க முடியாது.
உணவுப் போக்குவரத்து உமிழ்வுகள்