

தமிழில் பிரபல வில்லன் நடிகராக அறியப்பட்ட ரகுவரன் நடித்த முதல் படம் ‘ஏழாவது மனிதன்’. தமிழின் முதல் சுற்றுச்சூழல் திரைப்படம் இது. படம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
இப்படி ஒரு திரைப்படம் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் அதன் இயக்குநர் கே. ஹரிஹரனும் தயாரிப்பாளர் ‘பாளை’ சண்முகமும்தான். இந்த ஆண்டு ‘பாளை’ சண்முகத்தின் நூற்றாண்டும்கூட.
புனே திரைப்படக் கல்லூரியில் படித்த ஹரிஹரன், ‘காசிராம் கோட்வால்’ (மராத்தி), ‘கரண்ட்’ (கதை கி.ராஜநாராயணன்), ‘வான்டட் தங்கராஜ்’, ‘முதலையின் நண்பன்’, ‘ துபாஷி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
தூர்தர்ஷனுக்காக 300-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். சென்னை எல்.வி.பிரசாத் பிலிம் இன்ஸ்டி டியூட்டின் இயக்குநராகச் செயல்பட்டுள்ளார். ஏழாவது மனிதனைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் ஹரிஹரன்:
குழந்தைகள் திரைப்பட சங்கத்தின் சார்பில் ‘வாண்டட் தங்கராஜ்’ படத்தை முடித்திருந்த நேரம் அது. அப்போது ஜெமினி லேபை வாங்கியிருந்த பழனியப்பன் ராமசாமி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வக்கீல் சண்முகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்தான் ஜெமினி லேபுக்கான வக்கீல்.
இருவரும் வெளியே தேநீர் குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ‘பாளை’ சண்முகம் “பாரதியாரின் நூற்றாண்டை யொட்டி அவரைப் பற்றி படம் பண்ண வேண்டும். ஆனால் ஆவணப் படமாக இல்லாமல் வணிகப் படமாக இருக்கணும்” என்றார்.
“சரி சார், செய்துவிடலாம்” என்று மையமாகத் தலையை ஆட்டினேன். “எவ்வளவு செலவாகும்?” என்றார். “ரூ. 5 லட்சம் ஆகும்” என்றேன். “சரி பாளையங்கோட்டைக்கு வாங்க” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.
என் மனசெல்லாம் படப்படவென்று வேகமாக அடித்துக் கொண்டது. நான் பிறந்து வளர்ந்தது பாம்பே. ஓரளவுக்குத்தான் தமிழ் படிக்கத் தெரியும். எழுதத் தெரியாது. பாரதியாரைப் பற்றி சினிமா எடுக்க வேண்டும் என்றால், சினிமாவில் அவருடைய கவிதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
அது எப்படி முடியும் என்று ஒரே குழப்பமாக இருந்தது. ‘பாளை’ சண்முகத்தி்டம் இதைப் பற்றிச் சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டே ”பாரதியார் கவிதைகள் மொழி சம்பந்தமானது. அவற்றை புரிந்துகொள்வதற்கு நீ்ங்க தமிழில் கவிதை எழுத வேண்டுமென்று அவசியமில்லை. நீங்கள் சினிமாக்காரர், உங்களுக்கு சினிமா மொழி தெரிந்திருந்தால் போதும். சங்கீதத்திற்கு எல். வைத்தியநாதனை வைத்துக்கொள்வோம்.
ஒருவருக்கே சங்கீதமும் தெரியணும், பாரதியாரும் தெரியணுங்கிறதெல்லாம் நடக்கிற காரியமா?” என்று தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். நானும் அதைத்தான் நினைத்து வைத்தி ருந்தேன். அதனால் உற்சாகமாக வேலையில் இறங்கிவிட்டேன்.
உருப்பெற்ற விதம்
முதலில் அவரது பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒலிப்பதிவு செய்வதில் மும்மர மானேன். பாரதியாரின் 25 பாட்டுகளைத் தேர்ந்தெடுத்தோம். சில பாடல்களுக்கு மெட்டே அமைக்க முடியவில்லை.
வார்த்தைகளை இசைக்குத் தகுந்தாற்போல் வளைக்க முடியவில்லை. அதனால் மெட்டுக்குப் பொருந்துகிற 10 பாட்டுகளை இசையமைப்பாளர் எல். வைத்தியநாதன் தேர்ந்தெடுத்து மெட்டமைத்தார்.
பாரதியார் கவிதைகளைப் பாடல்களாக ரெக்கார்ட் செய்துவிட்டதால் திரைக் கதையில் கவனம் சென்றது. பாரதியின் வாழ்க்கையைத் திரைக்கதையாக மாற்றுவது கடினமாக இருந்தது. அவரின் வாழ்க்கை உண்மைகளைப் படமாக்கினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தோன்றியது.
தயாரிப்பாளரிடம் ஆலோசனை கேட்டேன். அவரும் யோசித்தவாறே ”என்னிடம் ஒரு தொழிற்சாலை சம்பந்தமாகச் சுற்றுச்சூழல் வழக்கு வந்திருக்கிறது.. தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.
அந்தத் தகவல்களைத் தருகிறேன். அப்புறம் முடிவுசெய்யலாம்” என்றார். அந்த வழக்கு சம்பந்தமான தகவல்களைப் படித்தபோது ‘ஏழாவது மனிதன்’ உருவானான்.
ஒரு ஊரில் பலரும் கவனிக்கத் தவறிய ஒன்றைச் சுட்டிக்காட்ட ஏழாவது மனிதன் தேவை. அந்த மனிதன்தான் ரகுவரன். திருநெல்வேலி ஏழாவது புரத்துக்கு ரயிலில் வந்து சேரும் அவருக்கு அங்கிருக்கும் சிமெண்ட் தொழிற்சாலையில் பொறியாளராக வேலை கிடைக்கிறது.
அதே வேளையில் அவரது வீட்டிற்குப் பால் கொண்டுவரும் பெண்ணோடு காதல் மலர்கிறது. தொழிற்சாலையில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் இருமல், காய்ச்சலால் கஷ்டப்படுவதால் அந்தத் தொழிற்சாலையின் முதலாளியின் மகனான தன் நண்பனிடம் முறையிடுகிறார்.
இதில் வாக்குவாதம் முற்றி ரகுவரன் தோல்வியைச் சந்திக்கிறார். இதற்கிடையில் முதலாளி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு வைத்து, அந்தப் பழியைக் கிராமத்து மக்கள் மேல் போட்டு தப்பிக்க முயல்கிறார். அந்த சூழ்ச்சியை ரகுவரன் முறியடித்துத் தொழிற்சாலையைக் கிராமத்து மக்களே நடத்துவதற்கு எவ்வாறு வழிசெய்கிறார் என்பதுதான் கதை.
தாமத வெற்றி
பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த விளம்பர நடிகை ரத்னாவைச் சிறிது முயற்சிக்குப் பிறகு படத்தில் நடிக்கச் சம்மதிக்க வைத்தோம். சென்னை அடையாறு பிலிம் இன்ஸ்டியூட்டில் நடிகர்களைத் தேர்வுசெய்வதற்காகச் சென்றிருந்தேன். வராண்டாவில் கெத்தாக நடந்துவந்த உயரமான மாணவனைப் பார்த்து “படம் நடிக்கிறியா”? என்று கேட்டேன். உடனே “சரி” என்றான்.
“திருநெல்வேலி வந்து சேரு” என்றேன். எனக்கும் கதாநாயகனுக்குமான பேச்சு இவ்வளவுதான் நடைபெற்றது. அவர்தான் பிற்காலத்தில் பிரபலமான வில்லன் நடிகரான ரகுவரன்.
அவருக்கு ‘ஏழாவது மனிதன்’ முதல் படம். அப்போது அவரது வயது 19. இப்படியாக ஒளிப்பதிவாளர் தர்மா, எடிட்டர் கே.என் ராஜ், ஆடியோ ரெக்கார்டிஸ்ட் தனபால், நாடக நடிகரான பாலாசிங், சத்யேந்திரா என்று ஒவ்வொருவராகப் படத்தினுள் வந்தார்கள்.
1982இல் மதுரையில்தான் முதன்முதலில் திரையிட்டோம். படத்தில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடலான “எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ” பாட்டைப் போட்டவுடன் திரையரங்கில் நிறையப் பேர் எழுந்து பருத்திப்பால் குடிக்கப் புறப்பட்டுவிட்டனர். அப்போது தியேட்டர் ஆபரேட்டர் “என்ன சார் சம்பந்தமில்லாமல் இங்கே பாட்ட போட்டிருக்கீங்க.
முதல்ல அந்தப் பாட்டை கட் பண்ணுங்க” என்று கூறிக்கொண்டே, அவரே அந்தப் பாட்டை வெட்டிவிட்டு படத்துக்கு நகர்ந்தார். அப்போதுதான் சினிமா இயக்குநர் பணி என்பது தனியாள் வேலை கிடையாது, அது ஒரு கூட்டு முயற்சி என்று அனுபவத்தில் புரிந்துகொண்டேன்.
மதுரையில் திரையிட்ட ஒரு வாரத்தில் சென்னை சபையர் தியேட்டரில் திரையிட் டோம். அங்கேயும் கூட்டம் வரவில்லை. பக்கத்தில் ‘சகலகலாவல்லவன்’ படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. தயாரிப்பாளர் ஒரு ஐடியா கொடுத்தார்.
தனியார் தொழிற்சங்கத் தலைவர் குசேலரிடம் படத்தைப் போட்டுக் காட்டுவோம். அவருடைய தொழிற்சங்க உறுப்பினர்களையும் சந்திப்போம் என்றார். படத்தைப் பார்த்து “படம் நல்லாதானே இருக்கு. ஏன் யாருமே வரவில்லை?” என்று சொல்லிக்கொண்டே தன் சங்க உறுப்பினர்களைப் பார்த்து “தியேட்டரை ரொப்புங்கப்பா” என்றார். சென்னை சபையர் தியேட்டரில் பத்து வாரம் படம் ஓடியது. அதற்குப் பிறகுதான் படம் பற்றி நாளிதழ்களில் விமர்சனம் வெளியானது.
மாஸ்கோ திரைவிழா
1983இல் சிறந்த தமிழ்ப்படமாக ‘ஏழாவது மனித’னுக்கு தேசிய விருது கிடைத்தது. தமிழக அரசும் சிறந்த கதைக்கான விருதை அருண்மொழிக்கு வழங்கி கௌரவித்தது. படத்தை ரூ. ஐந்து லட்சம் கொடுத்து தூர்தர்ஷன் வாங்கியது. படத்திற்கான வருமானம் அது மட்டும்தான்.
மேலும் இந்தியன் பனோரமாவில் திரையிடத் தேர்வானது. அதற்காக நானும் தயாரிப்பாளரும் டெல்லி போயிருந்தபோது கம்யூனிஸ்ட் தலைவர் என்.கிருஷ்ணனைச் சந்தித்தோம். இந்தப் படத்தை மாஸ்கோ திரைப்பட விழாவிற்கு அனுப்ப உதவிச்செய்ய முடியுமா என்று ‘பாளை‘ சண்முகம் கேட்டார். மாஸ்கோ திரைப்பட விழாவிற்குப் படம் தேர்வானது. விழாவுக்கு ஒருவர்தான் போக முடியும் என்றார்கள். ‘பாளை‘ சண்முகம் பெருந்தன்மையுடன் என்னை அனுப்பிவைத்தார்.
அவர் இல்லையென்றால் இப்படி ஒரு படம் அமைந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்தப் படம் வெளியாகி சில வருடங்களுக்குப் பிறகு, பிரச்சினைக்குரிய அந்தத் தனியார் தொழிற்சாலையில் மறுசுழற்சி முறையில் புகை வெளியே வருவதுபோல் மாற்றியமைத்தார்கள். அதற்குப் பிறகு எங்கெல்லாம் சுற்றுச்சூழல் சார்ந்த வழக்கு நடந்ததோ, அங்கே ‘இதோ ஏழாவது மனிதன்’ வந்துவிட்டார் என்று மக்கள் அடையாளப்படுத்தினார்கள். இதெல்லாம் தான் அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம்.”
கட்டுரையாளர் தொடர்புக்கு: mkannanjournalist@gmail.com