

“என்னை எல்லாரும் சோடாபுட்டினு கிண்டல் பண்றாங்க டாக்டர் கண்ணாடி போடாம இருக்க வழி இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்..." - வருண் பிரதாப், பத்தாம் வகுப்பு, மதுரை
வருண் கேட்பதைப் போல கண்ணாடி அணியாமலிருக்க வழி எதுவும் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஏன், எதற்காக நாம் கண்ணாடி அணிய வேண்டி வருகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஒருநாளின் பகல் இரவை உணர்ந்து நம்மை சரியான பாதையில் நடத்தும் நமது கண்களானது, உண்மையில் அதிக பிக்சல்கள் கொண்ட தேர்ந்ததொரு கேமராவைப் போன்றது. அதிலும் மூளையுடன் சேர்ந்து ஒரு மிகச்சிறந்த டிடெக்டிவ் ஏஜெண்டாகவும் பணிபுரிகிறது.
பொதுவாக கண் எனும் கேமராவில் நாம் பார்க்கும் காட்சிகள் விழி வெண்படலம் (cornea) வாயிலாக நுழைந்து, விழித்திரையில் குவிகிறது. அந்த விவரங்களை விழி நரம்புகள் மூளைக்குக் கொண்டு சென்று, பார்வை உணரப்படுகிறது. ஆனால், பார்வை குறைபாடு உள்ள விழிகளில் இந்தக் குவிதல் விழித்திரைக்கு முன்பாக அல்லது பின்பாக நிகழ்ந்துவிடுவதால், பிம்பங்களின் சரியான விவரங்கள் மூளைக்குச் செல்வதில் சிக்கல்கள் உருவாகிறது.
இதில் முன்பாகக் குவியும் நிலையான கிட்டப்பார்வையில் (myopia) அருகிலிருக்கும் பொருட்கள் துல்லியமாகத் தெரிந்து, தூரத்தில் இருப்பவை தெளிவாகத் தெரிவதில்லை. இதனால், வகுப்பில் கரும்பலகையில் எழுதியிருப்பதை இந்தக் கிட்டப்பார்வை குழந்தைகளால் படிக்க முடிவதில்லை. பள்ளி வயதுக் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த குறைபாட்டிற்கு, குழியாடிகள் எனப்படும் கான்கேவ் லென்ஸ் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
எதனால் இளம்வயதில் கண்ணாடி?
வளரும் குழந்தைகளை ஏன் இந்த கிட்டப்பார்வை அதிகம் பாதிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதும் முக்கியம். குழந்தைப் பருவத்தில் மற்ற உறுப்புகளைப் போலவே, கண்களும் அதன் தசைகளும் வளர்ச்சியடைகின்றன என்றாலும், ஒருசில குழந்தைகளில் மட்டும் கண்கள் நீளவாக்கில் அதிகம் வளர்வதால், ஒளிக்குவியல் விழித்திரைக்கு முன்பாக நிகழ்ந்து கிட்டப்பார்வை ஏற்படுகிறது. இதனால்தான் இளம்வயதிலேயே கண்ணாடி அணிவதும் அவசியமாகிறது. பொதுவாக இந்த வளர்ச்சி இருபது வயதைத் தாண்டி நிகழ்வதில்லை என்பதால், கண்ணாடியின் பவரும் அதற்குப்பின் மாறுவதில்லை என்பது ஆறுதல்.
அவ்வாறு உரிய நேரத்தில் கண்டறிய தவறி, கண்ணாடி அணியாமலிருந்தால் கிட்டப்பார்வை மேலும் அதிகரித்து, high myopia எனும் நிலை இக்குழந்தைகளுக்கு ஏற்படுவதுடன், பின்னாளில் விழித்திரை விலகல், ‘க்ளாக்கோமா’ எனும் கண் உயர் அழுத்தம், மேகுலா சிதைவு போன்ற அதிக பாதிப்புகளால் பார்வை இழப்பு ஏற்படும் வாய்ப்புகளும் இதில் உள்ளது.
கண்ணாடிகள் ஏன் அவசியம் என்பது இப்போது புரிகிறதல்லவா வருண்! ஆக, பிடிக்கிறதோ இல்லையோ கண்ணாடி நிச்சயம் நமது விழிகளைக் காத்து பார்வையை அளிக்கும் முக்கியக் கருவி என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
காண்டாக்ட் லென்ஸ் அணியலாமா?
இதில், பிறரின் ஏளனத்தைத் தவிர்க்க சோடாபுட்டிக் கண்ணாடிக்கு மாற்றாக கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொள்ளலாம் என்றாலும், கான்டாக்ட் லென்ஸ்களை முறையாக சுத்தப்படுத்துதல், அவற்றை முறையாகப் பராமரித்தல், சரியான சமயத்தில் அவற்றை மாற்றுதல் என பள்ளி வயதில் அதற்கான கவனமும், மெனக்கெடல்களும் கான்டாக்ட் லென்ஸில் அதிகம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இருபது வயது தாண்டிய பின் வாய்ப்புள்ளவர்கள் லேசர் அறுவை சிகிச்சை மூலமாக கண்ணாடி இல்லாத நிரந்தரத் தீர்வையும் அடையலாம்.
பொதுவாக, இயற்கையிலேயே வைட்டமின் ஏ அதிக முள்ள கேரட், பப்பாளி, கீரை வகைகள்,பழங்கள், மீன், முட்டை ஆகியனநிச்சயம் கண்ணாடி அணிந்தவர்அணியாதவர் என எல்லோரதுகண்களின் பலத்தை அதிகரிக்கும் என்றாலும், இவை கண்ணாடி அணிபவர்களுக்கு அதைத் தவிர்க்கும் அளவுக்கு உதவாது என்பதையும் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவை அத்தனைக்கும் மேலாகக் குழந்தைகளின் பார்வையைப் பெரிதும் பாதித்து, கிட்டப்பார்வை அதிகரிப்புக்குக் காரணம் ‘ஸ்கிரீன் டைம்’. அதாவது, மொபைல், டேப் லெட், டிவி, கணிணி ஆகிய கேட்ஜட்கள் முன்பு செலவிடும் நேரம். இப்படி ஒளித்திரையின் முன் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் குழந்தைகளுக்குச் சூரிய ஒளிக்கதிர்கள் மற்றும் அதன் வைட்டமின் டி போதுமான அளவு கண்களுக்குக் கிடைக்காமல் இருப்பதாலும் பார்வைக் குறைபாடுகளும், அதன் பாதிப்புகளும் அதிகரிக்கிறது.
ஒருநாளில் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக மட்டுமே குழந்தைகள் ‘ஸ்கிரீன் டைம்’ கழிக்கலாம் என்று ஒருநாளில் அமெரிக்கா அண்மையில் நிர்ணயித்தது. ஒருநாளில் குறைந்தது ஒரு மணிநேரமாவது வெளியே சென்று குழந்தைகள் விளையாடவும் பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளின் பார்வைத் திறனை பரிசோதித்துக் கொள்ளவும் வலியுறுத்துகிறது.
இந்த ஆலோசனைகளை நாமும் ஏற்று நடப்பதுடன் மற்றவர்களுக்கும் பகிரலாமே வருண்!
(ஆலோசனைகள் தொடரும்)
கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com