

வேட்டையாடியும் மரம், செடிகளிடம் கிடைத்தவற்றையும் உண்டும் வாழ்ந்துவந்த மனிதன், இயற்கைக்கு முரணாகச் செய்த முதல் வேலை விவசாய மாகத்தான் இருக்கும். இதற்கு இயற்கை ஒத்துழைப்பையும் நல்கியிருக்கிறது, பாதகமும் செய்திருக்கிறது. இதில் பறவை கள், பூச்சிகளின் பங்கு மிகப் பெரியது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்களின் குறிஞ்சித் திணையில் ‘தினைப்புலம் காத்தல்’பற்றிய குறிப்புகள் நிறைய கிடைக்கின்றன.
அதாவது, தலைவியும் அவளது தோழியும் நன்கு விளைந்து நிற்கும் தினைக்கதிர்களை கிளிகளும் மயில்களும் உண்டுவிடாமல் காவல் காப்பர். வயலில் பரண் அமைத்து அதில் அமர்ந்து பல கருவிகளால் ஒலி எழுப்பிப் பறவைகளை விரட்டுவர். இதற்கு புள்ளோப்புதல் என்று பெயர்.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதர்கள், விவசாயத்துக்குப் பறவைகள் செய்யும் நன்மை தீமைகள் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர். ஆனால், 20ஆம் நூற்றாண்டில் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் அந்தப் பட்டறிவைத் தொலைத்துவிட்டனர். மனிதன் இயற்கைக்குச் செய்த துரோகம் பசுமைப் புரட்சி எனலாம்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, வடமாநிலங் களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து பயிர்களை அழித்ததைப் போலவே, 1960களின் இறுதியில் சிறவை அல்லது சிறவி எனும் வாத்து வகை அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துக்குக் கூட்டங்கூட்டமாக படையெடுத்து வந்து நெற்பயிர்களை நாசம் செய்ததாகக் கூறப்படுகிறது. இப்பறவை படையெடுப்பு பற்றி அன்றைய சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போதைய முதலமைச்சர் அண்ணாவும் இது குறித்துப் பேசியிருக்கிறார்.
பறவைகளின் உதவி
பெரும்பாலான பறவைகள் விவசாயத் திற்கு உதவுவனவாகவே இருக்கின்றன. பயிர் செய் வதற்கான முதல் பணி உழவடித்தல். அப்போதே பறவைகளின் உதவி தொடங்கிவிடுகிறது. ஆழமாக உழும்போது, அடி மண்ணிலிருந்து தீமை செய்யும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் மேலே புரட்டிப் போடப்படும்.
அப்போது டிராக்டரின் பின்னாலேயே கூட்டமாக அலையும் ‘மாடு மேய்ச்சான் கொக்குகள்’(Cattle Egret) கூட்டுப்புழுக்களையும் வேறு பூச்சிகளையும் தின்றுவிடும். அதனால், பயிர் வளரும்போது கூட்டுப்புழுக்கள் பூச்சிகளாக மாறி பயிரைப் பாதிப்பது தடுக்கப்படுகிறது.
பறவைகள் இல்லாவிட்டால் பூச்சிகளே உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும். வயல்வெளிகளில், பறந்து பறந்து பூச்சிகளைப் பிடித்து விவசாயிகளின் நண்பனாகத் திகழும் பறவை ’இரட்டைவால் குருவி’ எனப்படும் ‘கரிச்சான் குருவி’. இதைப் புரிந்துகொண்ட இயற்கைவழி விவசாயிகள், தங்கள் வயலுக்குள் பல இடங்களில் கரிச்சான் குருவிகள் அமர ‘T’ வடிவக் குச்சிகளை நட்டு, செலவின்றிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றனர்.
‘பசுமைப் புரட்சி’ விவசாயிகள் பெரும் பணம் செலவுசெய்து பூச்சிக்கொல்லி நச்சுக்களைத் தெளித்துச் சூழலையும் கெடுக்கின்றனர். பஞ்சுருட்டான், தவிட்டுக் குருவி, கதிர்க் குருவி ஆகிய பறவை களும் வயல்வெளி பூச்சிக் கட்டுப்பாட்டில் பங்குவகிக்கின்றன.
இரவு நண்பன்
நீர் பாய்ச்சிய நெல் வயல்களில் அரிவாள் மூக்கன், கொக்கு, நாரை, உள்ளான் போன்ற நீர்ப்பறவை வகைகள் அதிக அளவில் வந்து இறங்கும். பார்ப்பதற்கு, அவை வயலில் களையெடுக்கின்றனவோ என எண்ணத் தோன்றும். ஆனால், சேற்றில் இருக்கும் புழு பூச்சிகளை அவை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்.
அவற்றின் எச்சம் வயலின் மண் வளத்தைப் பெருக்கும். ஆனால், சில உழவர்கள், அப்பறவைகள் நெற்பயிரை மிதித்து அழித்துவிடும் என்று எண்ணி அவற்றை விரட்டுகின்றனர். பயிர் வேர் விட்டபின் பறவைகள் மிதித்து அழிவதற்கு வாய்ப்பில்லை. எனவே, அவற்றைத் துரத்த வேண்டியதில்லை.
கோடைக் காலத்தில் ஏரி, குளங்கள் வற்றியபின் கிடைக்கும் வண்டல் மண், நீர்ப்பறவைகளின் எச்சத்தால் நுண்ணுயிர்கள் பெருகி வளமானதாக இருக்கும். தங்கள் நிலத்தில் விவசாயிகள் அதை இட்டால் மண் வளம் பெருகும்.
விவசாயிகளின் மற்றொரு எதிரி எலிகள். அவற்றை வேட்டையாடுவதில் முதன்மையாக விளங்கும் ஆந்தைகளும் விவசாயி களின் உற்ற நண்பனே.
கரிச்சான் குருவி பகல் வேளைகளில் பூச்சிகளை வேட்டையாட அமரும் ‘T’ வடிவ குச்சிகளை, இரவு வேளைகளில் எலி வேட்டைக்கு ஆந்தைகள் பயன்படுத்திக் கொள்ளும். ஆந்தைகளுள் ஒரு வகையான கூகை (Barn Owl) எலிகளைப் பிடிக்கும் காட்சியை எழுத்தாளர் சோ. தர்மன் ‘கூகை’ என்னும் நாவலில் அழகாக வர்ணித்திருப்பதை இந்த இடத்தில் நினைவுகூரலாம்.
பறவைகளின் உணவு
அறுவடைக்கு ஆயத்தமாகிவரும் பயிர்களை மேய்வதில் சூரன் கிளிதான். நெல், கம்பு, சோளம், தினை, பழ வகைகள் எனப் பல பயிர்களிலும் வாய்வைக்கும் ஒரே பறவை பச்சைச் கிளிதான். இரண்டாவது இடம் மயிலுக்கு. முன்பு காடுகளுக்கு அருகில் மட்டுமே வாழ்ந்துவந்தவை, இன்று எல்லாப் பகுதிகளுக்கும் பரவிவிட்டன.
இவை தானியப் பயிர்களை விரும்பி உட்கொள்கின்றன. நான் பயிரிட்டிருந்த ‘வாசனை சீரகச் சம்பா’ நெற்கதிர்களைச் சாப்பிட பத்துக்கும் மேற்பட்ட மயில்கள் வயலுக்குள் இறங்குவதைக் கண்டிருக்கிறேன். சின்ன வெங்காயப் பயிரையும் மயில்கள் சேதப்படுத்துவதுண்டு.
அடுத்ததாகச் சில்லைகள். 10 செ.மீ. நீளமே உள்ள இந்த சின்னஞ்சிறு குருவிகளின் வேறு பெயர்கள் நெல்லுக்குருவி, தினைக் குருவி. பெயருக்கேற்றாற்போல் நெல், தினை, சோளம் முதலான சிறு தானியங்களை உண்ணும்.
பயிர்களைச் சேதப்படுத்தும் பறவை களை, விவசாயிகள் கைகளைத் தட்டியோ, பட்டாசுகளை வெடித்தோ ஓசை எழுப்பி விரட்டுகின்றனர். சில இடங்களில் மயில் களுக்கு விஷம் வைத்துக் கொலை செய்யும் பாதகங்களும் நிகழ்கின்றன. ஆனால், பெரும்பாலும் முருகனின் வாகனம் என்னும் நம்பிக்கையின் காரணமாக மயில்களை விரட்ட மட்டுமே செய்கின்றனர்.
முன்னதாகவே சொன்னதுபோல் இயற்கை, வேளாண்மைக்கு ஒத்துழைப்பும் நல்கும் பாதகமும் செய்யும். அதற்காக உழவர்கள் ரசாயன நச்சுக்களைக் கையில் எடுத்தால், உணவுச் சங்கிலி அறுந்து, சூழல் சீர்கெட்டு, மனித இனமும் ஒரு காலத்தில் மாண்டு போகும். வேளாண்மை ஒரு வகையில் இயற்கைக்கு முரணான செயல்தான், ஆனாலும் அதை இயற்கையோடு ஒத்திசைந்தே செய்யப் பழக வேண்டும்.
கட்டுரையாளர், இயற்கை விவசாயி
தொடர்புக்கு: pandiyan183@gmail.com