இயற்கை 24X7 - 12: உடலே கடல் கடலே உடல்

இயற்கை 24X7 - 12: உடலே கடல் கடலே உடல்
Updated on
2 min read

சிறிதளவு தூய சோடியம் கட்டியைத் தண்ணீரில் போட்டால் அது ஆற்றலுடன் வெடிக்கும். அது போல, முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆபத்தான நச்சுவளிகளுள், முதலிடம் பெற்ற தனிமம் குளோரின்.

இந்த இரண்டு தனிமங்களும் தனித்தனியே ஆபத் தானவை. அதனால், இரண்டையும் ஒன்றாக்கி நம் உயிர்வாழ்வுக்குத் தேவையான பொருளாக்கித் தருகிறது கடல். அதுவே சோடியம் குளோரைடு எனப்படும் உப்பு.

ஒவ்வோர் ஆண்டும் நிலத்திலிருந்து கடலுக்குச் செலுத்தப்படும் உப்பின் அளவு 540 மெகா டன்கள். ஒரு லிட்டர் கடல் நீரில் இரண்டரை தேக்கரண்டி உப்பு உள்ளது. நம் உடலிலும் கடல் நீர் கலந்துள்ளது. கடல் உப்பின் அளவு லிட்டருக்கு 3.4 மில்லிகிராம் என்றால், நம் உடல் உப்பின் அளவு லிட்டருக்கு 0.08 மி.கி. மனிதர்கள் என்பவர்கள் கடலின் மிச்சம். அதனால்தான், நாம் கடல் நீரையே வியர்க்கிறோம்; கண்ணீராகக் கரைக்கிறோம்.

அவசியத் தனிமங்கள்

‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்போம். ஆனால், நம் வாழ்க்கைக்கு உப்பிட்ட கடலை மட்டும் மறந்துவிடுகிறோம். உப்பை மட்டுமா தருகிறது கடல்? நமது வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு இன்றியமையாத் தனிமங்களையும் சேர்த்தே தருகிறது. அவற்றுள் இரண்டைப் பற்றிப் பார்ப்போம்.

முதலாவது கந்தகம். இது உயிரினங் களின் வாழ்க்கைக்கு அவசியமான ஒரு தனிமம். நாளொன்றுக்கு 900 மி.கி. அளவில் அது நம் உடலுக்குத் தேவை. அது குறைந்தால் உடலுறுப்புகளைத் தாக்கும் பத்துக்கும் மேற்பட்ட நோய்கள் நமக்கு இலவசம்.

ஒருகாலத்தில் நிலத்தில் ஏராளமான கந்தகம் இருந்திருக்க வேண்டும். நெடுங்காலமாகப் பாறைகள் தேய்வது, தாவரங்கள் உறிஞ்சுவது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது, புதைபடிவ எரிபொருள்களை எரிப்பது போன்ற வற்றால் அது குறைந்திருக்கவும் வேண்டும். ஆனால், கந்தகத்தின் அளவு நிலத்தில் குறையவில்லை. ஒவ்வோர் ஆண்டும் அது லட்சக்கணக்கான டன் கணக்கில் சேர்ந்துகொண்டிருக்கிறது. அது எப்படி என்பதே ஜேம்ஸ் லவ்லாக்கின் சிந்தனையாக இருந்தது.

கையாவின் பணி

நெடி வீசும் கடற்பாசிகள் இந்நிலையில் தான் உதவிக்கு வருகின்றன. கரையோரக் கடல்நீரில் சல்பேட் அயனிகள் கரைந்துள்ளன. அதிலுள்ள சல்பர் எனும் கந்தகம் பிரிந்து டைமீத்தைல் சல்பைடு எனும் சேர்மமாக மாறுகிறது.

இது எவ்வாறு நடக்கிறது என்று ஆய்வுசெய்கையில், கடலில் வசிக்கும் மற்றொரு சிவப்புநிற உயிரியைக் கண்டறிந்தார்கள். கடற்பூண்டுகளைப் பற்றிக்கொண்டு வாழும் அதற்குப் பாலிசிஃபோனியா பாஸ்டிஜியாட்டா (Polysiphonia Fastigiata) என்று பெயர்.

இப்பாசிகள் கலந்த கடல்நீரை ஒரு குடுவையில் பாதியளவு நிரப்பி மூடிவைத்து, அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் அதில் போதுமான அளவு டைமீத்தைல் சல்பைடு உருவாகி இருக்கும்.

அவை காற்று வெளியில் காணப்படும் ஆவியைத் தீப்பற்றக்கூடியதாக மாற்றுகிற அளவுக்கு உற்பத்தித்திறன் கொண்டவை. கந்தகம் இவ்வாறு உயிரியல்ரீதியாக மெத்திலேற்றம் செய்யப்படுவதைக் கண்டு அறிவியலாளர்கள் வியப்படைந்தனர்.

இந்த டைமீத்தைல் சல்பைடிலுள்ள கந்தகம்தான், நிலத்திலிருந்து அகற்றப்பட்ட கந்தகத்தை ஈடுசெய்யும் விதத்தில், கடலிலிருந்து நிலம் நோக்கி வீசும் காற்றில் எடுத்துச் செல்லப்படுகிறது. இல்லையெனில் புவியின் கந்தகச் சமநிலை என்றைக்கோ குலைக்கப்பட்டிருக்கும். எனவே, இதை கையாவின் பணியாகக் கருதினார் லவ்லாக்.

பாசி தரும் அயோடின்

இதேபோன்ற மற்றொரு தனிமம் அயோடின். அயோடின் இல்லாமல் வளர்சிதை மாற்றங்களை ஒழுங்கு படுத்தும் ஹார்மோன்களை தைராய்டு சுரப்பியால் உற்பத்திசெய்ய முடியாது. மொத்த வாழ்நாளுக்கும் மனித உடலுக்குத் தேவைப்படும் அயோடின் அளவு ஒரு தேக்கரண்டி அளவே.

ஆனாலும், மொத்த மக்கள்தொகையில் 13 சதவீதத்தினர் இந்தப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அயோடினையும் மீத்தைல் அயோடைடு எனும் சேர்மத்தின் வடிவில் கடலே உயிரியல் ரீதியாக உற்பத்திசெய்கிறது. அதைச் செய்வதும் ஒரு வகைக் கடல் பாசியே.

கடலில் காணப்படும் ஒருவகை பழுப்புநிறப் பாசிகள் லேமினேரியா எனப்படுகின்றன. இவற்றை அறுவடை செய்து எரித்த சாம்பலிலிருந்தே செயற்கை அயோடின் தயாரிக்கப்படுகிறது. இப்பாசிகள் நிறைந்த கடலின் மேற்பகுதிக் காற்றில் இயற்கையாகவே மீதைல் அயோடைடு சேர்மம் நிறைந்துள்ளது கண்டறியப் பட்டது. இச்சேர்மம் நிலம் நோக்கிச் செல்லும் காற்றில் சில மணித்துளிகளில் கதிரொளியால் சிதைவுற்று அயோடினாக மாறுகிறது.

இவ்வாறு நம் உடலுக்கு அவசியமான தனிமங்கள் மட்டுமன்றி, நம் உடலை வாழவைக்கும் உயிர்வளியையும் பெருமளவில் தருவது கடல்தான். அதை உணராமலேதான் நம்மில் பலரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

(அடுத்த வாரம்: நீலம் இல்லையேல் பச்சை இல்லை)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்

தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in