

கடல் - இதுவே புவியின் கருப்பை. ஆம், உயிர்கள் தோன்றிய இடம். அதனால்தான் இயற்கை அமைவுகளில் இதை மட்டும் ‘கடலம்மா’ என்கிறோம். கரையைத் தழுவும் அலைகள் நம் தொப்புள் கொடி.
இதிலிருந்தே நிலத்தை எட்டிப்பார்க்கும் ஆவலில் தனியே பிரிந்து பாசியாக, செடியாக, கொடியாக, மரமாக மாறினோம். இங்கிருந்தே நீந்துவனவாக, நீர்நில வாழ்வியாக, ஊர்வனவாக, பறப்பனவாக மாறி இறுதியாகப் பாலூட்டிக்கொண்டிருக்கிறோம்.
கடல் என்றால் என்ன? ‘அது உப்பைத் தருவது’, ‘மீன்களைக் கொடுப்பது’, என்று பலவித பதில்கள் கிடைக்கும். அந்த அளவுக்கு உலகின் கருப்பையை நாம் மறந்துவிட்டோம். இன்று கடல் என்றால் ‘பீச்’ மட்டுமே.
புரிந்துகொள்ளப்படாத கடல்
உலகம் மனிதர்களுக்கே சொந்தம் என்பதே நம் எண்ணம். ஆனால், உயிரியலாளர்கள் வேடிக்கையாகச் சொல்வார்கள்: “இந்த உலகம் மீன்களுக்கே சொந்தம்” எப்படி? உலகின் மொத்தப் பரப்பில் 21 விழுக்காடு மட்டுமே நிலம். மீதி 79 விழுக்காடு கடல்தான். அக்கடலில் பெரும்பான்மையாக வாழும் உயிரினம் எது? மீன்கள்தானே?
இம்மாபெரும் கருப்பை தன் பனிக்குடத்தில் 1,200 கோடி கன கிலோமீட்டர் நீரை நிரப்பி வைத்துள்ளது. இந்நீருடன் கடலை எடை போட்டால் 1.3 மில்லியன் மில்லியன் மில்லியன் டன்கள் இருக்கும்.
அதைக் கணக்கிட கால்குலேட்டர் உதவாது, கற்பனைதான் செய்ய வேண்டும். ஒரு கணக்கீட்டின்படி இந்நீரினுள் மூன்று கோடி வகை உயிரினங்கள்வசிக்கலாம். சோகம் என்னவென்றால் அவற்றில் பல இன்னும் நம்மால் வகைபிரித்துஅறியப்படவே இல்லை.
நமக்குக் கடல் நீரெல்லாம் ஒரே நீராகவே தோன்றும். ஆனால், ஒவ்வொரு பகுதிக் கடலும் வெவ்வேறு வெப்பநிலைக் கொண்டவை. வெவ்வேறு உப்புத்தன்மை உடையவை. பசிபிக் கடலைவிட அட்லாண்டிக் கடல் அதிக உப்புத்தன்மை உடையது. உப்பு அதிகமிருந்தால் நீர் அதிக அடர்த்தியுடன் இருக்கும். அடர்த்தியான நீர் மூழ்கும் தன்மையுடையது.
எடுத்துக்காட்டாக, அட்லாண்டிக் கடலில் உப்பின் கூடுதல் சுமை இல்லாவிட்டால் அதன் நீரோட்டம் ஐரோப்பாவுக்குக் கிடைக்கும் வெப்பம் அனைத்தையும் இழக்கச் செய்வதோடு ஆர்க்டிக் வரையிலும் சென்று வடதுருவத்தையும் சூடாக்கும். ஆர்க்டிக் பனி உருகினால் கடல் மட்டம் உயரும். அப்படி நடந்தால் நாம் கடலை வேடிக்கை பார்க்கப் போவதுபோல, கடல் நம்மை வேடிக்கை பார்க்க உலகின் பல நகரங்களுக்குள் நுழையும்.
ஆற்றல் சுரங்கம்
கடலைப் பற்றி நமக்குப் பெரும்பாலும் தெரியாது என்பதே உண்மை. அதனால்தான், கடலையும் நிலத்தையும் பிரித்தே பார்க்கும் தவறைச் செய்கிறோம். முன்பு விண்ணியலாளர்களே கடலும் வளிமண்டலமும்தனித்தனி அமைப்பு என்றே கருதினர். தற்போது அவற்றை ஒரே அமைப்பாகக் கருதும் பார்வையை வந்தடைந்துள்ளனர்.
வானிலிருந்து வரும் கதிரொளியின்ஆற்றல் இங்கே காற்று, நீர் சார்ந்த இயக்கங்களாக மாறுகின்றன. அந்த ஆற்றலை உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக விநியோகிக்கும் மாபெரும் நீராவி இயந்திரம் ஒன்றை இயற்கை நிறுவியுள்ளது. அந்த இயந்திரத்தின் மையப் பகுதியே பெருங்கடல். அவ்வகையில் புவியின் உண்மையான ஆற்றல் கிடங்கு கடலே. அப்படி என்ன ஆற்றலைக் கொண்டிருக்கிறது கடல்?
அறிவியலின் கண்டறிதல்
அடுத்த முறை பொழுதுபோக்கக் கடற்கரை யோரம் செல்வதாக வைத்துக்கொள்வோம். கடலில் தென்படும் பாசிகளைக் கொஞ்சம் கையில் அள்ளி மோந்து பாருங்கள்.
லேசான நெடியை உணரலாம். வேறெந்த எண்ணமும் தோன்றாமல் மீண்டும் அவற்றைக் கொட்டிவிடுவோம். ஆனால், ஜேம்ஸ் லவ்லாக் போன்ற அறிவியலாளர்கள் அந்தப் பாசியின் நெடிக்கு ‘கையா’வில் என்ன பங்கிருக்க முடியும் என்று சிந்திக்கிறார்கள்.
‘பாசிகள் கடலில் ‘சும்மா’ மிதந்து கொண்டிருக்க வில்லை. இயற்கை அமைவில் கட்டாயம் அதற்கொரு பங்கை கையா அளித்திருக்கும். அது என்னவாக இருக்கும்?’ என்று சிந்திக்கிறார்கள். கடல், நிலம், காற்று இவற்றுக்கு இடையேயான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து ஆய்வு செய்கிறார்கள். பிறகே, கடலுக்கும் நிலத்துக்கு இடையே நிகழும் முதன்மையான கொடுக்கல் வாங்கல்களைக் கண்டறிந்தனர்.
அந்தக் கொடுக்கல் வாங்கல் இல்லாவிட்டால் மனித உடலின் வளர்சிதை மாற்றங்கள் என்னவாகும் என்று யோசிக்கவே அச்சமாக இருக்கிறது. கடலின் பல கொடைகளை நாம் இன்னும் அறிந்துகொள்ளவே இல்லை. நம்மைப் பொறுத்தவரை கடல் நமக்குக் கொடுப்பது மீனும் உப்பும் மட்டுமே. ஆனால், கடல் என்பது வெறும் உப்பு மட்டுமா?
(அடுத்த வாரம்: உடலே கடல்; கடலே உடல்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com