

‘மெஸ்வாக்’ என வடமொழியிலும் ‘டூத் பிரஷ் மரம்’ என ஆங்கிலத் திலும் அழைக்கப்படும் மரத்தை திருப்பூர் மக்கள் ‘குன்னி மரம்’ என்கின்றனர்.
‘சால்வடோரா பெர்சிகா’ என்கிற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த மரத்துக்கு ‘பாங்கர்’, ‘ஓமை’, ‘உகாஅய்’ என இலக்கியத்திலும், ‘உகா மரம்’ எனக் கலைக் களஞ்சியத்திலும், ‘களர் உகா’ என திருநெல்வேலியிலும் பெயர் வழங்கப்படுகிறது. இது ஒரு பசுமை மாறா மரம். வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.
இந்த மரத்தை முதன் முதலில் கன்னியா குமரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் பெருமணல் என்கிற கடலோர ஊரருகே கிராம தேவதைக் கோயிலில் கண்டேன்.
அங்கே அலையாத்திக் காடுகள் வளர்ப்பில் ஈடுபட்டிருந்தபோது, மிளகு போன்றிருக்கும் உகா மரத்தின் விதைகளைச் சேகரித்து நாற்றுப்பண்ணையில் முளைக்கவைக்க முயன்றேன். குச்சிப் பதியன்கள் மூலம் வளர்க்க முடியுமா என்றும் பார்த்தேன். ஆயினும் வெற்றி கிடைக்கவில்லை.
ராமேஸ்வரம் தீவுகளில் இளவேனிற் காலத்தில் வலசைப் பறவைகளின் விரவலைப் பதிவுசெய்வதற்காகச் சென்றிருந்தபோது இந்த மரத்தைத் தோப்பாகப் பார்த்தேன். அப்போது மரங்கள் பூத்துக் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. மைனா, கொண்டலாத்தி, புறா உள்ளிட்ட பறவையினங்கள் அவற்றின் பழங்களை ஆர்வத்துடன் கொத்தித் தின்றபடி இருந்தன.
இம்மரம் உப்புத்தண்ணீரில் நன்கு வளரும் இயல்பைப் பெற்றிருந்ததால், நெய்தல் நிலத் தாவரமாக இருக்கக்கூடும் என நினைத்தி ருந்தேன். ஒருமுறைக் கானுலாப் பயணமாக முதுமலையிலிருந்துப் பாலமரப்பட்டியை நோக்கி நடந்து சென்றபோது, இதே வகை மரங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் கோயம்புத்தூரின் பல பகுதிகளிலும் இந்த வகையான மரங்களைக் கண்ணுற்றிருக்கிறேன்.
மூதாதையரைப்பார்த்த வியப்பு
2019ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர், திருப்பூரிலுள்ள பெருமரங்களைப் பதிவுசெய்யும் முயற்சியில் ராக் அமைப்பு, பல்வேறு அமைப்புகளோடு சேர்ந்து ஈடுபட்டு வருகிறோம். அது தொடர்பாகப் பெரு மரங்களைத் தேடிச்சென்ற ஒரு பயணத்தில் பல்லடம் தாண்டி தாராபுரம் செல்லும் வழியில் மாறுபட்ட தோற்றத்துடன் கூடிய ஒரு மரத்தைப் பார்த்து வண்டியை நிறுத்தினோம்.
அருகில் சென்று பார்த்தபோது, அது ‘உகா மரம்’ எனத் தெரிந்துகொண்டோம். அது மிகப் பெரிதாக இருந்தது. இது போன்ற பெரிய மரங்களைக் காப்பதன் அவசியம் குறித்தும் சாலை விரிவாக்கத்திற்காக இம்மரம் வெட்டப்படும் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதையும் உணர்ந்தோம்.
அண்மையில் ஓர் இயற்கை சந்திப்பு திருப்பூர் திருவெண்ணாற்றங்கரையில் (கௌசிகா நதிக்கரை) நடைபெற்றது. அருகில் நிழலான இடம் இருக்கிறதா எனத் தேடியபோது சடையப்பன் கோயில் தென்பட்டது. அங்கே சென்றவுடன் என் கண்கள் அகல விரிந்தன.
காரணம், அங்கிருந்த மிகப் பெரிய மரம். இந்த வகையைச் சேர்ந்த இவ்வளவு பெரிய மரத்தை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. இதற்கு முன் குண்டடம் அருகே ஒரு பெரிய பொந்தம்புளிமரத்தைப் பார்த்தபோதுஏற்பட்ட வியப்பு இப்போதும் ஏற்பட்டது. 400 வருடத்திற்குமுந்தைய மூதாதையரைப்பார்த்த நினைவில் கரைந்தேன்.
பகுத்தறிவாளனாகஇருந்தும் இந்த மரம் காப்பாற்றப்படுவதற்குக் காரணமாக இருந்த அந்தக் காவல் தெய்வத்தை நன்றியுடன் நினைத்துப்பார்த்தேன்.
அருகில் வசித்துவந்த வேளாண் குடி ஒருவரைத் தேடிச்சென்று அந்த மரத்தின் பெயரை விசாரித்தேன். அது ‘குன்னி மரங்க. ஒன்னுத்துக்கும் உதவாதுங்க’ என்றார்.
அது முழு உண்மையாகப் படவில்லை. இம்மரத்தின் குச்சியை மூலப்பொருளாக்கி ‘Miswak’ என்ற பெயரில் வட இந்திய நிறுவனங்கள், இங்கிலாந்தில் சங்கன் என்கிற பெயரிலும் சுவிட்சர்லாந்தில் குவெர்லி மிஸ்வாக் என்கிற பெயரிலும் பற்பசை உற்பத்தி நிறுவனங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
பல் தூய்மைக்கு உகந்த மரம் என உலக சுகாதார நிறுவனமும் அங்கீகரித்துள்ளது. இதன் கனிகளை உண்ணலாம். இலை, பட்டைகளிலிருந்து சில மருந்துகள் உருவாக்கப்படுகின்றன. அத்துடன் அரேபியர்களது வணிகம் தழைத்தோங்கிய இடங்களிலெல்லாம் இம்மரம் காணப்படுவது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது.
சங்க இலக்கிய ஒப்புமை
இம்மரத்தின்பழத்தைக் குயிலின் கண்களுக்கு ஒப்புமை செய்துள்ள அகநானூறு வரிகள் எண்ணியெண்ணி வியக்கத்தக்கவை.
“குயில் கண் அன்ன குரூஉக்காய் முற்றி
மணிக்காசு அன்ன மாநிற இருங்கனி
உகாய் மென்சினை உதிர்வன…” (அகநானூறு 293).
யானை இம்மரத்தின் பட்டையை உண்ணும் என்கிற செய்தியை
“கான யானை தோல் நயந்து உண்ட
பொரி தாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை…” எனும் (குறுந்தொகை 79:2) பாடல் தெரிவிக்கிறது.
இதன் பழத்தின் சுவை மிளகுப் பழத்தின் சுவையைப் போன்றிருக்கும்என்கிற செய்தியை நற்றிணைப் பாடல் தெரிவிக்கிறது. “மிளகு பெய்தனைய சுவைய புன் காய் உலறுதலை உகாஅய்” (நற்றிணை 66).
மரங்களைக் காக்க வேண்டாமா?
கடலூர் மாவட்டத்திலுள்ள ஒமப்புலியூர் கோயில், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் காங்கேயம்பாளையம் ராமர் கோயில், திருப்பூர் மாவட்டம் சுல்தான் பேட்டை ஆகிய இடங்களில் கோயில் தல மரமாகவும் சாயல்குடி அருகிலுள்ள கூராங்கோட்டை தர்மமுனீஸ்வரர் கோயிலில் தோப்பாகவும் இம்மரம் உள்ளது. இந்த மரத்தின் குச்சியை முகமது நபி பல் துலக்கப் பயன்படுத்தினார் என்கிற தகவலும் உள்ளது.
அதே நேரம் கோயில் மரங்கள் பக்தர்களால் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. உயிருள்ள, வளரக்கூடிய மரத்தைச் சுற்றி கான்கிரீட் தளம் போடுவது, மரங்களில் ஆணி அடித்து வேண்டுதல் தொட்டில் தொங்கவிடுவது, கோயில் மணியை மாட்டிவிடுவது, மரங்களுக்குஅடியில் பொங்கல் வைப்பது போன்ற செயல்கள் அரங்கேறுகின்றன. இவை அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டியவை.
நன்கு வளர்ந்த மரங்கள் மாபெரும் கருவூலங்கள். அவற்றில் பொருளியல் மதிப்பை மட்டும் தேடாமல் அவற்றைக் காக்க முனைப்பு காட்ட வேண்டும். அப்போதுதான் அவற்றிலிருந்து ஓராயிரம் மரங்கள் விதைப் பரவல் மூலம் உருவாக்க வாய்ப்பு ஏற்படும்.
கட்டுரையாளர், தமிழ்நாடு அரசு காட்டுயிர் வாரிய உறுப்பினர்,
தொடர்புக்கு: arulagamindia@gmail.com