

காஷ்மீரைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் சூரிய ஆற்றலில் இயங்கும் காரை உருவாக்கி சாதனை படைத்து இருக்கிறார். பிலால் அகமது, ஸ்ரீநகரைச் சேர்ந்த அந்த கணித ஆசிரியர் . செல்வந்தர்கள் மட்டுமல்லாமல்; அனைவரும் பயன்படுத்தும் வகையில் சூரிய ஆற்றலில் இயங்கும் சொகுசு காரை உருவாக்குவது அவருடைய நீண்ட நாள் இலக்கு.
கிட்டத்திட்ட 11 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பின் பயனால் இன்று அவர் தனது இலக்கை எட்டியிருக்கிறார். தான் உருவாக்கிய காருடன் பிலால் இருக்கும் காணொளி இன்று உலக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
கவனத்தை ஈர்க்கும் வடிவமைப்பு
முன்பு எப்போதும் இல்லாத வகையில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் அபாயகரமான அளவில் அதிகரித்திருக்கிறது. நம்முடைய வாழ்க்கையும் இயற்கையின் வளமும் புவியின் இருப்பும் காலநிலை மாற்றத்தால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்த இக்கட்டான சூழலில், அவருடைய கண்டுபிடிப்பு சரியான நேரத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இன்னும் நுழையவில்லை. எனவே, சோலார் கார்களைப் பார்க்கும் சாத்தியம் நமக்கு குறைவே. சூரிய ஆற்றலால் இயங்கும் கார்களை செய்திகளின் வழியாக மட்டுமே நம்மில் பலர் அறிந்திருப்போம். இதனால்தான் என்னவோ, சோலார் பேனல்களால் அலங்கரிக்கப்பட்ட அவருடைய காரின் வடிவமைப்பு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவருகிறது.
சாமானியர்களுக்கான சொகுசு கார்
மெர்சிடிஸ், ஃபெராரி, பிஎம்டபிள்யூ போன்ற கார்கள் சாமானியர்களுக்குக் கனவிலும் எட்டாதவை. பணம் படைத்த சிலரால் மட்டுமே அந்த விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்க முடியும். இந்த நிலையை மாற்ற முடியாதா? சாமானியர்களும் வாங்கும் வகையில் சொகுசு கார்களை உருவாக்க முடியாதா? போன்ற கேள்விகள் பிலாலுக்குள் எழுந்துள்ளன.
இரண்டு குழந்தைகளின் தந்தையான அவர் மனத்துள் எழுந்த அந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடிப் பயணப்பட்டார். அந்த பயணத்தின் விளைவாக இன்று சூரிய ஆற்றலில் இயங்கும் சொகுசு கார் அவருக்குச் சாத்தியமாகி இருக்கிறது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் சோலார் காரும் கூட.
உருவாக்கிய விதம்
அவர் சோலார் காரை உருவாக்கிய விதம் அலாதியானது. அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் அபாரமானவை. 1950களில் வெளியான பல்வேறு கார் மாடல்களின் வடிவமைப்பைக் கூர்ந்து கவனித்து, தன்னுடைய அறிவை அவர் வளர்த்துள்ளார். அவற்றின் தயாரிப்பு முறையைத் தேடி, தேடிப் படித்திருக்கிறார். முக்கியமாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்தினார். அவர்களுடன் கலந்துரையாடினார்; விவாதித்தார். பின்னர் தான் வாசித்தும், விவாதித்தும், கற்றும் பெற்ற அறிவைக்கொண்டு சூரிய ஆற்றலின் மூலம் இயங்கும் முழுமையான தானியங்கி காரை உருவாக்கிவிட்டார். அதை உருவாக்குவதற்கு அவருக்கு ஆகிய செலவு 15 லட்சம் ரூபாய்.
அசாதாரணமான சூழல்
ஜம்மு, காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசத்தில் சூரிய ஒளியின் வீரியம் குறைவாகவே இருக்கும். வானிலையும் பொதுவாக அதிக வெயிலின்றி மந்தமாகவே இருக்கும். இந்த அசாதாரண சூழலை மீறியே பிலால் அகமது சோலார் காரை உருவாக்கி இருக்கிறார். அவருடைய காரில் பயன்படுத்தப்பட்ட சோலார் பேனல்கள் தனித்துவ திறனுடன் இருக்கின்றன. ஏனென்றால், குறைந்த சூரிய ஒளியிலும் அதிக செயல்திறனைப் பெறும் விதமாக, அந்த சோலார் பேனல்களை அவர் வடிவமைத்து இருந்தார்.
இந்தியாவின் எலான் மஸ்க்
"நான் திட்டத்தைத் தொடங்கியபோது யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. அதை நான் தயாரித்த முடித்த பிறகும் கூட யாரும் எனக்கு எந்த நிதி உதவி வழங்க முன்வரவில்லை. எனக்கு போதுமான ஆதரவும், தேவையான உதவியும் கிடைத்திருந்தால், ஒருவேளை நான் இந்தியாவின் எலான் மஸ்காக திகழ்ந்திருப்பேன்" என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பிலால் கூறினார். எந்த வித உதவியும், ஆதரவும் இல்லையென்றாலும் கூட, லட்சியமும், அதை அடையும் முனைப்பும் இருந்தால், நம்மால் எதையும் சாதிக்க முடியும். பிலால் அகமதுவின் சுய முயற்சியில் உருவாகி இருக்கும் சோலார் கார் அதற்கான சமீபத்திய உதாரணம் .