

இயற்கை தயாரிப்பு என்றவுடன், உணவுப் பொருட்கள் மட்டுமே நமக்கு ஞாபகம் வருகின்றன. ஆனால், இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட ஆடைகளும் இருக்கின்றன. பருத்தி ஆடைகளில் என்ன இயற்கை, செயற்கை?
சென்னை பசுமை அங்காடிகளில் முதன்மையானவற்றுள் ஒன்று அடையாறு கஸ்தூரி பாய் நகரில் உள்ள ரீஸ்டோர். இங்கே ‘ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட்' என்ற இயற்கை விவசாயிகளின் சந்தை சமீபத்தில் நடைபெற்றது. நுகர்வோர் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களும் ரசாயன எச்சங்கள் இல்லாததாக மாற வேண்டும் என்பதுதான் இந்தச் சந்தையின் நோக்கம். மற்றொரு புறம் விவசாயிகள், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். இங்கே துலா (TULA) என்ற பெயரில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான ஆடைகள் விற்பனை செய்யப்பட்டன.
ஆபத்தான ஆடை
இப்போது நாம் பயன்படுத்தும் ஆடை வகைகளில் பி.டி. காட்டன் எனப்படும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி வகை பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி முறையான, நீண்டகால ஆராய்ச்சி நடத்தப்படவில்லை.
அத்துடன் ஆடை தயாரிப்பும் இயந்திர மயமாக்கப்பட்டுவிட்டதால் பாரம்பரியக் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கைவினைத் திறன் மிகுந்த கைத்தறி ஆடைகளுக்குப் பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை. ஆனால், அதை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் நசிந்து போய்விடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் மேற்கண்ட முயற்சிகள் நடக்கின்றன.
அதெல்லாம் சரி, இந்த ஆடைகள் இயற்கை உற்பத்தி முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை மட்டும்தான் பயன்படுத்தி இருக்கின்றன என்று எப்படி நம்புவது? நீங்கள் விருப்பப்பட்டால் இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தொடர்புகளும் உங்களுக்குத் தரப்படும். நீங்களே நேரடியாக விசாரித்துத் தெளிவடையலாம்.
சிறப்பை உணர்வோம்
“அடுத்த தலைமுறையினராவது நமது பாரம்பரியத்தின் சிறப்பை உணர்ந்து, மனோபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். எப்படி ரசாயன எச்சம் கொண்ட சாப்பாட்டை வேண்டாம் என்று நினைக்கிறோமோ, அதுபோல மரபணு மாற்றப்படாத, பாரம்பரியப் பருத்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆடைகளில் பெரிய பிராண்டாக இருக்கும் நிறுவனங்கள், இயற்கைக்கு உகந்ததாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அதனால்தான் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு நாங்கள் பிராண்ட் பெயர் சூட்டவில்லை. தயாரிப்பாளர்கள்தான் பிராண்ட், நம்ம விவசாயிதான் நம்முடைய பிராண்ட். நல்ல விஷயங்கள் மெதுவாகத்தான் மக்களைச் சென்றடையும். ஆனால், அதுதான் நிலைக்கும்” என்கிறார் பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து.
இங்கு கிடைத்த ஆடைகள் பல வகைகளில் சிறப்பம்சம் கொண்டவை: இயற்கை முறையில் சாயம் ஏற்றப்படுவதும், கை நெசவும். இதே அம்சங்கள் பிராண்டட் ஆடையில் கிடைத்தால், விலை விண்ணை முட்டியிருக்கும். ஆனால், இவை கட்டுப்படியாகக்கூடிய விலையில் கிடைத்தன. இது போன்ற விஷயங்களுக்கு வரவேற்பு அளித்து, ஆதரிக்கும்போது நமது உடை நமக்கு ஆரோக்கியத்தைத் தருவது மட்டுமில்லாமல், இவ்வளவு காலம் போற்றி வந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியும் அறுபட்டுப் போகாமல் காக்க முடியும்!
தொடர்புக்கு: 044-24921093
restorechennai@gmail.com