

கையா என்றால் என்ன? இதை அறிந்துகொண்டால் தான் புவி ஓர் உயிரினமா இல்லையா என்பது நமக்குப் புரியும். புவியை ஓர் உயிரினமாகக் கருதி அதற்கு ‘கே’ (Ge) என்று முதலில் பெயரிட்டார் வில்லியம் ஹோல்டிங்.
‘கே’ எனும் சொல், ‘ஜியாக்ரபி, ஜியாலஜி’ முதலிய ஆங்கிலச் சொற்களின் வேர்ச்சொல். இது கிரேக்கப் புராணத்தில் வரும் புவி தேவதையின் பெயர்.
1958இல் ‘அமெரிக்கன் சயன்டிஸ்ட்’ இதழில் ஆர்தர் ரெட்ஃபீல்ட் என்பவர், ‘வளிமண்டலம், கடல்களின் வேதியியல் உருவாக்கமானது உயிரியல் ரீதியாகக் கட்டுப்படுத்தப்படுகிறது’ என ஒரு கட்டுரையை எழுதினார்.
அதுமுதல் படிப்படியாக உருவாகி வந்த கருத்தியலே பின்னர், ‘கையா’ என்று உருப்பெற்றது. கையாவை முழுமையாக்கி நூல்கள் பல எழுதி அதனைப் புகழ்பெறச் செய்தவர் ஜேம்ஸ் லவ்லாக்.
உணர்ந்த கதை
இயற்பியல் அறிவியலாளரான அவர் நாசாவில் செவ்வாய் கோளுக்கான பயண ஆய்வில் ஈடுபட்டவர். தன்னைப் பற்றிய அறிமுகத்தில், “உலகை வெப்பமாக வைத்திருக்கும் நோக்கில் காற்றில் குளோரோபுளூரோ கார்பனைச் செலுத்தி புவியை வெப்பமாக வைத்திருக்க முடியும் என்று முட்டாள்தனமாக ஆலோசனை சொன்னவன் நான்” என்கிறார் அவர். புவியை இயந்திரத்தனமாகப் பார்த்த பார்வை அது.
ஒருகட்டத்தில் புவியின் இயக்கம் குறித்து அவருக்குள் கேள்விகள் எழவே, அதைத் துண்டுதுண்டாகப் பார்த்த பார்வையிலிருந்து விலகி, முழுமையான பார்வைக்கு உட்படுத்தினார். இங்குள்ள உயிர்கள், காற்று, கடல், நிலம் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை என்றும், அவை கூட்டாக ஒருங்கிணைந்து புவியை ஒழுங்குபடுத்திக்கொள்வதையும் உணர்ந்தார். ‘கையா’வை அறிவித்தார்.
“உயிர் உள்ளிட்ட புவியின் ஒட்டுமொத்தப் புறப்பரப்பும் தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக்கொள்ளும் ஒரு பொருளாக (Entity) இருப்பதால் இதை நான் ‘கையா’ என்று பொருள் கொள்கிறேன். கையாவை நீங்கள் அறிய விரும்பினால், அது வேறொன்றுமல்ல, தன்னலத்தோடு செயல்படும் ஒரு மரபணுவைப் போல வாழ்கின்ற ஒரு கோளைப் பற்றிய கதைதான் இது” என்கிறார் அவர்.
ஆதரவும் எதிர்ப்பும்
மரபணு (ஜீன்) எப்பாடுபட்டாவது தன்னைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் இயல்புடையது. அதனால், அதை ‘சுயநலமுள்ள மரபணு’ என்பர். அது போலப் புவியும் தன்னைத் தக்கவைக்கப் போராடும் ஓர் சுயநல அமைப்பே.
அதற்கு எந்தவொரு உயிரினமும் இடையூறாக இருந்தாலும் அதை உதறித்தள்ள ஒருபோதும் அது தயங்காது என்று நாம் பொருள் கொள்ளலாம்.
கையா குறித்த முதல் நூல் வெளியானபோது அது கிரேக்கப் பெண் கடவுள் பற்றிய கற்பனைக் கதை என்று கடுமையான விமர்சனம் எழுந்தது. நோபல் பரிசு பெற்ற ழாக் மோனே இப்பார்வை உடையவர்களை ‘முட்டாள்கள்’ எனச் சாடினார்.
அறிவியலாளர்கள் பலருக்கு அதுவொரு மத நம்பிக்கை போல் தோன்றியதால் புறக்கணித்தனர். ஆனால், சூழலியல் ஆர்வலர்களிடம் கையாவுக்கு வலுவான வரவேற்பிருந்தது.
புவியைக் காதலித்தல்...
என்னதான் சூழலியல் இதை ஏற்றுக்கொண்டாலும், கையாவில் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இக்கருத்தைக் கொஞ்சம் திரித்தால் போதும், நவீன தெய்வம் ஒன்று உருவாகிவிடும். அது கையாவை எளிதில் ஆன்மிகமாக்கிச் சூழலியல் அடிப்படைவாதம் நோக்கி நகர்த்திவிடும் ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது. எனவே, கையாயை அறிவியல் நோக்கிலேயே கையாள வேண்டும்.
அறிவியல் என்றைக்குமே கறாரான வேதநூலாக இருந்ததில்லை. அதன் எந்த வரிகளும் மாற்றப்பட முடியாதவை அல்ல. மாற்றம் என்பது எல்லா இடங்களிலும் காற்றைப் போலவே நிரம்பியுள்ளது என்பதை அறிந்ததே அறிவியல். ஆகவே, அறிவியலாளர்கள் சிலர் கையா என்கிற பெயரை மறுத்தாலும், ‘புவி தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக்கொள்ளும் தன்மை (Self regulating earth) கொண்டது’ என்பதை உணர்ந்தனர். ஏனெனில், புவி தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக்கொள்வதற்கான அறிவியல் சான்றுகள் தொடர்ந்து நமக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. எனவே, கையாவுக்கு மாற்றாக ‘புவி ஒருங்கு அறிவியல்’ (Earth system science) அல்லது ‘புவி உடற்செயலியல்’ (Geophysiology) என்கிற பெயர்களை முன்மொழிந்துவருகின்றனர்.
எப்பெயரில் அழைத்தாலும் லவ்லாக்கின் ஒரு கூற்றை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். “நம் குடும்பத்திடம் அன்பு செலுத்துவதுபோல நாம் வாழும் புவி மீது அன்பு செலுத்த வேண்டும்; நம் குடும்பத்தை மதிப்பதுபோல மதித்தாக வேண்டும்” என்கிறார் அவர். உண்மைதானே?
நம்முடைய அன்பை உலகின் கருப்பை மீது செலுத்துவதிலிருந்து தொடங்குவோம்.
(அடுத்த வாரம்: உலகின் கருப்பை)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com