30 நாட்கள் குப்பைகளை ஆடையாக அணிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்

30 நாட்கள் குப்பைகளை ஆடையாக அணிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்
Updated on
3 min read

35 வயதான ராப் கிரீன்ஃபீல்ட் புவியின் மீதும் இயற்கையின் மீதும் அக்கறைகொண்ட ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். அவருடைய சுற்றுச்சூழல் முன்னெடுப்புகள் அலாதியானவை.

நமது செயல்கள் புவியின் எதிர்காலத்துக்கு எவ்வாறு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்பதைக் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த அவர் தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறார்.

100 சதுர அடியில் நிறைவான வாழ்க்கை

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராப். கையில் பணம் எதுவும் இல்லாமல் மூங்கில் பைக்கில் அமெரிக்காவை அவர் சுற்றி வந்துள்ளார். வெறும் 100 சதுர அடியில் அமைந்திருக்கும் அவர் வீட்டுக்கு மின்சாரம் சூரிய ஆற்றலை மட்டுமே நம்பியிருக்கிறது. அந்த வீட்டை மறுசுழற்சி பொருட்களை மட்டும் பயன்படுத்தி ராப் கட்டியுள்ளார்.

தனக்குத் தேவைப்படும் உணவை அங்கே தானே வளர்த்தெடுத்துக் கொள்கிறார். வெறும் 100 சதுர அடி இடத்தில், யாரையும் சாராமல், இயற்கைக்கு எவ்வித பாதிப்புமின்றி நிலையான வாழ்க்கை வாழ முடியும் என்பதை அவர் தன்னுடைய எளிய வாழ்க்கை மூலம் மக்களுக்கு உணர்த்திவருகிறார்.

காப்பது நம் கடமை

காலநிலை மாற்றத்தின் கொடூர பாதிப்புகளில் சிக்கி, அழிவின் பாதையில் பூமி சென்றுக்கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், சுற்றுச்சூழலைக் காப்பதற்கு நாம் அனைவரும் பெரும் பங்காற்ற வேண்டும் என க்ரீன்ஃபீல்ட் வலியுறுத்துகிறார். சுற்றுச்சூழலைக் காப்பதில் நமது பங்களிப்பு முன்பு எப்போதையும் விட தற்போது அதிகமாகத் தேவைப்படுகிறது என்றும் அவர் கருதுகிறார்.

மண், நீர், காற்று இல்லையென்றால் நம்மால் எப்படி இந்தப் பூமியில் எப்படி வாழ முடியும் என்று கேட்கும் அவர், அவற்றைக் காப்பது நமது அடிப்படை கடமை எனத் தொடர்ந்து கூறிவருகிறார். அதற்காகப் பல விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் அவர் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் உலக மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த '30 நாட்களுக்குக் குப்பையே ஆடை' எனும் பிரச்சாரம் அத்தகைய முயற்சிகளில் ஒன்றே.

30 நாட்களுக்குக் குப்பையே ஆடை

லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு மாதத்துக்கு ஒரு ஞெகிழி ஆடையை மட்டும் அணிந்தார். அந்த 30 நாட்களும், அந்த ஞெகிழி ஆடையைத் தான் தினசரி தூக்கி வீசும் குப்பைகளைக்கொண்டு நிரப்பினார். இதன் மூலம், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கழிவுகளை உற்பத்தி செய்கிறோம் என்பதை மக்களுக்குக் காட்டினார்.

'30 நாட்களுக்குக் குப்பையே ஆடை' எனும் பிரச்சாரத்தின்போது, க்ரீன்ஃபீல்ட் ஒரு நாளைக்குச் சராசரியாக 1 கிலோ கழிவை உற்பத்தி செய்தார். அதாவது அவருடைய ஞெகிழி ஆடையின் எடை ஒரு நாளைக்கு ஒரு கிலோ என்கிற அளவில் அதிகரித்து, பிரச்சாரத்தின் இறுதியில், 30ஆம் நாளின் முடிவில் 30 கிலோ என்கிற அளவிலிருந்தது.

குப்பை மலை

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் அறிக்கையின் படி, ஒரு அமெரிக்கர் தினமும் சராசரியாக 2 கிலோவுக்கும் அதிகமான குப்பைகளை வீசுகிறார். ஒரு மாதத்துக்கு 70 கிலோ குப்பை, ஓராண்டுக்கு 500 கிலோவுக்கும் அதிகமான குப்பையை அவர் வீசுகிறார்.

நம்முடைய சராசரி ஆயுள் 70 என்று வைத்துக்கொண்டால், ஒரு நபர் தன்னுடைய வாழ்நாளில் 35 டன் குப்பையை உற்பத்தி செய்கிறார்.தற்போது உலகின் மக்கள்தொகை 800 கோடியை நெருங்கிவருகிறது. அப்படியானால் ஒட்டுமொத்த மனித இனம் தம் வாழ்நாளில் தூக்கி வீசும் குப்பையின் அளவை எண்ணிப்பாருங்கள்.

இது குறித்துப் பேசும்போது “நாம் அனைவரும் நம் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறிய குப்பை மலையை விட்டுச் செல்கிறோம்" என்று கவலையுடன் கூறுகிறார்.

காலநிலை மாற்றம்

பூமியின் மேற்பரப்பில் குவிந்திருக்கும் குப்பைகள் மீத்தேன் வாயுவை வெளியிடுகின்றன. புவி வெப்பமயாதலை ஏற்படுத்தும் பசுங்குடில் வாயுக்களில் முக்கியமானது மீத்தேன் வாயு. குப்பைகள் வெளியிடும் மீத்தேன் வாயுவால் புவி வெப்பமயமாதல் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் காலநிலை மாற்றம், அதீத வறட்சி, வெள்ளம், வலுவான சூறாவளி, காட்டுத்தீ உள்ளிட்ட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சிந்திக்க வைக்கும் முயற்சி

30 நாட்கள் குப்பையை ஆடையாக அணிந்து திரிவது ஒரு அபத்த முயற்சியாக நமக்குத் தோன்றலாம். ஆனால், தினமும் நாம் என்னென்ன குப்பைகளை எந்த அளவில் வீசுகிறோம் என்பதைக் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அது ஏற்படுத்தியது. நாம் அனைவரும் கழிவுகளின் அளவைக் குறைக்க வேண்டும் என்கிற உந்துதலையும் அது மக்களிடம் ஏற்படுத்தியது.

முக்கியமாக, இந்த முயற்சி மக்களைச் சிந்திக்க வைத்தது; சுற்றுச்சூழலின் மீது ஆர்வம்கொள்ள வைத்தது; ஆக்கப்பூர்வமான திசையில் அவர்களைப் பயணிக்க வைத்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in