பறவைக் குறிப்புகள் கிளர்த்திய நினைவுகள்

பறவைக் குறிப்புகள் கிளர்த்திய நினைவுகள்
Updated on
2 min read

அதிகாலைப்பொழுது, லேசான குளிர் தென்றல் காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது. நடைப் பயிற்சியின்போது வழக்கமாகப் பார்க்கும் மரங்கள், ஆங்காங்கே குயில்களின் கூவல், தவிட்டுக்குருவிகளின் கூச்சல் ஆகியவற்றுக்கிடையில் என் நினைவுகள் முப்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல, அதை மனத்தில் அசைபோட்டுக்கொண்டே நடந்தேன்.

ஆம், 13.03.1988 அன்று காலை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் ஓர் அற்புதமான இயற்கைத் தேடல்! காலை 8.30 மணி, கோடை வெயிலிலும் பசுமை போர்த்தப்பட்டிருந்தது அந்தக் கல்விக்கூடம்.

ஒரு மரத்தடியில் அமர்ந்து கட்டிடத்தை நோக்கிக்கொண்டிருந்தபோது, ஒரு மைனா இணை என் தலைக்கு மேல் பறந்து அக் கட்டிடத்தின் மேல்தளத்தின் ஜன்னலிலிருந்த குளிர் சாதனப் பெட்டிக்கு அருகில் சென்றது.

கூடுகட்ட மரக் குச்சிகள், சிறு கிளைகள், காகிதம் போன்றவற்றை அந்த மைனாக்கள் அலகில் எடுத்து சென்றன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் இந்த அழகான பறவைகள், பொதுவாக மரப்பொந்துகளில் கூடமைக்கக் கூடியவை. அதற்கு மாறாக நான் பார்த்த இடத்தை நாடியது ஏன்? அவற்றின் வாழிடம் அழிக்கப்பட்டதாலா? அவற்றின் தகவமைப்பின் அடையாளமா?

ஒலியால் அறிதல்

மரத்தடியின் கீழ் தொடர்ந்து அமர்ந்தி ருந்தபோது பல விதமான பறவைகள் எழுப்பிய ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தன. வெண்மார்பு மீன் கொத்தியின் கொக்கரிப்பது போன்ற ஒலி கேட்டது. மீன்களைக் கொத்தியுண்ண வலுவான நீண்ட கூர்மையான அலகைக் கொண்ட அது, ஆற்றுப்படுகைகளின் கரைகளில் பொந்து குடைந்து முட்டை களை இட்டு அடைகாக்கும். இந்த அழகிய பறவை மீன்கள், சிறிய ஓணான், அரணை, நண்டு, இறால், பூச்சிகளை உண்கின்றன.

அடுத்ததாக நான் கேட்டது, ‘கிக்கீ... கிக்கீ...’ எனும் குரல். அது வல்லூறு (Shikra). மரங்கள் சூழ்ந்த மனித வாழிடங் களிலும் வசிக்கும் இரைகொல்லிப் பறவையினம் (Raptor) அது.

இதன் சிறிய, கூர்மையான, சற்று வளைந்த அலகு, மாமிச உணவைக் குத்திக் கிழிக்க உதவுகிறது. மரங்களுக்கிடையில் விற்றென்று, விரைவாகப் பறந்து மறைவாக அமர்ந்துகொள்ளும். பல்லிகள், ஓணான், அணில்கள், சிறு பறவைகள் போன்றவற்றை வல்லூறுகள் வேட்டையாடி உண்கின்றன.

மஞ்சள் மின்னல்

பறவைகள் எழுப்பும் ஒலியைக் கொண்டே, அவற்றை இனம் காணும் பயிற்சியைப் பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது. ஏனெனில், கண்ணுக்கு மறைவாக மரங்களின் உயரப்பகுதிகளில் அமர்ந்துள்ள இத்தகைய பறவைகளைப் பார்க்கவும், அவற்றைக் கூர்ந்து நோக்கி ஆய்வு மேற்கொள்ளவும் இப்பயிற்சி உதவும்.

பறவைகளை அடிக்கடி நாம் காண இயலாத நிலையில் மீன் கொத்தி, வல்லூறு, அக்காகுயில், மரங்கொத்தி, மாங்குயில், குயில், பருந்துகள் ஆகிய பறவைகளை அவை எழுப்பும் ஒலியைக் கொண்டே கண்டறியலாம்.

இதைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே, அந்த அடர்ந்த மரங்களுக்கிடையில் நடக்க முடிவுசெய்து எழுந்து நகர்ந்தபோது, எனது கண்ணெதிரே ஒரு மஞ்சள் மின்னல் கீற்று, தோன்றி மறைந்தது.

என்ன அது? ஒரு வேப்பமரத்துக்கும், புங்கை மரத்து உச்சிக்கிளைக்கும் இடையில் விரைந்து பறந்து சென்ற மாங்குயில் (Indian Golden Oriole) என்ற அழகிய மஞ்சள் வண்ணப் பறவைதான் அது.

இப்பறவையின் வண்ணம் மட்டுமல்ல, எழுப்பும் ஒலி, நடத்தை, யாவும் நம்மை ஆச்சரியப்படுத்தும். இந்தப் பறவையின் இனிமையான ஒலியை எனது கிராமத்திலும் கேட்டது உண்டு.

அனுபவம் பேசுகிறது

வளாகத்தில் நடந்துகொண்டே நான் கண்ட மற்றொரு பறவை கரும்பருந்து (Black kite). நான் பார்த்தபோது அந்தக் கரும்பருந்து கூடுகட்டத் தேவையான குச்சிகளை எடுத்துச் சென்றுகொண்டி ருந்தது. பொதுவாகக் கழிவுகள், குப்பையில் காணப்படும் இறந்த உயிரினங்களை இது உணவாகக் கொள்ளும்.

ஆயினும் வாய்ப்பு கிடைத்தால் வேட்டையாடும். மிக விரைவாக, வளைந்து பறந்து வந்து தாக்கித் தன் கால்களில் உள்ள கூர் நகங்களால் இரை விலங்கை எளிதில் பிடித்துவிடும். கூட்டம் கூட்டமாக மாலையில் அவை அடைய வேண்டிய மரங்களுக்கு மேலே வட்டமிட்டுப் பறக்கும்.

கல்லூரி வளாகத்தில் இரண்டு மணி நேரம் செலவிட்ட பிறகு, பறவைகளை ரசித்த மன மகிழ்வுடன் வெளியேறினேன். இவ்வளவும் இன்றைக்கும் நினைவில் இருப்பதற்கான காரணம், இதையெல்லாம் எழுதி வைத்திருந்த எனது பழைய குறிப்பேட்டை அவ்வப்போது எடுத்துப் படிப்பதாலேயே. பறவைகளை நோக்குவது நல்ல செயல்பாடு. அது போலவே பார்த்தவற்றை விவரமாக எழுதிவைப்பதும் அவசியம்.

கட்டுரையாளர், கவின்மிகு தஞ்சை இயக்க செயலாளர்

தொடர்புக்கு: syamram22@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in