

குடகு மாவட்டம், குஷால் நகரில் பிரசித்தி பெற்ற துபாரே வளர்ப்பு யானை முகாம் உள்ளது. மக்கள் வாழும் இடங்களில் அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டுயானைகள் வனத்துறையினரால் பிடித்துக் கொண்டுவரப்பட்டு அங்கே பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மைசூரு தசரா ஜம்பு சவாரியில் கலந்து கொள்ளும் யானைகள்கூட இந்த முகாமில்தான் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கே கும்கி யானைகளும் உள்ளன.
குஷா யானை
2016-ம் ஆண்டு செட்டள்ளி பகுதியில் காட்டு யானை ஒன்று விளைநிலங்களை நாசப்படுத்தித் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இதையடுத்துப் பொதுமக்களின் புகாரின் பேரில் வனத்துறை அதிகாரிகள் 2016-ம் ஆண்டு அந்த யானையைப் பிடித்து துபாரே யானைகள் முகாமில் அடைத்தனர். அந்த யானைக்கு குஷா என்று பெயர் வைக்கப்பட்டது.
துபாரே முகாமிலும் குஷா யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது. சில நேரத்தில் மதம் பிடித்தது போலவும் செயல்பட்டது. இந்தச் சூழலில், அந்த யானை தனக்கான துணையைத் தேடி, 2018-ல் முகாமிலிருந்து வெளியேறி, காட்டுக்குள் சென்றது. அந்த யானையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். ஓராண்டு நீடித்த தொடர் தேடலுக்குப் பின்னர் அந்த யானையை அவர்கள் கண்டு பிடித்து முகாமுக்கு அழைத்து வந்தனர்.
குஷாவுக்குச் சுதந்திரம்
முகாமில் அதன் அட்டகாசங்கள் மீண்டும் தொடர்ந்தன. இதைத் தொடர்ந்து, குஷாவைக் காட்டில் சுதந்திரமாக விட வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். 'பீப்பிள்ஸ் பார் அனிமல்ஸ்' எனும் அமைப்பு இதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டது. பல்வேறு தரப்பினரின் அழுத்தத்துக்குப் பிறகு அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டது. 2021 ஜூன் மாதத்தில் குஷா யானையைக் காட்டில் விடச்சொல்லி அரசாங்கம் உத்தரவிட்டது. அரசாங்கத்தின் உத்தரவுப்படி 2021 ஜூன் முதல் வாரம், லாரியில் குஷாவை ஏற்றிச் சென்று, பந்திப்பூர் காட்டுப் பகுதிக்குட்பட்ட, மூலேஹொளெவில் இறக்கிவிட்டனர்.
குஷாவின் தேடல்
மூலேஹொளெவில் குஷா யானை மற்ற காட்டுயானைகளுடன் சுற்றித் திரிந்தது. ஆனால், அந்தப் பகுதியில் ஒரு வாரம் மட்டுமே அது உலாவியது. அதன் பின்னர் கேரளத்தை நோக்கி குஷா பயணிக்கத் தொடங்கியது. சில நாட்கள் கேரளக் காட்டுப்பகுதியில் திரிந்த குஷா, அதன்பின் நாகரஹொளே காட்டுப்பகுதிக்குப் பயணப்பட்டது.
உண்மையில் அந்த யானை தான் வளர்ந்த துபாரே முகாமை தேடியே அங்கும் இங்கும் அலைந்திருக்கிறது. இறுதியில் தன் முயற்சியில் வெற்றி பெற்ற குஷா, சில நாட்களுக்கு முன்னர் துபாரே முகாமை வந்தடைந்தது. இந்த முறை குஷா யானை முகாமுக்குத் தனியாக வரவில்லை. அது தன்னுடன் மூன்று பெண் யானைகளையும் ஓர் ஆண் யானையையும் அழைத்து வந்தது.
நெகிழவைக்கும் பயணம்
குஷா யானையின் கழுத்தில் கட்டப்பட்ட, ரேடியோ காலர் மூலம், யானை நடந்து வந்த பாதை முழுவதும் பதிவாகியுள்ளது. அதாவது வனப்பகுதியைக் குறுக்கு, மறுக்காகச் சுற்றிப் பயணித்து, பந்திப்பூர் காட்டுப்பகுதியிலிருந்து கேரளம் வழியாக துபாரே முகாமிற்கு வந்தடைந்து இருப்பது அந்தப் பதிவின் மூலம் தெரியவந்து இருக்கிறது. குஷாவும், அதனுடன் வந்துள்ள மற்ற யானைகளும், துபாரேவில் முகாமிட்டுள்ளன. இவற்றை முகாமில் அனுமதித்து, பயிற்சியளிப்பது குறித்து அரசாங்கத்துக்கு அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
எது எப்படியோ, ஓராண்டுக்கு முன் பந்திப்பூர் காட்டுப்பகுதியில் விடப்பட்ட குஷா யானை, 4 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து துபாரே முகாமை தேடிவந்து இருப்பது அங்கிருக்கும் ஊழியர்களை மகிழ்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.