

மனித கழிவுகளால் நிறைந்திருக்கும் செப்டிக் டேங்க் ஆரோக்கியமற்ற இடம் மட்டுமல்ல; ஆபத்தான இடமும் கூட. இங்கே நிரம்பியிருக்கும் மனித கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. அதை உறுதி செய்வதற்குத் தடை உத்தரவுகளும் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், ஆபத்தான இந்தப் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தும் போக்கு இன்றும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இதன் காரணமாக,இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இறப்புகள் பதிவாகின்றன.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வளிக்கும் விதமாக ‘ஹோமோசெப்’ எனும் ரோபோவை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது. இந்த ரோபோவைச் சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையிலான குழுவினர், சோலினாஸ் இன்டகிரிட்டி லிமிடெட் என்னும் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
செயல்படும் விதம்
பொதுவாகக் கழிவு நீர்த் தொட்டிகளில் மாதக்கணக்கில் கழிவு நீர் சேரும் போது அவை திடத்தன்மையுடன் மாறத் தொடங்குகிறது. அதை உடைத்து எடுக்கும் போது பெரும்பாலும் விஷவாயு வெளியேறி மனித இறப்புகள் ஏற்படும் நிலையில், இந்த இயந்திரத்தில் மூலம் முதலில் கழிவுநீர் தொட்டியில் உள்ள திடப்பொருட்கள் திரவமாக மாற்றம் செய்யப்படுகின்றன. திரவக் கழிவாக மாற்றம் அடைந்தவுடன் கழிவு நீர் உறிஞ்சப்பட்டு தொட்டி சுத்தம் செய்யப்படுகிறது.
பயிற்சி
கழிவுநீர் தொட்டியில் நீள அகலத்திற்கு ஏற்றவாறு இயந்திரத்தைப் பயன்படுத்தும் வசதியை ஹோமோசெப் இயந்திரம் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தக் கருவியை எளிதில் பல இடங்களுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் விதமாக அதை அவர்கள் டிராக்டரில் பொருத்தத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த இயந்திரத்தை இயக்குவதற்கான பயிற்சியும் தொடர்ச்சியாகத் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்தத் தானியங்கி கழிவு இயந்திரங்கள் ஏற்கெனவே தாம்பரம் மாநகராட்சியில் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு இருக்கின்றன. அடுத்ததாக இவை தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இடங்களில் பயன்படுத்தப்பட உள்ளன. விரைவில் குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இந்தத் தானியங்கி கழிவு இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.
உயிரிழப்பைத் தடுக்க உதவும்
மனித கழிவுகளை அகற்றும்போது தம் கணவர்களைப் பறிகொடுத்த நாகம்மா, ரூத் மேரி ஆகிய இரு தூய்மைப் பணியாளர்களும் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு எதிராக நீண்ட நாள்களாகக் குரல் கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்தக் கருவியை சஃபை கரம்சாரி அந்தோலன் என்னும் தன்னார்வல அமைப்பு வழங்கியுள்ளது.
மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதற்குத் தடை இருந்தாலும், வேறு வழியின்றி பிழைப்புக்காகப் பலர் இந்த வேலையை இன்னமும் செய்து வருகின்றனர். இதைத் தடுப்பதற்கு சென்னை ஐஐடி உருவாக்கியிருக்கும் இந்தக் கருவி உதவும்.