

ஒன்றரை... ஒன்றரை... ஒன்றரை… கடந்த சில தசாப்தங்களாக இப்புவிக்கோளை ஆட்டிப் படைப்பது இதுதான். அந்த ஒன்றரை எதைக் குறிக்கிறது?
பூமியின் வெப்பநிலை, தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய சராசரி வெப்பநிலையைவிடக் கூடிக்கொண்டே செல்வதால் ஏற்படும் காலநிலை மாற்றமும் அதன் விளைவுகளும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. இப்படி அதிகரித்துக்கொண்டே செல்லும் சராசரி வெப்பநிலை உயர்வைக் குறைந்தபட்சம் 1.5 பாகை செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அறிவியலாளர்களின் எச்சரிக்கை. இதுதான் அந்த ஒன்றரை. வெறும் 1.5 பாகை செல்சியஸ் தானே அதனால் என்ன நடந்துவிடப் போகிறது எனத் தோன்றலாம்.
பனிப்பாறைகள் உருகுதல், புயல்கள், இடி மின்னல், வெப்ப அலை, எரிமலை வெடிப்பு, காட்டுத்தீ, வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் உலகளவிலும், இந்தியாவிலும் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில வருடங்களில் இவற்றின் எண்ணிக்கையும் பாதிப்பும் தீவிரமடைந்துள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக் கின்றன. ஒருவேளை 1.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை உயர்வை எட்டிவிட்டால்..?
சமீபத்தில் வெளியான உலக வானிலை அமைப்பின் அறிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் 1.5 பாகை செல்சியஸ் வரம்பை மீறுவதற்கு 50 % வாய்ப்புள்ளதாகக் கூறுகிறது. அப்படியானால் நாம் என்ன செய்யப் போகிறோம்? அரசாங்கம் என்ன செய்யப் போகிறது? மிதமிஞ்சிய உற்பத்தியில் ஈடுபட்டுச் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை நிகழ்த்திவரும் பெருநிறுவனங்கள் என்ன செய்யப் போகின்றன? உலக நாடுகளிடம் உள்ள திட்டங்கள்தாம் என்ன?
இப்புவி மனிதர்களுக்கானது மட்டுமல்ல. பல்வேறு நுண்ணுயிர்கள் முதல் பறவைகள், விலங்குகள், கடல், காடு என அனைத்தையும் உள்ளடக்கியது. காலநிலை மாற்றம் இயற்கையையும் அதன் உயிரினத் தொகுதிகளையும் எப்படியெல்லாம் நெருக்கடிக்குத் தள்ளுகிறது? சிலவற்றைக் காண்போம்.
l பெருங்கடல் நினைவிழப்பு
காலநிலை மாற்றத்தினால் அதிகப் பாதிப்பிற்குள்ளாவதில் கடல் முக்கியமானது. ஏற்கெனவே வெப்பநிலை அதிகரிப்பாலும் உருகும் பனிப்பாறைகளாலும் கடல்மட்டம் உயர்வது, கடல் நீரோட்டங்களில் மாற்றம், கடல்வாழ் உயிரினங்களின் அழிவு இப்படி பல்வேறு இடர்களை எதிர்கொண்டுவந்த கடலம்மாவிற்கு அம்னீசியா என்ற புதிய நோயும் காலநிலை மாற்றத்தால் சேர்ந்துள்ளது. ஆம், கடல் தன் நினைவை இழக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தன் நிலைத்தன்மையை இழந்து பெருங்கடல் சார்ந்த கணிப்புகள், கடல் மேலாண்மை, வானிலை முன்னறிவிப்புகள் போன்றவை தவறாகலாம் அல்லது கடினமாகலாம் என அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.
l தாவரங்களின் பருவகால சுழற்சியில் மாற்றம்
அனைத்து வகையான தாவர இனங்களும் காலநிலையைச் சார்ந்து ஒரு பிரத்தியேக வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்டிருக்கும். உதாரணமாக, வசந்தத்தில் பூப்பது, கோடையில் காய்ப்பது/கனிவது, இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்ப்பது என.
தொடர்ந்து உயர்ந்துகொண்டே வரும் வெப்பநிலையானது தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சியில் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. இவ்வாறான பருவம் மாறிய இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியால் பூக்களும் கனிகளும் தரம் குறைந்துவிடுகின்றன. அவற்றைச் சார்ந்து வாழும் பூச்சிகள் முதல் பறவைகள் வரை கடும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.
l உயிரினத் தொடர்புமொழி பாதிப்பு
உலகத்து உயிர்களில் மனிதர்களுக்கு மட்டுமே மொழி வசப்பட்டுள்ளது. அப்படி யானால் மற்ற உயிரினங்கள் எப்படி தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன? தரைவாழ் உயிரினங்கள் முதல் கடல்வாழ் உயிரினங்கள் வரை தகவல்களைப் பரிமாறிக்கொள்ள சில ரசாயன சமிக்ஞைகளை (chemical signals) பயன்படுத்துகின்றன. உணவின் இருப்பிடத்தை அறிய, அதைச் சக உயிரினங்களுக்குத் தெரியப்படுத்த, கூட்டாக வாழ, புறச்சூழலை உணர்ந்து கொள்ள, எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள, இனப்பெருக்கத்தில் ஈடுபட என அனைத்திற்கும் இந்த ரசாயன சமிக்ஞையே அடிப்படை. காலநிலை மாற்றத்தால் (நீர் நிலைகளில் அதிகரித்த அமில-காரச் சமநிலை, மாசுபாடு) இந்த உயிரினத் தொடர்பு மொழியானது தற்போது அழிவில் உள்ளதாகவும், இதனால் உணவுச் சங்கிலியும் சுற்றுச்சூழல் மண்டலமும் பாதிப்படைய வாய்ப்புள்ளதாகவும் அறிவியலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
l பூச்சிகளின் எண்ணிக்கை
பிரபல உயிரியலாளரும் எழுத்தாளருமான இ.ஓ.வில்சன், “உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் அழிந்துவிட்டால்கூட சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்குள் பூமி தனது பழைய நிலையை மீண்டும் அடைந்துவிடும். ஆனால், பூச்சிகள் இல்லாமல் போனால் பூமி என்றைக்கும் மீள முடியாது” என்று கூறினார்.
நோய் பரப்பும் பூச்சிகளைக் கட்டுக்குள் வைப்பது, இறந்த சடலங்களைச் சிதைத்து ஊட்டச்சத்தை மண்ணில் சேர்த்துச் சூழல் நலத்தைப் பேணுவது, மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுவது - இப்படி பல்வேறு பணிகளுக்குப் பூச்சிகள் இன்றியமையாததாகின்றன. ஆனாலும் காலநிலை மாற்றக் கண்ணிகளிடமிருந்து பூச்சிகளால் அவ்வளவு எளிதாகத் தப்ப முடியவில்லை. உலகளவில் பூச்சிகளின் எண்ணிக்கையானது கடந்த சில பத்து ஆண்டுகளாகவே அபாயகரமான அளவில் குறைந்துவருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
l பறவைகள்
பறவைகள் ஒரு சிறந்த சூழலியல் சுட்டிக் காட்டிகள். சுற்றுச்சூழல் மாற்றத்தினால் முதலில் பாதிப்படைவதும் அவையே. காலநிலை மாற்றத்தினால் உருவத்தில் சிறியதாவது, இடப்பெயர்வில் மாற்றம், முட்டையிடும் காலம் தள்ளிப்போவது, வாழிட அழிவு - இப்படி பல்வேறு பிரச்சினைகளைப் புல்லினங்கள் சந்தித்து வருகின்றன. பாடும் பறவை இனங்களில் (song bird) ஆண் பறவைகள் தங்களது பாடலின் மூலம்தான் பெண் பறவைகளைக் கவர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.
தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநிலையானது ஆண் பறவைகளின் பாடும் திறனைப் பாதிப்படையச் செய்துள்ளது. இதனால் தன் இன ஆண் பறவையின் குரலைக் கண்டறிவதில் பெண் பறவைகளுக்குக் குழப்பமும் சரியாகத் தேர்ந்தெடுக்க முடியாமலும் போவதால் இனப்பெருக்கத்திறனில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இவையெல்லாம் காலநிலை மாற்றம் விளைவித்துள்ள பாதிப்புகளுக்கு ஒரு சோறு பதம் மட்டுமே.
கட்டுரையாளர் தொடர்புக்கு: suriya.sundararajan1@gmail.com