

விசித்திரமான பல புதிர்களால் நிறைந்ததே இயற்கை. அந்தப் புதிர்களுக்கு விடை தேடும் விளையாட்டில் அறிவியலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஒரு புதிருக்கான விடை மற்றொரு புதிருக்கான தொடக்கமாக இருப்பதால் அந்த விளையாட்டு முடிவற்றதாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது.இதன் காரணமாக, எண்ணற்ற ரகசியங்கள் இயற்கையின் ஆழத்தில் இன்றும் பொதிந்துள்ளன.
அத்தகைய ரகசியங்களில் ஒன்றைச் சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அன்டார்டிகாவின் உறைபனி பாளங்களுக்குக் கீழே இதுவரை அறியாத வாழ்க்கைச் சூழல் ஒன்று இருப்பதாக அவர்கள் தெரிவித்திருப்பது உலகை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்திருக்கிறது.
அன்டார்டிகாவில் ஆய்வு
`காலநிலை மாற்றத்தால் உருகும் பனியில் நதித்துவாரங்களுக்கு இருக்கும் பங்கு' என்கிற தலைப்பில் நியூசிலாந்தைச் சேர்ந்த ஆய்வு குழுவினர் அன்டார்டிகாவில் ஆய்வு செய்துவருகின்றனர். அந்த ஆய்வில் வெலிங்டன், ஆக்லாந்து, ஒடாகோ பல்கலைக்கழகங்கள், தேசிய ஆய்வு நிறுவனங்கள் பங்கு கொண்டிருக்கின்றன.
காலநிலை மாற்றம் குறித்து அறிய, அன்டார்டிகாவில் உறைபனிக்குக் கீழே 500 மீட்டர் துளையிட்டு ஆய்வு செய்தபோது அங்கு உயிரினங்கள் வாழ்விடம் அமைத்து வாழ்வதைக் கண்டறிந்தனர். முதலில் அதைப் பார்த்த போது, அது ஏதோ கேமாரவின் கோளாறாக இருக்கும் என்றே அந்த ஆய்வாளர்கள் நினைத்திருக்கிறார்கள். அதன் பின்னர் கூர்ந்து கவனித்த பிறகே, லாப்ஸ்ட்டர்ஸ், நண்டுகள், பூச்சிகள், கணுக்காலிகள் போன்ற உயிரினங்கள் 500 மீட்டர் உறைபனிக்குக் கீழே நீரில் வாழ்ந்து வருவதை அவர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.
உறைபனிக்குக் கீழே நன்னீர் ஏரிகள் இருப்பது முன்பே கண்டறிப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்த நேரடி ஆய்வுகள் மிகவும் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த நிலையில், முதன்முறையாகப் பனிப்பாறைகளுக்குக் கீழே இந்த நதியைப் பார்த்தது ஏதோ ஒரு புதிய ரகசிய உலகத்தில் நுழைந்தது போல இருந்தது என அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய உலகின் அறிமுகம்
முதன்முறையாக நதிதுவாரம் இருக்கும் இடத்தை சாட்டிலைட் வரைபடத்தில் கண்டறிந்த அந்த ஆய்வாளர்கள், அங்கு வாழும் உயிரிகள், அந்த நீரின் தன்மை குறித்து மேலும் ஆய்வு செய்வதற்குத் தேவையான கருவிகளைப் பொருத்தி இருக்கின்றனர். தாவரங்களும் விலங்குகளும் பனியிலும் இருளிலும் வாழ்வது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர். அந்த ஆய்வுகள் இதுவரை நாம் அறியாத புதிய உலகை நமக்கு அறிமுகம் செய்யும் எனக் கருதப்படுகிறது.