உலகப் பெருங்கடல்கள் நாள் - கடல்களைக் காப்போம், பேரழிவைத் தடுப்போம்

உலகப் பெருங்கடல்கள் நாள் - கடல்களைக் காப்போம், பேரழிவைத் தடுப்போம்
Updated on
2 min read

உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) உலகம் முழுவதும் பெரும் விமரிசையுடன் நேற்று கொண்டாடப்பட்டது. கடல் பாதுகாப்பு, அதன் சூழலின் முக்கியத்துவம் போன்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உலகின் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் முன்னெடுப்புகளில் ஈடுபடுவதே இந்த நாளின் நோக்கம். ஆண்டு தோறும் ஜூன் 8-ஆம் தேதி 'உலகப் பெருங்கடல்கள் நாள்' உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

விளைநிலத்திற்கு நதிநீரின் முக்கியத்துவம் எப்படியோ அதேபோல் கடல் வாழ் உயிரினங்களுக்கும் கடல் நீரோட்டம் மிகவும் முக்கியமானது. 1980இல் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த என்ரிக் ஜொர்மிலோ என்பவர் புவி வெப்பமாதலால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன, அதன் காரணமாகக் கடல் நீரோட்டங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவருகிறது என உலகுக்கு எடுத்துரைத்தார். இதை முதல் முதலாக என்ரிக் கூறியபோது, அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை; நம்பவில்லை என்று கூடச் சொல்லலாம்.

விழிப்புணர்வு

1990களில் அமெரிக்கக் கண்டம் முழுவதும் வெப்ப மாற்றத்தால் கடல்பாசி, கிரில்ஸ், இறால்கள், பவளப்பாறைகள் உள்ளிட்ட கடல் வளங்கள் பாதிக்கப்பட்டன. இவை அனைத்தும் கடலில் சேரும் கழிவுகளைச் சாப்பிட்டு கடலை தூய்மைப்படுத்தும் பணியைச் செய்யும் உயிரினங்கள். இந்த உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பால் அட்லாண்டிக், பசிபிக் கடல்களின் கரையோரப் பகுதிகளில் அதிக அசுத்தங்கள் சேர்ந்துவிட்டன. இதன் விளைவாக ஆசிய, அமெரிக்கக் கடற்கரையோரப் பகுதி நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள் பெரிதும் பரவத் தொடங்கின. இதன் பின்னர் விழித்துக்கொண்ட உலகம், என்ரிக் ஜொர்மிலோ தெரிவித்த கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது. கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் உலக நாடுகளிடையே ஏற்பட்டது

1992, ஜூன் 8 அன்று பிரேசிலின், ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பூமி உச்சி மாநாட்டில் உலகப் பெருங்கடல்கள் நாள் கொண்டாடப்படுவதற்கான கோரிக்கையை கனடா முன்வைத்தது. அதன் பின்னர் அது அதிகாரப்பூர்வமற்ற வகையில் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. 2008இல் இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது. அதன் பின்னர் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடலின் முக்கியத்துவம்

கடல் , நம் பூமியின் குளிர்சாதனப் பெட்டி. கடல் இல்லையென்றால், நமக்கு அழகிய நீலவண்ணத்தில் வானம் தெரியாது; புவியில் மூன்றில் ஒரு பங்கே இருக்கும் நிலத்துக்கு மழைநீரும் கிடைக்காது. பருவநிலையைக் கட்டுப்படுத்துவதிலும் கடலுக்கு இருக்கும் பங்கு மகத்தானது. கடலின் வளங்கள் நம் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிக்கின்றன. இந்தப் பூமியில் நமது இருப்புக்குக் கடல்களின் உயிர்ப்பும் செழிப்பும் இன்றியமையாதவை. கண்டங்களைக் கடல்களே ஒருங்கிணைக்கின்றன. கடல் மார்க்கமாக நடைபெறும் வணிகமும், போக்குவரத்துமே நம் உலகின் பொருளாதாரத்துக்கு நிலைத்தன்மையை அளிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல கோடி மக்களின் உணவுத் தேவையை அவை பூர்த்திசெய்கின்றன; மருந்துகளின் மூலப்பொருட்களை வழங்குகின்றன.

காப்பது நம் கடமை

கடந்த 30 ஆண்டுகளாகக் கடலின் வளங்கள் பெரும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, கடலில் குவியும் ஞெகிழி கழிவுகள் போன்றவை பெருங்கடல்களின் இயல்பை மாற்றியமைத்துவருகின்றன. கடல் உயிர்களின் வாழ்வும் அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டு உள்ளன. நம் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கடல்களைக் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. ஆறுகளைத் தூய்மைப்படுத்துவது போல் நாம் கடல்களையும் தூய்மைப்படுத்தவேண்டும். இல்லையென்றால், நீலநிற கடலுக்கு மாற்றாகக் கருமையான அசுத்தங்கள் படர்ந்த அமில நீரையும், எப்போதும் இருள் சூழ்ந்த வானத்தையும், ஆக்சிஜன் இல்லாத பூமியையும் எதிர்காலத் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்வோம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in