

நகரங்கள் மனிதக்குலத்தின் மிகப்பெரிய சாதனைகளையும், சவால்களையும் பிரதிபலிக்கின்றன. 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் 68% பேர் நகர்ப்புறங்களில் வாழ்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மோசமாக வடிவமைக்கப்பட்ட நகரங்களால் இதை எப்படிச் சமாளிக்க முடியும் என்கிற கேள்விக்குத் தெளிவான பதில் இல்லை என்பதே இன்றைய யதார்த்தம்.
இந்தச் சூழலில்தான், கடலோர நகரங்கள் கடல் மட்டம் உயர்வின் காரணமாக ஏற்படும் வெள்ள அபாயத்தை எதிர்கொள்கின்றன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளப்பெருக்கை விட இது மிக வேகமானது; அபாயகரமானது. இது குறித்து 99 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்கிற இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன் படி, உலகின் சில முக்கிய நகரங்கள், அவற்றைச் சுற்றியுள்ள கடல் மட்டங்கள் உயர்ந்து வருவதை விட வேகமாக மூழ்கி வருகின்றன.
நில அடுக்கு கீழ்நோக்கி நகருதல்
நில அடுக்கு கீழ்நோக்கி நகருதல் எனப்படும் ஒரு செயல்பாட்டில், பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே உள்ள பொருட்கள் இடம்பெயர்கின்றன. இதன் காரணமாக, நில அடுக்கு அழுத்தத்துக்கு உள்ளாகி, சரிகிறது. இத்தகைய சரிவின் காரணமாக, மூழ்கும் அபாயத்தில் உள்ள நகரங்கள் ஆண்டுக்குப் பல மில்லிமீட்டர் அளவுக்கு மூழ்கிவருகின்றன. இந்தச் சரிவு பெரும்பாலும் நிலத்தடி நீர் உறிஞ்சுதல் போன்ற மனித நடவடிக்கைகளால் ஏற்படுகின்றன. தண்ணீர் வெளியேறும்போது, நில அடுக்கு அழுத்தத்துக்கு உள்ளாகிக் கீழிறங்குகிறது. இதன் காரணமாக, நிலத்தின் மேல் கட்டப்பட்ட கட்டமைப்புகள் தாழ்ந்து, கடல் மட்டத்தை நெருங்குகின்றன.
உலகளாவிய கடல் மட்ட உயர்வு குறித்த சமீபத்திய மதிப்பீடுகளின் அடிப்படையில், குறைந்தது 33 நகரங்கள் ஆண்டுக்கு ஒரு சென்டிமீட்டருக்கு மேல் மூழ்கிவருகின்றன, இது கடல் மட்ட உயர்வு விகிதத்தை விட ஐந்து மடங்கு அதிகம். தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் இத்தகைய நகரங்கள், மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஜகார்த்தா நகரம் மூழ்கி வருவதால், இந்தோனேசியா தனது தலைநகரை 2,000 கிமீ தொலைவில் உள்ள போர்னியோ தீவில் உள்ள நகரத்திற்கு மாற்றிவருகிறது.
வெள்ள மாதிரிகள்
நில அடுக்கு கீழ்நோக்கி நகரும் போக்கு, கடலோர வெள்ள அதிகரிப்பைச் சமாளிக்க உதவும் நகரங்களின் திட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் போக்கு தொடர்ந்தால், அபாயகரமான வெள்ளத்தின் தீவிரத்தையும் வேகத்தையும் கணிப்பதற்கு தற்போதைய வெள்ள மாதிரிகள் போதுமானதாக இருக்காது. ஏனென்றால், அவை கடல் மட்ட உயர்வின் அடிப்படையில் மட்டுமே வெள்ள அபாயத்தைக் கணிக்கின்றன.
தற்போது நடைமுறையில் இருக்கும் வெள்ள மாதிரிகள் கணிப்பதை விட, கடலோர நகரங்கள் விரைவில் மூழ்கும் ஆபத்தில் உள்ளன. எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு அபாயங்களிலிருந்து நகரங்களைக் காக்கும் திட்டங்களில் வெள்ளத் தடுப்புச் சுவர்கள், தண்ணீரை வெளியேற்றுவதற்கான கூடுதல் நடவடிக்கைகள் போன்றவை சேர்க்கப்பட வேண்டும். முக்கியமாக, நில அடுக்கு கீழ் நோக்கி நகர்வதற்குக் காரணமாக இருக்கும் செயல்பாடுகளை முறையாகக் கண்காணிக்க வேண்டும்; கட்டுப்படுத்தவும் வேண்டும்.
கடலோர நகரங்கள் மூழ்குவது ஏன்?
உலகின் சில பகுதிகளில் நில அடுக்கு கீழ்நோக்கி நகரும் போக்கு இயற்கையாகவே நிகழ்கிறது. ஆனால், பல நகரங்களில், நிலத்தடி நீர் உறிஞ்சுதல், எண்ணெய், எரிவாயு எடுத்தல், விரைவான கட்டுமானம் போன்ற மனித நடவடிக்கைகள் காரணமாக அது துரிதமாக ஏற்படுகிறது. உதாரணத்துக்கு, பண்டைய ஏரி படுக்கைகளின் களிமண்ணில் கட்டப்பட்ட மெக்சிகோ நகரம், குடிநீருக்காகப் பல தசாப்தங்களாக நிலத்தடி நீர்நிலைகளை உறிஞ்சியதால், ஆண்டுக்கு 50 சென்டிமீட்டர் என்ற விகிதத்தில் மூழ்கி வருகிறது.
இந்த ஆய்வின் படி, கடலோர நகரங்கள் மூழ்குவதற்கு, நிலத்தடி நீரை உறிஞ்சுவதே முதன்மையான காரணம். இந்த மூழ்கும் போக்கு ஆசிய நகரங்களில் அதிகமாக இருக்கிறது. அங்கே குடியிருப்பு கட்டிடங்களும், தொழில்துறை செயல்பாடுகளும் அதிகமாக உள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகள் வேகமாக மூழ்கிவருகின்றன. காரணம், அந்தப் பகுதிகளில் அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
கடலோர நகரங்கள் மூழ்குவதைத் தடுக்க முடியாது என்றாலும், நிலத்தடி நீர் பயன்பாட்டைக் குறைப்பது குறைந்த பட்சம் அதை தாமதமாக்கும். உதாரணத்துக்கு, 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 28 சென்டிமீட்டர் என்கிற அளவில் ஜகார்த்தா நகரம் மூழ்கிவந்தது. நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதில் இந்தோனேசிய அரசாங்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த ஏழு ஆண்டுகளில் ஆண்டுக்கு மூன்று சென்டிமீட்டர் என்கிற அளவுக்குக் குறைந்துள்ளது. வடக்கு ஜகார்த்தாவில் நிலத்தடி நீர் எடுப்பதற்கு இந்த ஆண்டு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
மூழ்கும் உணர்வு
ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பை மழைக்காலத்தில் தண்ணீரில் மூழ்கித் தத்தளிக்கிறது. இந்த நிலையில், ஆண்டுக்கு 0.8 சென்டிமீட்டர் வரை மும்பை மூழ்கி வருவதால், அதிகரிக்கும் கடலோர வெள்ள அபாயத்தை அது எதிர்கொண்டுவருகிறது. 2050 ஆம் ஆண்டில் மும்பையில் இருக்கும் கிட்டத்தட்ட 2,500 கட்டிடங்கள் கடல் மட்ட உயர்வால் சேதமடையக்கூடும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
நகரங்களில் மோசமான வெள்ளத்திற்கு வழிவகுக்கும் பல காரணிகளை நம்மால் மாற்றியமைக்க முடியாது. ஆனால், சில காரணிகளை நம்மால் தவிர்க்கவும் மாற்றியமைக்கவும் முடியும். அந்தக் காரணிகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் அரசாங்கம் தேவையான திட்டங்களை வகுக்க வேண்டும். அவற்றுக்கு நாம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.