தென்னிந்திய இயற்கை நூல்கள் - ஓர் அறிமுகம் | உலக சுற்றுச்சூழல் நாள் சிறப்புக் கட்டுரை

ஒவியம்: எரிக் ராமானுஜம்
ஒவியம்: எரிக் ராமானுஜம்
Updated on
6 min read

இந்தியாவில் இயற்கை சார்ந்த படைப்புகளை ஆங்கிலத்தில் எழுதியவர்களின் பட்டியல் மிக நீளம். அதில் தென்னிந்தியக் காட்டுயிர்கள், அவற்றின் இயற்கை வரலாறு, காட்டுயிர்ப் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆங்கிலத்தில் எழுதியவர்கள் பலர். நமது பகுதிகளில் தென்படும், நமக்குத் தெரிந்த, பார்த்துப் பழகிய உயிரினங்கள், தாவரங்கள், நில அமைப்புகள், இடங்கள் ஆகியவற்றைப் பற்றிப் படிக்கும்போது நம்மால் அவற்றோடு எளிதில் உணர்வுப்பூர்வமாகத் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது.

பசுமைப் படைப்புகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, இயற்கை குறித்து உள்ளுணர்வுடன் எழுதப்பட்ட படைப்புகள். எடுத்துக்காட்டாக ஒரு நிலவமைப்பையோ, மரத்தையோ, பறவையையோ உணர்வுப்பூர்வமாக வர்ணித்து எழுதுவது, இயற்கையுடன் மனிதக் குலத்திற்கு உள்ள தொடர்பை விளக்கி எழுதுவது, கவிதை புனைவது ஆகியவற்றைச் சொல்லலாம். இம்மாதிரியான படைப்புகளில் தத்துவார்த்தமான சிந்தனைகளும் புனைவுகளும் வர்ணிப்புகளும் மேலோங்கி இருக்கும். இருபதாம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஹென்றி டேவிட் தாரோ, ரால்ப் வால்டோ எமர்சன் போன்றோர் இது போன்ற படைப்புகளின் முன்னோடிகள்.

இரண்டாவது, இயற்கை வாழிடங்கள், உயிரினங்கள், அவற்றின் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறித்து அறிவியல் துல்லியத்துடன் எழுதுவது. முதல் வகைப் படைப்புகளில் சில நேரம் அறிவியல் துல்லியத்தை எதிர்பார்க்க முடியாது. ஒரு பறவையின், மரத்தின் பெயரைச் சொல்லாமல்கூட அவற்றைக் குறித்து எழுதப்பட்டிருக்கலாம். இரண்டாவது வகைப் படைப்புகளுக்கான எடுத்துக்காட்டு: அமெரிக்கக் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ஜார்ஜ் ஷாலர் எழுதிய ‘The Deer and the Tiger’.

அறுபதுகளில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள கான்ஹா புலிகள் சரணாலயத்தில் புலிகளைக் குறித்தும், அவற்றின் முக்கிய இரையான நான்கு வகை மான்களைப் பற்றியும் அவர் ஆராய்ச்சி மேற்கொண்டார். அவரது கண்டறிதல்களை ஆராய்ச்சிக் கட்டுரைகளாக அறிவியல் இதழ்களில் மட்டும் எழுதாமல் ஒரு நூலாகவும் எழுதினார். தான் கூர்ந்து நோக்கிய காட்டுயிர்களின் பண்புகளை, விவரணையாக மட்டும் எழுதாமல், அளவு சார்ந்த முறைகள் (quantitavie methods), தரவு அடிப்படையில் புள்ளிவிவரங்களுடன் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய எளிய ஆங்கிலத்தில் எழுதினார்.

நோக்கு நூல்களும் இயற்கை வரலாற்று நூல்களும்

தென்னகத்திலும் இதைப் போன்ற இயற்கை வரலாறும் ஆராய்ச்சி முடிவுகளும் ஒருங்கே கொண்ட சில நூல்களைக் காணலாம். அண்மையில் காலமான எரிக் ராமானுஜம் எழுதிய ‘In Achilles’ Footsteps – Adventures with the Indian Eagle Owl’ - கொம்பன் ஆந்தையைப் பற்றிப் பல ஆண்டுகளாக ஆரோவில் பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சியை விளக்கும் நூல். நூலில் அவரே தீட்டிய ஆந்தைகளின் வாழ்க்கை முறை குறித்த அருமையான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆரோவில்லில் வாழும் டிம் ரே ‘Wildlife great and small of India’s Coromandel’ எனும் நூலை எழுதியுள்ளார். சோழமண்டலக் கடற்கரையோரப் பகுதிகள் எங்கும் ஒரு காலத்தில் வெப்பமண்டல வறண்ட பசுமைமாறாக் காடுகள் பரவியிருந்தன. எனினும், பல்லாண்டுக் காலத்தில் இவற்றில் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. எஞ்சியிருக்கும் அந்த வனப் பகுதிகளில் உள்ள உயிரினங்களைப் பற்றியும் அவற்றின் வியத்தகு உண்மைகளையும் விளக்குகிறது இந்த நூல்.

பெங்களூருவைச் சேர்ந்த நகர்ப்புற இயற்கைச் சூழலியல் குறித்த ஆராய்ச்சியில் பல காலமாக ஈடுபட்டிருப்பவர் ஹரிணி நாகேந்திரா. பெங்களூரு சிறிய ஊராக இருந்ததிலிருந்து தற்போது மாநகரமாக மாறியது வரையில், அப்பகுதி இயற்கைச் சூழலியலின் வரலாற்றை விளக்குகிறது இவரது நூல் ‘Nature in the City’. இதே வகையில் இந்திய நகரங்களில் தென்படும் மரங்களைப் பற்றிய மற்றொரு நூல் ‘Cities and Canopies’ (சீமா முண்டோலியுடன் இணைந்து ஹரிணி எழுதியது). மேற்கு மலைத்தொடரில் உள்ள ஆனைமலைப் பகுதியின் வனங்களைக் குறித்த வரலாற்றை விவரிக்கும் நூல் ‘Forest history of Anamalais, Tamil Nadu’. இதை எழுதியவர் வனத்துறை அதிகாரியான டி. சேகர்.

வால்பாறைப் பகுதியில் மழைக்காட்டு மீளமைப்பில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர் தம்பதியான திவ்யா முத்தப்பா - டி.ஆர்.சங்கர்ராமன் இருவரும் எழுதியது ‘Rainforest Restoration – A guide to principles and practice’. மேற்கு மலைத்தொடரில் உள்ள சீரழிந்த மழைக்காட்டுப் பகுதிகளை மீளமைப்பதற்கான வழிமுறைகளையும் அடிப்படைக் கொள்கைகளையும் விளக்கும் சிறு நூல் இது. இவர்கள் இருவரும் ‘Pillars of Life: Magnificent Trees of the Western Ghats’ எனும் நூலில் வால்பாறைப் பகுதிகளில் தென்படும் மரங்களைப் பற்றிய விவரங்களும், அவற்றின் இலை, மலர், காய், கனி, விதை போன்ற பாகங்களைத் தத்ரூபமான ஓவியங்களாகவும் கொண்ட நூலையும் படைத்துள்ளனர். ஓவியங்களைத் தீட்டியவர் நிருபா.

பட்டு இழை / பட்டு நூல் (Silk) என்பது பட்டுப்பூச்சிக்கு மட்டும் உரியதல்ல. பல வகைப் பூச்சியினங்களும் பட்டு இழையைக் கொண்டுள்ளன. பூச்சிகளின் வாழ்க்கை முறையில் பட்டு நூலின் முக்கியத்துவம், எறும்பு, தேனீ, குளவி முதலிய பூச்சிகள் பட்டு நூலை எப்படிக் கூடு கட்டப் பயன்படுத்துகின்றன, பட்டு நூல் பூச்சிகள் பரிணமித்த விதம் போன்ற சுவையான தகவல்களைக் கொண்ட நூல் பூச்சிகள் ஆராய்ச்சியாளர் கீதா எழுதிய ‘The Weavers: The curious world of insects’. பூச்சிகளின் வியத்தகு வாழ்க்கை முறையை விளக்கும் ‘atpada Our World Of Insects’ நூலையும் (ரெபெக்கா தாமசுடன் இணைந்து) இவர் எழுதியுள்ளார்.

இந்தியப் பறவையியலாளர்களில் முக்கியமானவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆஷீஸ் பித்தி. இவரது ‘Birds in Books: Three Hundred Years of South Asian Ornithology: a Bibliography’ எனும் நூல் சற்றே வித்தியாசமானது. தெற்காசிய நாடுகளில் இருக்கும் பறவைகள் குறித்து சுமார் 300 ஆண்டுகளாக (1713லிருந்து 2009வரை) வெளிவந்த எல்லா வகையான பதிப்புகளின் அட்டவணையைக் கொண்டது இந்த நூலடைவு (Bibliography). இதன் இரண்டாம் பதிப்பு, தனிஆய்வு நூலாக (monograph) அண்மையில் வெளிவந்தது. இந்த நூலடைவை Indian Birds எனும் பறவைகள் குறித்த அறிவியல் இதழின் இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டியைச் சேர்ந்தவர் பறவையியலாளர் தாரா காந்தி. இவர் இந்தியப் பறவையியலின் முன்னோடிகளில் ஒருவரான சாலிம் அலியின் மாணவிகளில் ஒருவர். பறவைகளும் விதைப் பரவலும் குறித்த ஆராய்ச்சியை விளக்கும் ‘Birds and Plant Regeneration’ நூலையும், காட்டுயிர்- மனித எதிர்கொள்ளல் குறித்த ‘Birds, Wild animals and agriculture: Conflict and coexistence in India’ எனும் நூலையும் எழுதியுள்ளார். அண்மையில் சாலிம் அலி வானொலிக்கு அளித்த உரைகளை ‘Words for Birds: The Collected Radio Broadcasts by Salim Ali’ எனும் நூலில் தொகுத்துள்ளார்.

வேங்கைப் புலி குறித்துப் பல காலம் ஆராய்ச்சி நடத்திவரும் கர்நாடகத்தைச் சேர்ந்த உல்லாஸ் கரந்த் எழுதிய நூல்கள் ‘View from the Machan - How Science Can Save The Fragile Predator’, ‘The Way of the Tiger’ (இது ‘கானுறை வேங்கை’ எனும் தலைப்பில் தியடோர் பாஸ்கரனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது), இவரைப் போலவே பெரும்பூனை வகைகளை ஆராய்ச்சி நடத்திவரும் சஞ்சய் குப்பி எழுதிய ‘Leopard Diaries: The Rosette in India’ சிறுத்தைகளைப் பற்றியும், ‘Second Nature: Saving Tiger Landscapes in the Twenty-First Century’ வேங்கைப் புலியின் பாதுகாப்பு குறித்தும் விரிவாகப் பேசுகிறது.

சென்னை முதலைப் பண்ணையின் மேலாண் பொறுப்பாளரான ஸாய் விட்டேகர் எழுதிய நூல் ‘Snakeman: The Story of a Naturalist’. புகழ்பெற்ற ஊர்வன ஆராய்ச்சியாளரான ரோமுலஸ் விட்டேகரின் வாழ்க்கைப் பயணம் குறித்து விவரிக்கும் சுவாரசியமான நூல். தற்போது இதன் ஆங்கிலப் பதிப்பு கிடைப்பதில்லை. ஆனால், இந்த நூலைத் தமிழில் ‘பாம்பு மனிதன் ரோமுலஸ் விட்டேகர்’ எனக் கமலாலயன் மொழிபெயர்த்துள்ளார்.

இது போலவே இந்தியாவின் சிறந்த சூழலியலாளர்களில் ஒருவரான ராவ்ப் அலி, இந்தியக் காட்டுயிர் பாதுகாப்பில் தான் பெற்ற அனுபவங்களைச் சொல்லும் நூல் ‘Running Away from Elephants: The Adventures of a Wildlife Biologist’ இந்த வகையில் முக்கியமாது. ஆரோவில்லில் வாழ்ந்து மறைந்த ராவ்ப் அலி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சூழலியல் முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கக் காரணமாக இருந்தவர். மதுரையில் வாழும் மிருதுளா ரமேஷ் எழுதிய ‘The Climate Solution: India’s Climate Change Crisis and What We Can Do About It’, காலநிலை மாற்றம் குறித்து எழுதப்பட்ட ஒரு முக்கியமான நூல்.

தமிழ் நாட்டில் உள்ள பல வகையான பறவைகளின் கூடமைக்கும் பண்பினைப் பற்றி விளக்கும் நூல் ‘Diary on the Nesting Behaviour of Indian Birds’. இந்த நூலுக்காகப் பல பறவைகளின் கூடுகளைக் கூர்ந்து நோக்கித் தகவலைத் திரட்டித் தந்தவர் கூந்தன்குளத்தைச் சேர்ந்த பறவை ஆர்வலர் பால் பாண்டி. அத்துடன் தாம் அறிந்த தகவல்களையும் சேர்த்து நூலாக எழுதியவர் கோவையைச் சேர்ந்த சின்ன சாத்தன்.

கட்டுரைத் தொகுப்புகள்

இயற்கை சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி, பின்னர் நூலாகத் தொகுத்து வெளிவந்தவற்றில் முக்கியமானவை மா. கிருஷ்ணனின் படைப்புகள். இவர் 46 ஆண்டுகளாகப் பத்திரிகைகளில் எழுதிய பல கட்டுரைகளைப் பின்வரும் நூல்களில் காணலாம்: ‘Jungle and Backyard’, ‘Nights and Days: My Book of India's Wild Life’, ‘Nature's Spokesman: M. Krishnan and Indian Wildlife’ (தொகுத்தவர் ராமச்சந்திர குஹா), ‘Of Birds and Birdsong’ (தொகுத்தவர்கள் சாந்தி, ஆஷிஷ் சந்தோலா), ‘My Native Land: Essays on Nature’ (தொகுத்தவர்கள் சு. தியடோர் பாஸ்கரன், ஏ. ரங்கராஜன்).

மா. கிருஷ்ணன், A முதல் Z வரை உள்ள ஆங்கில எழுத்தில் தொடங்கும் காட்டுயிர்களின் பெயர்களை வைத்துப் பாடல்களை எழுதி அவரது பேத்திக்குத் தந்துள்ளார். இந்தப் பாடல்கள் ‘Book of Beasts: An A to Z Rhyming Bestiary’ எனும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மா. கிருஷ்ணன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல ஓவியம் தீட்டுவதிலும் வல்லவர். இந்த நூலில் அவர் வரைந்த பல ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.தமிழ்ப் பசுமைப் படைப்பு முன்னோடிகளில் ஒருவரான சு. தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் ‘The dance of the Sarus’, ‘A day with the Shama’ முதலிய நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன. மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டி (Madras Naturalists Society) வெளியிடும் இதழ் ‘Blackbuck’. இந்த இதழில் வெளிவந்த பலருடைய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து ‘Sprint of the Blackbuck: Writings on Wildlife and Conservation in South India’ எனும் நூலாக இவர் தொகுத்துள்ளார்.

‘தி இந்து’ ஆங்கிலச் செய்தித்தாளில் தொடர்ந்து காட்டுயிர் குறித்து எழுதி வருபவர் ஜானகி லெனின். இவர் எழுதிய ‘My Husband & Other Animals 1 & 2’ (இரண்டு பாகங்கள்), ‘Stories from the Wild’, ‘Every Creature Has a Story: What Science Reveals about Animal Behaviour’ ஆகியவை படிக்க வேண்டிய நூல்கள். இந்தியாவின் மூத்த காட்டுயிரியலாளர் ஏ.ஜே.டி. ஜான்சிங். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தேராதூனில் உள்ள இந்தியக் காட்டுயிர் ஆராய்ச்சிக் கழகத்தின் (Wildlife Institute of India, Dehradun) இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

மலையேற்றத்தில் வல்லவரான இவர் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பல மலைப்பகுதிகளுக்கு, குறிப்பாக மேற்கு மலைத்தொடர்ப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பெரிய பாலூட்டிகளைப் பற்றிப் பல காலமாக ஆராய்ச்சி நடத்திவருபவர். இது குறித்து இவர் எழுதியவை ‘Field Days: A Naturalist's Journey Through South and Southeast Asia’, ‘Walking the Western Ghats’, ‘On Jim Corbett's Trail and Other Tales from the Jungle’ கட்டுரைத் தொகுப்புகளாக வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் காட்டுயிர்ப் பாதுகாப்பு குறித்துப் பேசிய முன்னோடிகளில் ஒருவரான ஈ.ஆர்.சி. டேவிதார், நீலகிரிப் பகுதியில் வரையாடுகளின் எண்ணிக்கையை முதன்முதலாகக் கணக்கெடுத்தவர். இவரது கட்டுரைகளை ‘Cheetal Walk: Living in the Wilderness’ எனும் தொகுப்பில் காணலாம். இவர் மறைந்த பின் அவரது படைப்புகளை ‘Whispers From the Wild’ எனும் நூலில் அவரது மகளான ப்ரியா டேவிதார் தொகுத்தார். இவர் காட்டுயிர் ஆராய்ச்சியாளர், புதுச்சேரி பல்கலைக்கழக சூழலியல் துறையின் ஓய்வுபெற்ற துறைத் தலைவர்.

சென்னையில் பள்ளி ஆசிரியராக உள்ள எம். யுவன் எழுதிய ‘A Naturalist’s Journal’, வால்பாறையில் மழைக்காட்டு மீளமைப்பிலும், பறவைகள் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ள டி.ஆர். சங்கர்ராமன் எழுதிய கட்டுரைத் தொகுப்பான ‘The wild heart of India’ ஆகியவையும் குறிப்பிடத்தக்க நூல்கள்.

கட்டுரையாளர்,
காட்டுயிர் ஆராய்ச்சியாளர்-எழுத்தாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in