

ஆரம்பப் பள்ளி அறிவியல் வகுப்புகளில் விதைகள் குறித்தும், அவற்றை நடவு செய்யும் முறைகள் குறித்தும் உங்களுக்குக் கற்பிக்கப்பட்டு இருக்கலாம். ஒருவேளை உங்களுக்குத் தோட்டக்கலையில் ஈடுபாடு இருக்கும் என்றால், அவை குறித்து அதிகம் தெரிந்திருக்கும் வாய்ப்பும் உண்டு. செடி வளர்ப்பது எளிதான செயல் என்றாலும், அது செயல்படுத்துவது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை என்பதே நிதர்சனம்.
வெறுமனே விதைகளை மண்ணில் விதைத்து, அதற்குத் தண்ணீரும் சூரிய ஒளியும் அளித்தால் மட்டும் அது முளைத்துவிடாது. என்னதான் சரியான முறையில் விதைத்தாலும், அதற்குத் தேவையானவற்றை முறையாக அளித்தாலும், சில சமயம் அது முளைப்பது இல்லை. எவ்வளவு நாள் காத்திருந்தாலும் அவை முளைப்பதில்லை. அவை ஏன் முளைக்கவில்லை என்பதைத் தெரிந்துகொள்வது, பின்னாட்களில் அது போன்ற சூழ்நிலையைத் தவிர்க்க உதவும்.
தண்ணீர்
விதைகள் வளர தண்ணீர் தேவை. ஆனால் அவற்றை அதிகமாகக் கொடுக்கக் கூடாது. அதிகப்படியான நீர் அவற்றை மூழ்கடித்துவிடும். மேலும், அதிகப்படியாக நீங்கள் ஊற்றும் தண்ணீர் மண்ணில் உள்ள பயனுள்ள பாக்டீரியாக்களைக் கொன்று, நீரில் மூழ்கிய விதைகளை அழுகச் செய்துவிடும்.
இரையாகும் விதைகள்
உங்கள் விதைகள் மண்ணுக்குள் புதைந்து இருப்பதால், அவை பாதுகாப்பானதாக உள்ளன என்று நினைக்க வேண்டாம். சில நேரங்களில், அவை எலிகள், பறவைகள், கம்பி புழுக்கள் போன்றவற்றுக்கு உணவாக நேரிடும் ஆபத்து உண்டு.
சேமிக்கும் முறைகள்
விதைகளை உங்கள் வீடுகளிலோ தோட்டத்திலோ உள்ள குளிர்ந்த இடத்தில் இருக்கும் உலர்ந்த, காற்று புகாத கொள்கலனில் சேமிக்க வேண்டும். விதைகள் மிகவும் சூடாக இருந்தால், அவை முளைக்க முடியாமல் போக நேரிடும். அதிக ஈரப்பதமும் அதே விளைவுக்கு வழிவகுக்கும். விதைகள் ஈரமாக இல்லாவிட்டாலும் கூட, அதிக ஈரப்பதம் உள்ள பகுதியில் சேமிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்பு இது.
அதிக ஆழம் கூடாது
விதைகளை மண்ணுக்குள் மிகுந்த ஆழத்தில் நடக்கூடாது. அதிக ஆழத்திலிருந்து முளைத்து வெளி வருவது அவ்வளவு எளிதல்ல.