

பரபரப்பான பள்ளிச்சூழல். மதியம் மூன்று மணியளவில் பள்ளி மாணவர்கள் சார்...சார்.. என்ற அழைப்பின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஒரு மாணவன் இரண்டு பறவை குஞ்சுகளைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தான். கேள்விக்குறியோடு அவனையும் அவன் கொண்டுவந்த பறவைக் குஞ்சுகளையும் பார்த்தேன். “கரண்டு கம்பத்தில இருந்த கூடு ஆடிக் காத்து வேகமாக வீசுனுதல பிஞ்சு தொங்கிச்சி சார், அதில இருந்த இந்த இரண்டு குஞ்சுகளும் கீழ விழுந்திடுச்சி சார்” என்றான். அவற்றைப் பார்ப்பதற்கு கருஞ்சிட்டுபோல் தோன்றின. சரி, குஞ்சுகளை அவற்றின் கூட்டிலேயே வைத்துவிடலாம் என்று நினைத்துக் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தேன்.
இரண்டு தெரு தள்ளியிருந்த மின் கம்பத்தில் ஒரு கூடு அடித்த காற்றில் சிதைந்து தொங்கிக்கொண்டிருந்தது. இரண்டு கைகளிலும் இருந்த பறவைக் குஞ்சுகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதன் தாய்ப்பறவை எங்காவது தென்படுகிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். எதுவும் தென்படவில்லை. ஒருவேளை குஞ்சுகளுக்கு உணவு தேடிச் சென்றிருக்குமோ? அல்லது கூடு கலைந்து குஞ்சுகளைக் காணாமல் ஏமாற்றத்துடன் சென்றிருக்கிருக்குமோ என்று நினைத்துக்கொண்டே பள்ளி திரும்பினேன்.
புதிய கூட்டில்...
பார்ப்பதற்கு அவை கருஞ்சிட்டுப் போல (Indian Robin) இருந்தன. அவற்றைக் காப்பாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கை பிறந்தது. அதற்குக் காரணம் எங்கள் பள்ளியில் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காகவே மண் சட்டியைக் காட்டிலும் சிறியதாகப் பறவை மட்டும் பறந்து செல்வதற்காகச் சட்டியின் நடுப்பகுதியில் ஒரு சிறிய துவரம் இருக்குமாறு பானை செய்பவரிடம் சொல்லிப் பானை வனைந்து பள்ளி சுவரில் ஏற்கெனவே மாட்டியிருந்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஜோடி கருஞ்சிட்டு நாள்தோறும் சுள்ளிகளைக் கொண்டு வந்து சட்டிக்குள் வைத்துக்கொண்டிருந்தது. சில நாட்கள் கழித்து தாய்ப்பறவை வாயில் புழுவை எடுத்துக்கொண்டு சட்டிக்குள் செல்வதும் வருவதுமாக இருந்தது. ஒரு தலைமுறை உள்ளே உருவாகிக்கொண்டிருக்கிறது என்று பிறகுதான் புரிந்தது.
கையில் இருக்கும் இந்த பறவைக்குஞ்சுகளை காலியாக இருக்கும் மண்சட்டிக் கூட்டுக்குள் வைத்து விடலாம் என்று முடிவு செய்தோம். அச்சத்துடன் ஒடுங்கியபடி இருந்தன அந்த பறவைக் குஞ்சுகள். அவற்றைச் சட்டிக்குள் வைத்து, மழைக் காலமாக இருந்ததால் சட்டியின் மேல் பகுதியை ஞெழிகிப் பையால் இறுக்கிக்கட்டினேன். சட்டியின் நடுவில் தாய்ப்பறவை உணவு கொடுப்பதற்காகச் சிறு துவாரம் மட்டும் இருந்தது. சட்டியைப் பள்ளியிலேயே தொங்கவிட்டோம்.
பெற்றோர் யார்?
பிறகு அடுத்த கவலை என்னைத் தொற்றிக் கொண்டது. இங்குதான் குஞ்சுகள் இருக்கின்றன என்பது தாய்ப்பறவைக்குத் தெரிய வேண்டுமே. இல்லையென்றால் உணவு கிடைக்காமல் குஞ்சுகள் இறந்துபோய்விடுமே என்ற எண்ணம் தலைதூக்கியது. அடுத்து இரண்டு நாட்கள் பள்ளி விடுமுறை.
அப்பறவைக் குஞ்சுகள் பற்றிய மனஉந்துதல் காரணமாக அடுத்த நாள் காலை பத்து மணிக்குப் பள்ளி சென்று பார்த்தேன். தாய்ப்பறவை வந்து சென்றதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. இதைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தபோது இரண்டு பறவைகளின் கத்தல் ஒலி இடைவிடாது கேட்டுக்கொண்டே இருந்தது. மேலே பார்த்தபோது கரிச்சான்குருவிகள் (Black Drongo) கூட்டைப் பார்த்துக் கத்திக்கொண்டு சுற்றி சுற்றி வந்தன. எனக்கு விஷயம் புரிந்துவிட்டது.
அந்தப் பறவைகள் தமது குஞ்சுகளைக் கண்டுபிடித்தும்கூட உணவு ஊட்டமுடியவில்லை. காரணம் கருஞ்சிட்டு மட்டுமே சென்று வரக்கூடிய பானையின் சின்ன துவாரத்தில் பெரிய கரிச்சான்குருவியால் உள்ளே புக முடியவில்லை. ஒரு மாணவனை அழைத்து, மேலே ஏறி சட்டியின் அகன்ற வாய்ப்பகுதியைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த ஞெகிழிப் பையை நீக்கச் சொன்னேன். அவன் ஏறும்போது குஞ்சுகளுக்குத் தீங்கு விளைவிக்கத்தான் செல்கிறானோ என்று நினைத்து தாய்ப்பறவை அலறியது. ஒரு வழியாக ஞெகிழிப் பையை நீக்கி மீண்டும் தொங்கவிட்டு இறங்கியவுடன் உற்றுநோக்கினோம். உடனே கரிச்சான் இணைப்பறவைகள் சட்டியின் வாய்ப்பகுதிக்கு வந்தன.
குஞ்சுகள் கத்தும் ஒலி கேட்டது. உடனே தாய்ப்பறவை விரைந்து பறந்து சென்று குஞ்சுகளுக்குப் பூச்சியை ஊட்டியது. இடைவிடாமல் உணவூட்டம் தொடர்ந்தது. இனி கவலையில்லை, கரிச்சான் இணை குஞ்சுகளைப் பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினேன்.
அடுத்த சில நாட்களுக்கு, இணைப்பறவைகள் மாறிமாறி குஞ்சு களுக்கு உணவூட்டுவதை நானும் பள்ளி மாணவர்களும் கண்டுகளித்தோம். நாங்கள் இருப்பதை அவை பொருட் டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
மாணவர்களின் மகிழ்ச்சி
எட்டாவது நாள் மாணவர்கள் என்னை அழைக்கும் குரல் கேட்டு வெளியே வந்தேன். “சார், சட்டியிலிருந்து குஞ்சுப் பறவை பறந்து போய் அந்தக் கிளையில் உக்காந்துகிட்டு இருக்குது சார்’ என்றார்கள். அடுத்த தலைமுறை கரிச்சான் குருவி (வால் மட்டும் முழுமையாக வளர்ந்திருக்கவில்லை) கிளையில் அமர்ந்துகொண்டிருந்தது. இன்னொரு குஞ்சுப் பறவையும் சட்டியி லிருந்து வெளியே பறந்து வந்தது.
இந்நிகழ்வுகளை என் பள்ளி மாணவர்கள் எட்டு நாட்களும் தொடர்ந்து உற்றுநோக்கினார்கள். எதிர்காலத்தில் பறவைகளுக்கு ஏற்படும் இடர்களை நீக்கும் விதையை அவர்களின் மனதில் ஊன்றியதாகவே நினைக்கிறேன். இதன் மூலம் பறவைகளின் இனப்பெருக்கத்தைப் பற்றி மாணவர்களுக்கு நேரடியாக விளக்கிப் புரிய வைக்க முடிந்தது. பறவைகள் இந்த உலகிற்கு எவ்வளவு இன்றியமையாத உயிரினம் என்பதையும் மாணவர்களிடையே புரியவைக்க முடிந்தது.
கூட்டிலிருந்து இளம் தலைமுறைப் பறவைகள் வெளிவந்து புதிய உலகத்தைக் கண்டபொழுது மாணவர்கள் அடைந்த மகிழ்ச்சியில், அவர்களே ஒரு புதிய உலகத்திற்குச் சென்றுவிட்டதைப் போல அவர்களின் முகபாவங்கள் அமைந்திருந்தன.
இதில் மற்றொரு சுவாரசியமும் உண்டு. எங்கள் பள்ளி பறவையியல் மன்றத்தின் பெயர் ‘கரிச்சான் குருவி பறவையியல் மன்றம்’. மேற்கண்டது போன்ற செயல்பாடுகள் மூலம் இயற்கைக்கும் மனிதனின் உணர்வுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க முடியும். அதற்குப் பறவைகள் ஒரு பாலம் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர், ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: zenthil75@gmail.com