லாபம் தரும் கூட்டின மீன் வளர்ப்பு
மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் கொண்ட வெவ்வேறு வகை மீன்களை ஒரே குளத்தில் வளர்த்து மீன் உற்பத்தியை பெருக்குவதே கூட்டின மீன் வளர்ப்பின் நோக்கமாகும்.
குளத்தில் மீன்களுக்குத் தேவையான உணவாகிய, தாவர நுண்ணுயிர்களும் விலங்கின நுண்ணுயிர்களும் மட்கிய பொருள்களும் புல் பூண்டுகளும் உள்ளன.
கட்லா, வெள்ள்ளிக்கெண்டை மீன்கள் நீரின் மேல் பரப்பில் இரை எடுக்கும். கட்லா, விலங்கின நுண்ணுயிர்களையும் வெள்ளிக் கெண்டை தாவர நுண்ணுயிர்களையும் முக்கிய உணவாகக் கொள்கின்றன. ரோகு மீன், நீரின் இடைப்பரப்பில் இரை உட்கொள்கிறது. மிர்கால், சாதாகெண்டை ஆகிய மீன்கள் நீரின் அடிப்பரப்பில் உள்ள மட்கிய பொருள்களை உணவாகக் கொள்கின்றன. புல்கெண்டை மீன், தாவர உணவுப் பொருட்களை உண்ணும், இவ்வாறாக மாறுபட்ட உணவுப் பழக்கமுள்ள மீன்களைக் கூட்டாக குளத்தில் விட்டு வளர்ப்பதால் அவற்றுக்குள் உணவுக்காகப் போட்டி ஏற்படுவதில்லை. மேலும், குளத்தில் அனைத்து மட்டத்திலும் எல்லா உணவுப் பொருள்களும் பயன்படுத்தப்படும் சூழலும் இருக்கும்.
மீன்வளர்ப்பிற்குக் குளதைத் தயாராக்குதல்
மீன் வளர்ப்பிற்கான குளங்களை வெட்டியவுடன் தண்ணீர் நிரப்புவதற்கு முன் குளத்தில் வளர்ந்திருக்கும் புல் பூண்டுகளை முதலில் அகற்றி உழவுசெய்ய வேண்டும்.
குளத்தில் ஒரு மீட்டர் அளவுக்குத் தண்ணீர் நிரப்ப வேண்டும். குளத்தைச் சுற்றி உயரமாக அமைந்துள்ள கரைகளில் பலன் தரும் மரங்களை வைத்துப் பாதுகாக்க வேண்டும். கூடுதலாகக் காய்கறிச் செடிகளையும் பயிரிடலாம்.
நல்ல பிடிப்புத் திறனுடன், நீர் உறிஞ்சாத்தன்மையுடன் உள்ள வண்டல் கலந்த இடம் மீன் வளர்ப்புக் குளம் அமைக்கச் சிறந்தது. தேவையான அளவு தண்ணீரும் இருக்க வேண்டும்.
குளத்திற்கு உரமிடுதல்
உரமிடுதல் மூலம் குளத்தில் உள்ள மீன்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களின் அளவை உயர்த்த முடிவதால் மீன் உற்பத்தி பெருகும். உரத்தில் அடங்கியுள்ள சத்துப் பொருள்கள் நீரிலுள்ள மண்ணால் ஈர்க்கப்பட்டு அவை படிப்படியாக வெளியிடப்படுகின்றன. மாட்டுச் சாணம், கோழிக்கழிவு ஆகியவை இயற்கை உரங்களாகப் பயன்படுத்தலாம். யூரியா, அம்மோனியம் பாஸ்பேட், பொட்டாசியம் நைட்ரேட் ஆகியவை மீன் வளர்ப்புக்குத் தேவையான உரவகைகளாகும்.
ஆறுவகை மீன்களை வளர்த்தல்
கட்லா, ரோகு, மிர்கால், புல் கொண்டை, வெள்ளிக்கொண்டை, சாதாக் கெண்டை ஆகிய மீன் குஞ்சு வகையை தெஹக்டேருக்கு
முறையே 25%, 26%, 10%, 10%, 10%, 20% சதவீதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இம்முறையில் ஹெக்டேருக்கு 8 முதல் 10 சென்டி மீட்டர் 10,000 மீன்குஞ்சுகள் அளவில் மீன் குஞ்சுகளை வளர்க்கலாம்.
மீன்களுக்கு உணவிடுதல்
அரிசி, தவிடு, கடலைப் புண்ணாக்கு போன்றவற்றைக் குளத்தின் இயற்கை உணவுப் உற்பத்தியைக் கணக்கிட்டுத் தேவையான அளவில் தினமும் வழங்கலாம். மேலும் இதற்கு மாற்றாக மிதக்கும் குச்சித் தீவனத்தையும் மீன் குஞ்சுகளின் வளர்ச்சிக்கேற்பப் பயன்படுத்தலாம். தினம் அளிக்கும்போது மீன் குஞ்சுகளின் எடையில் 2 முதல் 3 சதவீதம் அளவில் அளிக்க வேண்டும். இவ்வாறு உணவாக அளிக்கப்படும் தீவனங்களால் மீன் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
மீன் பிடிப்பு
8 முதல் 10மாதங்களுக்கு மீன் வளர்ப்பு செய்யும்போது மீன்கள் ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ எடை வரை வளரும். ஒரு வெஹக்டேருக்கு 5 டன்கள் மீன் உற்பத்தி செய்வதால் விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
