மியாவாக்கி காடுகள் - பசுமையை அதிகரித்தால் மட்டும் போதுமா?

மியாவாக்கி காடுகள் - பசுமையை அதிகரித்தால் மட்டும் போதுமா?
Updated on
2 min read

மியாவாக்கி எனும் காடு வளர்ப்பு முறை உலகில் பல நாடுகளில் பிரபலமடைந்து வருகிறது. அகிரா மியாவாக்கி என்ற ஜப்பான் நாட்டு தாவரவியலாளர் அறிமுகம் செய்த காடு வளர்ப்பு முறை இது. இந்த முறையின் மூலம் குறைந்த இடத்தில், குறுகிய காலத்தில் அடர்ந்த காட்டை உருவாக்க முடியும்.

இந்த முறையில் ஒரு சிறிய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் பல்வேறு வகையான மரங்கள் மிகவும் நெருக்கமாக நடப்படும். வெறும் 500 சதுர அடி இடம் இருந்தால் கூட, அதில் காடுகளை ஏற்படுத்திவிடலாம். மண் வளம், காலநிலை போன்றவற்றைச் சார்ந்து இடத்திற்கு ஏற்றாற்போல் அந்தக் காடுகள் உருவாக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் இடத்தில், ஆழமான குழிகளை தோண்டி, மக்கும் குப்பைகளைக் கொட்டி நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடப்படும். மரக்கன்றுகளை நெருக்கமாக நடப்படுவதால், அவற்றிற்குச் சூரிய ஒளி மேலிருந்து மட்டுமே கிடைக்கும். பக்கவாட்டில் மற்ற செடிகள் நெருக்குவதால், மரங்கள் சூரிய ஒளியைத் தேடி ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு மேல்நோக்கி வேகமாக வளரும். இதனால் ஒரு மரத்துக்கு பத்து ஆண்டுகளில் கிடைக்கும் வளர்ச்சி இரண்டு ஆண்டுகளில் கிடைத்துவிடும். இந்த முறையில் மரங்கள், இயற்கை காடுகளை விட 10 மடங்கு அதிக வேகமாகவும், 30 மடங்கு அதிக நெருக்கமாகவும் வளரும்.

பசுமை பரப்பை அதிகரிக்கும்

சென்னையில் 'துவக்கம்' எனும் தொண்டு நிறுவனம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் மியாவாக்கி காடுகளை உருவாக்கி வருகிறது. சென்னை நகரத்தின் பசுமையை அதிகரிக்கும் இந்த முயற்சியில் பல குடியிருப்பாளர் நலச் சங்கங்களையும் அது இணைத்துள்ளது. காடுகளை உருவாக்குவதற்கு முன்னர், அந்த இடத்தில் என்ன மரங்கள் பாரம்பரியமாக வளரும் என்பதை ஆய்வு செய்து பின்னரே மரங்கள் நடப்படுகின்றன. அவ்வாறு நடப்படும் மரங்களை, பசுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் பாதுகாத்து வளர்க்கின்றனர்.

பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் இவர்கள் உருவாக்கி இருக்கும் மியாவாக்கி காட்டில் சுமார் 80,000 மரங்கள் வளர்கின்றன. கோட்டூர்புரம் பகுதியில் 2,000க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்துள்ளன. இதில் பலா மரங்கள், புங்கன், பூவரசு, வேம்பு என பெரிய மரங்களும் உள்ளன. இந்திரா நகர் பகுதியில் உள்ள மியவாக்கி காட்டில் 7,800 மரங்கள் வளர்ந்து வருகின்றன. இந்தக் காடுகள் சென்னையின் பசுமை பரப்பை அதிகரிக்கும்; தட்பவெப்பத்தையும் சீர்படுத்தும்.

நிரந்தர தீர்வே தேவை

இருப்பினும், மியவாக்கி முறையால் குறைவான நன்மையே கிடைக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால், மியவாக்கி காடுகள் பார்ப்பதற்க்கு காடுகள் போன்ற தோற்றத்தை தந்தாலும், இயற்கையாக உருவாகும் காடுகளை போன்று அவை இருக்காது.

காடு என்றால், அதில் பெரிய மரங்கள், சிறுமரங்கள், செடிகள், கொடிகள் என பலவகையான தாவரங்கள் இருக்கும். அந்த தாவரங்களுக்கு உகந்த பூச்சிகள், புழுக்கள், பறவைகள், சிறிய, பெரிய விலங்குகள் அந்தக் காட்டில் வாழும். ஆனால், மியாவாக்கி காடுகளில் மரங்கள் மட்டுமே அடர்ந்து காணப்படும். பிற உயிரிகள் வாழ்வதற்கான இடமாக இருக்காது. மரங்கள் நெருக்கமாக நடப்படுவதால், அவற்றின் வேர்கள் ஒன்றை ஒன்று பிணைந்து சிக்கலாக வளரும். அது அவற்றின் வளர்ச்சியையும் முடக்கும்.

குறைந்த காலத்தில் மரங்கள் இந்த காட்டில் வளரும். பார்பதற்கும் அழகாக இருக்கும். ஆனால், பறவைகளுக்கும் சிறிய விலங்குகளுக்கும் தேவையான உணவு அங்கே கிடைக்குமா என்பது சந்தேகமே? முக்கியமாக, அதில் நாம் உலாவ முடியாது. பல்லுயிர் பெருக்கத்திற்கும் அங்கே இடமிருக்காது.

மியாவாக்கி காடுகளை விரைவில் உருவாக்க முடியும் என்பதால், இதை ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே கருத வேண்டும். நிரந்தர தீர்வு என்பது வீடுகள், சாலையோரங்கள், பூங்காக்கள் போன்றவற்றில் மரங்களை வளர்ப்பது மட்டுமே.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in