ஞெகிழியை மட்கச் செய்யும் நொதியைக் கல்லறையில் கண்டறிந்த அறிவியலாளர்கள்
ஞெகிழி கழிவே இன்றைய தேதியில் உலகின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தல். ஞெகிழி கழிவுகளிலிருந்து கடலையும், அதில் வாழும் உயிரினங்களையும், அவற்றை உண்ணும் நம்மையும் மீட்டெடுத்துக் காக்கும் விதமாகப் பல முன்னெடுப்புகளைச் சூழலியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், அழியாத்தன்மை பெற்றுள்ள ஞெகிழியிடமிருந்து இந்தப் பூவுலகைக் காக்கும் வழிதெரியாமல் உலக நாடுகள் அல்லாடி வருகின்றன.
ஞெகிழியின் கழிவு பரவாத இடம் இன்று இப்பூவுலகில் இல்லை. சாக்கடைகள், நீர்நிலைகள், சாலைகள், ஏன் அண்டார்க்டிகாவின் அடியாழத்தில் கூட ஞெகிழி கழிவு பரவியிருக்கிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளிலும் நெகிழி கழிவு இன்று அங்கமாக நிறைந்திருக்கிறது. தொடர்ந்து சூரிய வெப்பத்திலும் தண்ணீரிலும் அடித்துச் செல்லப்படும் ஞெகிழி சிறுசிறு துகள்களாக உடையுமே ஒழிய, அதன் வேதி வடிவம் முழுமையாக மாறாது. இப்படி உடையும் நுண்ஞெகிழித் துகள்கள், நாம் குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று என எங்கும் கலந்திருக்கின்றன. உயிரின உணவுச் சங்கிலிக்குள்ளும், மனித உணவுச் சங்கிலிக்குள்ளும் ஞெகிழி புகுந்து பல்லாண்டுகளாகிவிட்டன.
அறிவியலாளர்கள் கண்டறிந்த நொதி
இந்த ஆபத்தான சூழலில்தான், இந்தப் பிரச்சினைக்கான தீர்வை ஜெர்மனியின் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கண்டறிந்துள்ள ஒரு நொதி ஞெகிழியை 16 மணிநேரத்துக்குள் மட்கச் செய்யும் திறனுடன் இருக்கிறது. பாலிஸ்டர் ஹைட்ரோலேஸ் (PHL7) எனும் அந்த நொதியை ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் இந்த நொதியைக் கண்டறிந்த விதம் சுவாரஸ்யமானது. கல்லறையில் மட்கிய பொருள் ஒன்றிலிருந்து இந்த நொதியை அவர்கள் கண்டறிந்துள்ளனர். கல்லறையில் கண்டெடுத்த அந்த நொதியை ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்று சோதித்துப் பார்த்தபோது, அதன் முடிவுகள் அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தின. ஆம், அந்த நொதி 16 மணிநேரத்துக்குள் பாலிஎத்திலீன் டெரெப்தாலேட்டை (PET) 90 சதவீதம் மட்கச் செய்து இருந்தது.
இயற்கையோடு இயைந்து வாழ்தல்
6 ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பான் நாட்டின் அறிவியலாளர்கள் நொதியை மட்கச் செய்வதற்கு LLC என்கிற நொதியைக் கண்டறிந்துள்ளனர். ஆனால், ஜெர்மன் நாட்டின் அறிவியலாளர்கள் இந்த நொதி ஞெகிழியை மட்கச் செய்வதில் இரு மடங்கு வேகம் கொண்டதாக இருக்கிறது. முக்கியமாக, ஞெகிழியை மட்கச் செய்வதற்கு PHL7 எனும் நொதிக்கு எந்த வினையூக்கியும் தேவையில்லை.
இந்தக் கண்டறிதல், ஞெகிழி பயன்பாட்டில் உலக அளவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என அந்த அறிவியலாளர்கள் நம்புகின்றனர். இந்த நொதி பயன்பாட்டுக்கு வரும்போது, ஞெகிழி மறுசுழற்சி மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கக் கூடும். ஆனால், இது எப்போது பயன்பாட்டுக்கு வரும், அதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை அது பயன்பாட்டுக்கு வராமல் ஆய்வக நிலையிலேயே கூட முடங்கிவிடலாம். அறிவியல் நடைமுறை மிகவும் புதிரானது. எளிதில் ஊகிக்க முடியாதது. இன்று நாம் தீர்வுகளாக நினைப்பவை, எதிர்காலத்தில் ஒரு பெரும் பிரச்சினையின் தொடக்கமாக இருக்கக்கூடும். இயற்கையோடு இயைந்து வாழ்ந்து, ஞெகிழி பொருட்களைத் தவிர்ப்பதே நம்மையும், பூவுலகையும் எப்போதும் காக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.
