

நீரை மறுசுழற்சி முறையைப் பயன்படுத்தித் மீன் வளர்க்கும் தொழில் நுட்பம் குறித்து தமிழக மீன்துறை இயக்குநரகம் பல தகவல்களை வழங்கிவருகிறது. இம்முறையில் நல்ல சந்தை மதிப்புள்ள திலேப்பியா (GIF Tilapia) மீனை வளர்க்கலாம்.
இது ஒரு நவீன தொழில் நுட்பமாகும். இம்முறையில் குறைவான அளவு நீரைப் பயன்படுத்தி மீன் உற்பத்தியை அதிகரிக்க முடியும். நீரின் மறுபயன்பாட்டிற்கு இத்தொழில்நுட்பம் ஒரு நல் வழிகாட்டுதல். நீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தித் தீவிர முறை மீன்வளர்ப்பு மேற்கொள்ளும் இத்தொழில்நுட்பத்தில் மீனின் கழிவுப்பொருட்கள் சுத்திகரிக்கப்பட்டு மீன்களுக்கு ஆரோக்கியமான சூழலை வழங்கப்படுகிறது. இதனால் மீன்களின் இருப்படர்த்தியை அதிகரித்து குறைவான இடத்தில் அதிகபட்ச மீன் உற்பத்தியை மேற்கொள்ள முடியும்.
மரபு வழி மேம்படுத்தப்பட்ட திலேப்பியா இந்தத் தொழில்நுட்ப முறை வளர்ப்புக்குச் சரியான தேர்வாக இருக்கும். திலேப்பியா மீன்களின் தேவை தற்போது அதிகரித்து வருவதால் இதற்கு நல்ல சந்தை மதிப்பும் உள்ளது.
மீன் வளர்ப்புக் குளம்
மறுசுழற்சி முறையில் மீன்வளர்ப்பு குளங்கள் உட்புகுமடை, வெளிப்புகுமடை அமைப்பைப் பொருத்திருக்க வேண்டும். தேவையான அளவுகளுடன் குளங்களைத் தார்ப்பாலின் விரிப்புகளுடன் அமைக்கும்போது கசிவினால் ஏற்படும் நீர் இழப்பு முற்றிலும் தவிர்க்கப்படும்.
மீன்குஞ்சு வளர்ப்பு
மரபு வழி மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் குஞ்சுகளை சாதாரண முறையில் வளர்க்கும்போது சதுர மீட்டருக்கு 3 முதல் 5 என்ற அளவிலும், நீர் மறுசுழற்சி தீவிர மீன் வளர்ப்பு முறையில் ஒரு சதுர மீட்டருக்கு 30 முதல் 40 விரலிகள் வரை இருப்பு செய்யலாம். தேவைக்கேற்ப காற்று புகுத்திகள் நிறுவுதல் வேண்டும். இந்த மீன்கள் 6 மாதத்தில் 400-500 கிராம் வரை வளரக் கூடியது. அவ்வப்போது தண்ணீரைப் பரிசோதித்து உயிர்வளியை தேவையான அளவில் பராமரிக்க வேண்டும். குறைவு ஏற்பட்டால் காற்றுப்புகுத்தியை இயக்கலாம்.
சுழல் நீர் தொடர் தொட்டி
சுழல் நீர் தொடர் தொட்டிகள் இரண்டு அல்லது நான்கு அல்லது ஆறு எண்ணிக்கையில் தொடர்ச்சியாக ஒன்றுக்கொன்று இணையாக அமைக்க வேண்டும்.
தொடர்ச்சியாக எல்லாக் குளங்களிலும் நீர் நிரப்பப்படுவதால் மிஞ்சிய நீரானது நீர் வெளிப்புகுமடை வழியாக வெளியேறும். எனவே, நீர் வெளிப்புகுமடையில் நைலான் வலை கொண்டு மூடி வைக்க வேண்டும். மீன்வளர்ப்புக் குளத்திலிருந்து வெளியேறும் தண்ணீர்க் கழிவுகள் வடிகட்டிய பின் உயிரி வடிகட்டிக் குளத்தில் சேகரிக்கப்பட்டு, மீன் வளர்ப்பிற்கு உகந்ததாக மாற்றப்பட்டு, மீண்டும் மறுசுழற்சியாக வளர்ப்புக் குளத்திற்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.
இம்முறையில் உபயோகப்படுத்தப்பட்ட தண்ணீர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதால் நீரின் தேவையும் செலவும் குறைக்கப்படுகிறது. மீன்வளர்ப்பு, சுழல் நீர் தொடர் தொட்டிகளுக்கான கட்டுமான நிரந்தரச் செலவு அதிகமாக இருந்தாலும், பராமரிப்புச் செலவு மிகக் குறைவாகும்.
மீன் உணவு
இம்முறையில் இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படும் மீன்களுக்கு அதன் உடல் எடையில் 3 விழுக்காடு உணவளிக்கலாம். ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை உணவளிக்க வேண்டும். 24 முதல் 28 விழுக்காடு புரதம் நிறைந்த மிதக்கும் குச்சித் தீவனத்தை அளிக்கலாம்.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படும் மீனைப் பிடித்து அதன் வளர்ச்சியை அறிய வேண்டும். இதன் அடிப்படையில் மீன் நன்றாக வளர்ந்துள்ளதா இல்லையா என்று அறிய முடியும். அது மட்டுமல்லாமல் மீனின் வளர்ச்சியைப் பொறுத்து மீனுக்கு அளிக்கப்படும் உணவு விகிதத்தில் மாற்றம் செய்யலாம். இம்முறையில் தொடர் மீன்பிடிப்பு மேற்கொண்டு உயிருடன் மீன் விற்பனை செய்து அதிக வருவாய் ஈட்டலாம்.