

கார்த்தி (40) ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகில் வசிக்கும் ஒரு விவசாயி. சில நாட்களுக்கு முன்னர் அவரும் அவருடைய மனைவியும் குழந்தைகளுடன் இரவில் வீட்டுக்குச் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது ஊஞ்சக்காட்டுவலசு அருகே இரவில் சாலையோரத்தில் படுத்து இருந்த விலங்கு ஒன்று விரட்டியதால் அச்சமடைந்தனர். இது குறித்து ஈரோடு வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்தபோது புலி விரட்டியதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை செங்காளிக்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் தலைப் பகுதியில் ரத்த காயங்களுடன் சிறிய விலங்கு ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. அரச்சலூர் வன விரிவாக்க அலுவலர் நேரில் சென்று பார்த்தபோது, அது காட்டில் வாழும் புனுகுப் பூனை என்பது தெரியவந்தது.
தவறான அடையாளப்படுத்தல்
பெரும்பாலான நேரம் எந்த விலங்கு அடிபட்டாலும் பிடிபட்டாலும் (சில விதிவிலக்குகள் தவிர) அதை மர்ம விலங்கு என்றே நாளிதழ்கள் குறிப்பிடுகின்றன. சிவகிரி சம்பவம் குறித்து நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளில்கூட அது மர்ம விலங்கு என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இது போன்ற தவறான அடையாளப்படுத்தல் நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அச்சத்தையே பெரும்பாலும் ஏற்படுத்துகிறது. நாம் இயற்கையிலிருந்து தொடர்ந்து விலகி வருவதன் அடையாளம் இது.
புனுகுப் பூனை
இரவாடியான இந்த விலங்கு தமிழில் புனுகுப் பூனை என்றும், ஆங்கிலத்தில் Small Indian Civet எனவும் அழைக்கப்படுகிறது. இதன் குதத்திலிருந்து (ஆசனவாயிலிருந்து) இனக்கவர்ச்சிக்காகச் சுரக்கும் நறுமணமிக்க மெழுகுபோன்ற பொருளுக்காக இவை பெருமளவு வேட்டையாடப்படுகின்றன. சித்த மருந்துகளிலும் வாசனைப் பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகின்றன.
சிறிய புனுகுப்பூனையின் ஒன்றுவிட்ட உறவினரான பெரிய புனுகுப்பூனை சிற்றுயிர்களையும் கொறி விலங்குகளையும் உண்பதோடு பழங்களையும் விரும்பி உண்ணும். குறிப்பாக இவை காபி பழங்களை உண்டு அதன் கொட்டையைக் கழிவாக வெளித்தள்ளும். அந்தக் கொட்டைக்கு நல்ல சுவை இருப்பதாக அறிந்து இந்தோனேசியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அதை Luwark coffee என்ற பெயரில் வணிக நோக்கில் வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளது. உலகிலேயே விலை அதிகமுள்ள காபி இதுதான். ஐரோப்பியச் சந்தையில் இந்த காபி கிலோவுக்கு 20,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் மற்றொரு ஒன்றுவிட்ட உறவினரான மரநாய்- பழங்களையும் சிற்றுயிர்களையும் உணவாகக் கொள்ளும். இந்தியா முழுவதும் ஒன்பது வகையான புனுகுப்பூனை இனங்கள் காணப்படுகின்றன.
கழுதைக் குறத்தி
புனுகை தொடர்ந்து பெறுவதற்காகப் புனுகுப்பூனை வேட்டையாடப்படுகிறது. அதன் காரணமாக அவை அழிந்து வருகின்றன. இதைப் போன்றே ‘கழுதைக் குறத்தி’ அல்லது ‘கழுதைப்புலி’ என அழைக்கப்படும் விலங்கும் அழிவுக்குத் தள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளைத் தூக்கிச்சென்றுவிடும் என்று கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய்யால் நேர்ந்த விபரீதம் அது. உண்மை என்னவென்றால், இந்தியாவில் காணப்படும் கழுதைப்புலிகள் பெரும்பாலும் இறந்த விலங்குகளையும் எலும்புகளையும் மட்டுமே உண்ணும். இன்று விரல் விட்டும் எண்ணும் அளவிலேயே உள்ளன.
காட்டுயிர்களை ஆபத்துக்குத் தள்ளும் இத்தகைய மூடநம்பிக்கைகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். அது காட்டுயிர்களை மட்டுமல்லாமல்; காட்டையும் இயற்கையையும் காக்கும்.