உலக ஆமைகள் தினம்: இந்தியக் கடல் ஆமைகளை அறிவோம்

உலக ஆமைகள் தினம்: இந்தியக் கடல் ஆமைகளை அறிவோம்
Updated on
1 min read

ஆமைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று நில ஆமை (Tortoise), மற்றொன்று கடல் ஆமை (Turtle). வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கடல் ஆமைகள் கடலில் கழித்தாலும், முட்டையிடுவதற்காகப் பெண் ஆமைகள் கடற்கரைக்கு வருகின்றன. இந்த முட்டைகள் பொரிக்கப்பட 7 முதல் 10 வாரங்கள் ஆகும்.

மணல் நிறைந்த கடற்கரைகள், மணல்குன்றுகளில்தான் இந்த ஆமைகள் முட்டையிடும். தமிழகம் உள்பட இந்தியாவின் கடற்கரை முழுக்க சித்தாமை (Olive ridley) முட்டையிடுகிறது, குறிப்பாகச் சென்னையில் அதிக எண்ணிக்கையில் இந்த ஆமைகள் முட்டையிடவும் செய்கின்றன, இயந்திரப் படகுகளில் அடிபட்டுக் கரை ஒதுங்கவும் செய்கின்றன.

சித்தாமை (அ) பங்குனி ஆமை (Olive Ridley): இந்தியாவில் முட்டையிடும் ஆமைகளில் அளவில் சிறியது. அதிக எண்ணிக்கையில் நமது கடற்கரைகளுக்கு வந்து முட்டையிடுகிறது. இழுதுமீன், இறால், நண்டு, நத்தைகளை உண்ணும். 35 கிலோ எடையுடன் இருக்கும்.

பேராமை (Green Turtle): ஆலிவ் பச்சை - பழுப்பு நிறத்தில் இருக்கும். கடல்புற்கள், நீர்த்தாவரங்கள், கடல்பஞ்சுகளை உண்ணும்.

அழுங்கு ஆமை (Hawksbill Turtle): இதன் வாய்ப் பகுதி பருந்து அல்லது கழுகினுடையதைப் போலிருக்கும். பவளத்திட்டுகளில் வாழும் கடல்பஞ்சை உண்ணும். இதன் மேல் ஓடு மஞ்சள், பழுப்புப் பட்டைகளால் போர்த்தப்பட்டது. தலையும் கால்களும் பழுப்புத் திட்டுகளுடன் தங்க நிறத்தில் இருக்கும்.

பெருந்தலையாமை (Loggerhead): 75 முதல் 100 செ.மீ. நீளமுள்ள பெரிய தலையைக் கொண்டிருப்பதால் இந்த ஆமைகள் அந்தப் பெயரைப் பெற்றன. முன் துடுப்புகள் குட்டையாகவும், பின் துடுப்புகள் நீளமாகவும் இருக்கும்.

தோணியாமை (அ) ஏழு வரி ஆமை (Leatherback Turtle): உலகின் மிகப் பெரிய கடலாமை. அதிகபட்சம் 900 கிலோ எடைவரை இருக்கலாம். மேல்ஓடு கடினமாக இல்லாமல் கடினமடைந்த தோலைக் கொண்டிருக்கும். அதில் ஏழு வரிகள் இருக்கும். அதனால்தான் அந்தப் பெயரும் ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in