

‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ - ‘மின்னும் மின்னும் விண்மீனே’ என்று பொருள் தரும் இந்த மழலையர் பாடலை நம்மில் பலரும் அறிந்திருப்போம். உயரே மின்னும் விண்மீனைக் குறித்து வியக்கிறது இப்பாடல். அவை எவ்வளவு உயரத்தில் மின்னுகின்றன?
நம் கண்ணுக்குத் தெரியும் விண்மீன்களில் ஆகத் தொலைவிலுள்ள ஒரு விண்மீனின் ஒளி, ஏறத்தாழ 800 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அதிலிருந்து புறப்பட்டுவிட்டதாம். ஞாயிறிலிருந்து கதிரொளி நம்மை வந்தடைய 8 நிமிடங்களே ஆகும் என்பதோடு இதை ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம். ஆனாலும் இந்த எட்டுக்கும் அந்த எண்ணூறு கோடிக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.
விண்மீன்கள் பல தொகுப்புகளாக உள்ளன. அவை உடுமண்டலம் எனப்படுகின்றன. நட்சத்திரம் என்பதன் தமிழ்ப் பெயர் உடு. நமது புடவியில் பத்தாயிரம் கோடி உடுமண்டலங்கள் உள்ளன என்று மதிப்பிடப்படுகிறது. ஒவ்வோர் உடுமண்டலத்திலும் தோராயமாகப் பத்தாயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன. நம் உடுமண்டலத்தின் பெயர் ‘பால் வீதி’. நம் பார்வைக்குப் புலனாகும் அத்தனை விண்மீன்களும் பால்வீதியின் விண்மீன்களே. ஆனாலும் ஏறக்குறைய ஆறாயிரம் விண்மீன்களே நம் கண்களுக்குப் புலனாகின்றன.
எந்தவொரு விண்மீனும் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி இல்லை. மனிதரைப் போலவே அவையும் பிறந்து வாழ்ந்து மடிகின்றன. வளியும் தூசுகளும் நிறைந்த விண்முகிலில்தான் அவை பிறக்கின்றன. அம்முகில் ‘நெபுலா’ என்று அழைக்கப்படுகிறது. ஆகவே, ‘நெபுலா’ என்கிற விண்முகில்களே விண்மீன்களின் கருப்பை.
விண்மீன் துண்டங்கள்
சரி, விண்மீன்களைப் பற்றி எதற்கு இவ்வளவு விரிவான கதை? காரணம் இருக்கிறது. நம் பால்வீதி மண்டலம் ஓர் உயிர்மண்டலம். அதில் ஆண்டுக்கு ஆறேழு விண் மீன்கள் பிறக் கின்றன. அப்படிப் பிறந்த ஒரு விண்மீன்தான் நமது ஞாயிறு. அதிலிருந்தே அனைத்துக் கோள்களும் உருவாயின. அவ்வகையில் கோள்கள் அனைத்தும் விண்மீன் துண்டங் களே. அதாவது, கோள்கள் அனைத்திலும் விண்மீனின் தனிமங்கள் உள்ளன.
நம் புவிக்கோளமும் விண்மீனின் தனிமங்களைக் கொண்டுள்ளது. அதுபோல, புவியின் ஒரு பகுதியாக உள்ள உயிரினங்கள் அனைத்தும் அத்தனிமங்களைத் தம் உடல்களில் கொண்டுள்ளன. ஆம், நம் உடலிலுள்ள அணுக்கள் அனைத்தும் விண்மீனி லிருந்து தோன்றியவையே. நாம் அனைவரும் விண்மீனின் துகள் களே - புவியில் வாழும் ‘லிட்டில் ஸ்டார்’கள்.
மனித உடலின் பகுதியாக உள்ள ஒவ்வோர் அணுவும் பல விண்மீன்களைக் கடந்து வந்தவை. அதனால்தான், விண்மீன் குறித்து இவ்வளவு விரிவாகப் பேச வேண்டியதாயிற்று. இதே விண்மீனின் துகள் இங்கே பிறக்காமல் புடவியின் வேறொரு பகுதியில் பிறந்திருந்தால் அது உயிரற்ற அஃறிணைப் பொருளாக இருந்திருக்கும் வாய்ப்பே அதிகம். அப்படிப் பிறந்திருந்தாலும் நல்லதுதான். அது சாதி, மதம், இனம் என்று சண்டையிட்டுக் கொண்டிருக்காது.
நாம் எங்கே இருக்கிறோம்?
ஒரு கண்ணாடிக் குடுவையில் வைக்கோலையும் தண்ணீரையும் கலந்து வைத்து அதில் வளர்ந்த புரோட்டோசோவாவை சில துளிகள் ஊற்றினால், சில நாட்களில் குடுவை முழுவதும் புதிய உயிர்கள் நிறைந்துவிடும். அதுபோல ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட அறுபது தனிமங்கள் நிறைந்த மனித உடல் என்னும் குடுவையில் ஆக்சிஜனை மட்டும் இயற்கை ஊற்றாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
கோள்களில் புவிக்கோளமே உயிர்க் கோளம், அக்கோளின் உயிரினங்களில் மனிதர்களே உயர்ந்தவர்கள். எனவே, நாமே இக்கோளின் உரிமையாளர். விருப்பத்துக்கு ஆட்டம் போடலாம் என்பதுதான் நம் நோக்கம் எனில், அதற்கும் ஓர் ஆபத்தை வைத்திருக்கிறது இயற்கை.
நாம் நினைப்பது போல ஞாயிறு மண்டலத்தில் எந்தவொரு கோளும் வெட்டி யாகச் சுழன்று கொண்டிருக்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் சில கடமைகளை வைத்திருக்கிறது இயற்கை. குறிப்பாக, வியாழன் மாபெரும் ஈர்ப்பு விசையுடைய கோள் என்பதால் வெற்றிடங்களைத் தூய்மைசெய்யும் பணியைச் செய்கிறது. புவியைத் தாக்க வரும் சிறுகோள்களை இடையிலேயே தடுத்துத் தன்னிடத்தில் அது ஈர்த்துக்கொள்கிறது. அப்படியாக, அழிவு தரும் மோதல்களிலிருந்து புவியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. வியாழன் தன் பணியை நிறுத்தினால் புவிக்கோளின் முதலாளிகளாகத் தங்களைக் கருதிக்கொண்டிருக்கும் மனிதர்களான நம்முடைய கதி என்னவாகும்?
இப்படி இயற்கையின் சதுரங்க ஆட்டத்தில் நமக்குப் புரியாத ஏராளமான ‘முற்றுகைத் தாக்குதல் நிலை’கள் உள்ளன. அதனால்தான் அறிஞர் இ.எஃப். சூ மாக்கர் இப்படிக் கூறுவார்: “ஒரு செய்தி உங்களுக்குப் புரிகிறது என்றால், நீங்கள் அதில் பங்கு வகிக்கிறீர்கள். புரியவில்லை என்றால், அதிலிருந்து நீங்கள் பிரிந்து நிற்கிறீர்கள்”
நாம், இயற்கையில் பங்கு வகிக்கிறோமா அல்லது பிரிந்து நிற்கிறோமா?
(அடுத்த வாரம்: ஞாயிறும் திங்களும்... பின்னே மனிதரும்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com